Advertisement

Main Ad

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்கு ரவூப் ஹக்கீம் தலைமையில் விசேட கூட்டம்


(பிறவ்ஸ்)

சீரற்ற காலநிலையால் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவது தொடர்பில் ஆராயும் விசேட கூட்டமொன்று இன்று வெள்ளிக்கிழமை (26) மாலை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமின் இல்லத்தில் நடைபெற்றது.

நாட்டின் பல பாகங்களிலும் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் பற்றி இங்கு கலந்துரையாடப்பட்டது. குறிப்பாக, தென் பகுதியில் வெள்ளம் மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக உதவும் வகையில் மேற்கொள்ளவேண்டிய வேலைத்திட்டங்கள் தொடர்பாக இங்கு ஆராயப்பட்டன.

இதன் முதற்கட்டமாக நாளை சனிக்கிழமை (27) மற்றும் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை (28) ஆகிய தினங்களில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையிலான உயர்மட்டக் குழுவொன்று களுத்துறை, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்ட செயலகங்களில் நடைபெறும் அனர்த்த நிவாரண கூட்டங்களை நடாத்தவுள்ளது. 

இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், அமைச்சின் உயரதிகாரிகள், நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை உயரதிகாரிகள், மாவட்ட செயலாளர், பிரதேச செயலாளர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்துகொள்ளவுள்ளனர்.

இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கு அத்தியவசியப் பொருட்கள் வழங்குதல் மற்றும் சிரமதானப் பணிகளை மேற்கொள்வதற்கும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது. நாளை நடைபெறவுள்ள கூட்டங்களின்போது பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் தேவைப்படும் பொருட்கள் தொடர்பில் பிரதேச செயலாளர்கள் ஊடாக விசேட அறிக்கையொன்று தயாரிக்கப்படவுள்ளது. 

நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை மூலம் பாதிக்கப்பட்ட இடங்களில் மீட்புப்பணி மற்றும் துப்பரவேற்பாட்டு பணிகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைளை ஆரம்பிக்குமாறு அமைச்சர் ரவூப் ஹக்கீம் நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் தலைவர்களுக்கு பணிப்புரை விடுத்தார். இப்பணிக்குத் தேவையான கனரக வாகனங்களை பெற்றுக்கொள்வது தொடர்பாகவும் இங்கு ஆராயப்பட்டது.

இதேவேளை, களுத்துறை மாவட்டத்திலுள்ள வியாங்கல்லை பகுதியில் வெள்ளத்தில் சிக்குண்டவர்களை மீட்பதற்காக, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சியுடன் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தொடர்புகொண்டு அங்கு கடற்படை அதிகாரிகளுடன் படகுகளை அனுப்பிவைப்பதற்கான நடவடிக்கைளை மேற்கொண்டார்.

இந்த விசேட கலந்துரையாடலில் மேல் மாகாணசபை உறுப்பினர் அர்ஷாத் நிஸாம்தீன், நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் தலைவர் கே.ஏ. அன்ஸார், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய அமைப்பாளரும் நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பிரதி தலைவருமான ஷபீக் ரஜாப்தீன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் மன்சூர் ஏ. காதிர் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

Post a Comment

0 Comments