Advertisement

Main Ad

தமிழ்நாட்டில் கன மழைக்கு 30 பேர் பலி

தமிழகத்தில் இரு நாட்களுக்கு முன்பு பெய்த மழையின் காரணமாக, கடலூர் மாவட்டம் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது.
Image captionகடலூரில் கன மழை
அங்கு குறைந்தது 27 பேர் உயிரிழந்திருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் தற்போது வடகிழக்குப் பருவமழை பெய்துவரும் நிலையில், கடந்த 8ஆம் தேதி முதல் கடும் மழை பெய்து வருகிறது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, வடகிழக்குப் பருவமழையின் மூலமே பெரும் மழையைப் பெற்றுவருகிறது. அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான இந்த காலகட்டத்தில் தமிழகத்தில் சுமார் 440 மில்லி மீட்டர் வரை மழை பெய்வது வழக்கம்.
ஆனால், சமீபத்தில் வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு நிலையில் காரணமாக, 300 மில்லி மீட்டர் மழை பெய்ததாக தமிழக அரசு கூறியுள்ளது. குறிப்பாக கடலூர் மாவட்டத்தில் 500 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

மின் கம்பங்கள் சரிவு, மின்சாரம் நிறுத்தம்

இதன் காரணமாக கடலூர் மாவட்டத்தின் பெரும் பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. நெய்வேலி நிலக்கரி சுரங்கங்களுக்குள் மழை நீர் புகுந்திருப்பதால் மின் உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது. அந்த சுரங்கங்களிலிருக்கும் நீரை வெளியேற்றும் பணிகள் தற்போது நடந்துவருகிறன.
மழை கடுமையாகப் பெய்த ஞாயிறு, திங்கட்கிழமைகளில் விபத்துக்களைத் தடுப்பதற்காக கடலூர் மாவட்டத்தில் மின் வாரியம் மின்சார விநியோகத்தை நிறுத்திவைத்திருந்தது.
தற்போது படிப்படியாக மின் விநியோகம் சரிசெய்யப்பட்டுவருகிறது. இந்த மழையின் காரணமாக 2,000 மின் கம்பங்கள் மாவட்டம் முழுவதும் கீழே விழுந்துள்ளன. அவற்றைச் சரிசெய்வதற்காக வெளிமாவட்டங்களில் இருந்து மின்வாரிய ஊழியர்களும் வரவழைக்கப்பட்டிருக்கின்றனர்.
இந்த மழையின் காரணமாக கடலூர் மாவட்டத்தில் மட்டும் 27 பேர் உயிரிழந்திருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருவரும், திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒருவரும் இறந்திருக்கின்றனர்.
அந்த மாவட்டத்தில் தாழ்வான பகுதிகளில் வசித்த 29000 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

மீன்பிடி படகுகள் அடித்து செல்லப்பட்டன

கடுமையான மழையின் காரணமாக கடந்த எட்டாம் தேதியன்று துண்டிக்கப்பட்ட கடலூர் - சிதம்பரம் சாலை தற்போது பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.
தேவனாம்பட்டினம் பகுதியில் கெடிலம் நதியில் நிறுத்தப்பட்டிருந்த சுமார் 100 மீன்பிடிப் படகுகள் மழையின்போது கடலுக்குள் அடித்துச்செல்லப்பட்டன. இவற்றில் 40 படகுகள் மீட்கப்பட்டிருப்பதாக தமிழ்நாடு அரசு கூறியுள்ளது.
2011ஆம் ஆண்டின் இறுதியில் கடலூரைத் தாக்கிய 'தானே' புயலின்போது, அம்மாவட்டத்தில் இருந்த பெரும்பாலான முந்திரி மரங்கள் நாசமாயின. தற்போது மீண்டும் அதே பகுதியில் கடும் மழை பெய்திருப்பதால் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் பயிரிடப்பட்டிருந்த வாழை உள்ளிட்ட பயிர்கள் கடுமையாகச் சேதமடைந்துள்ளன.
கடலூர் மாவட்டத்தில் வெள்ளத்தின் காரணமாக நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.
சேலம் மாவட்டத்திலும் கடும் மழை பெய்துவருவதால் ஏற்காட்டில் நிலச்சரிவு ஏற்பட்டிருக்கிறது. இதனால், அங்கு சுற்றுலாப் பயணிகள் செல்வதற்குத் தடைவிதிக்கப்பட்டிருக்கிறது.
இதற்கிடையில், கேரளா அருகே நீடிக்கும் மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் அனேக இடங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் மழை நிவாரணப் பணிகள் சரியாக நடைபெறவில்லையென தி.மு.க., காங்கிரஸ், தே.மு.தி.க., பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குறைகூறியுள்ளன.