இக்கட்டுரை 2007 ம் ஆண்டு
மார்ச் மாதம் எங்கள் தேசம் பத்திரிகையில் முஹம்மத் துதாயேவ் என்பவரால்
எழுதப்பட்ட கட்டுரையை தழுவி சிற்சில மாற்றங்களோடு புத்தளம் ஒன்லைன்
வாசகர்களுக்கு தருகின்றேன்.
புத்தளம்
பெரிய பள்ளியில் 1976.02.02 ம் திகதி இடம்பெற்ற இக்கோரச் சம்பவம் பற்றி
அறிந்தவர்கள் அதனோடு சம்பந்தப்பட்டவர்கள் இருப்பின் தகவல்களை தர முடியும்.
புத்தளம் வரலாற்றில் இது போன்ற சம்பவம் இதற்கு முன்பும் நடைபெற்றதுமில்லை.
அல்லாஹ்வின் உதவியால் இதுவரையும் நடைபெறவுமில்லை. இச்சம்பவத்தை எம் இளைய
சமூகம் தெரிந்திருப்பது அவசியமாகும்.
உமர் ரழியல்லாஹ் அவர்கள் கூறும் போது:
“ஒரு சமூகம் தம் கடந்த கால வரலாற்றை தெரிந்திருக்காவிடின் அச்சமூகம் ஒரு போதும் முன்னேறாது”என்று குறிப்பிட்டுள்ளார்கள்
“ஒரு சமூகம் தம் கடந்த கால வரலாற்றை தெரிந்திருக்காவிடின் அச்சமூகம் ஒரு போதும் முன்னேறாது”என்று குறிப்பிட்டுள்ளார்கள்
1976 ம் ஆண்டு பெப்ரவரி மாதம் இரண்டாம் திகதி
சீருடை அணியாமல் வந்த துப்பாக்கி ஏந்திய பொலிசார் மன்னார் வீதியிலுள்ள
ஜின்னா ஸ்டோர்ஸ் மல்ஹாஸ் என்பவற்றின் மீது சுட்டுக் கொண்டே வருகின்றனர்.
இன்னொரு பக்கத்தில் புத்தளம் சிறுகடலுக்கு பின்புறமாக அமைந்துள்ள பெரிய
பள்ளிவாசலை நோக்கி இன்னொரு பொலிஸ் கும்பல் முன்னேறிக் கொண்டிருக்கின்றது.
ஒரு மாபெரும் பாதகத்தை செய்வதற்கு பொலிஸாருக்கு இருந்த ஒரே காரணம் –
புத்தளம் நகரம் முஸ்லிம்களை அதிகமாகக் கொண்டது என்பதுதான். அப்பாவிகளான
ஒன்பது முஸ்லிம்கள் சுட்டுக்கொள்ளப்பட்டது மட்டுமன்றி கோடிக்கணக்கான
மதிப்புள்ள சொத்துக்களும் பொலிசார் மற்றும் சிங்கள இனவாதிகளால்
சேதமாக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டு முஸ்லிம்களின் பொருளாதாரம் வேரோடு
வெட்டிச் சாய்க்கப்பட்டது.
1976
ம் ஆண்டின் பொலிஸ் படுகொலைகள் தற்செயலாகவோ திடீரென ஏற்பட்டதோ அல்ல.அன்றைய
ஆட்சியின் உயர்பீடத்தின் அங்கீகாரத்துடன் திட்டமிடப்பட்டு
ஏற்படுத்தப்பட்டதாகும். இதற்குச் சிறந்த ஆதாரங்களை சுட்டிக்காட்ட வேண்டிய
அதே நேரம் அன்றைய முஸ்லிம் தலைமைத்துவங்களின் கையாலாகாத்தனத்தையும் இங்கு
நினைவுக்கூற முடியும். ஏனெனில் திட்டமிட்டுச் செய்யப்படும் அக்கிரமம் அதை
தடுக்க சக்தியில்லாத எமது அன்றைய தலைமைத்துவங்கள். எப்பாடுபட்டாவது
புத்தளத்தில் ஒரு கலவரத்தை உண்டாக்க வேண்டும் என்பதில் இனவெறி தலைக்கேறிய
மூவரைக் கொண்ட அணியொன்றே இந்தச் செயலைக் தூண்டிவிட்டது. இதில் 1976 ல்
உதவிப் பொலிஸ் அதிகாரியாக ( எஸ்.ஐ.) இருந்த டிமெல், கோலித்த தேரோ, 1976 ம்
ஆண்டின் தொகுதி நிர்ணய சபை உறுப்பினர் கலாநிதி ஜே.ஆர் ஜெயசூர்ய ஆகியோரே
1976 வன்முறையின் சூத்திரதாரிகள் என குற்றம்சாட்டப்படுகின்றது. அவ்வாண்டு
ஜனவரியில் நடைபெற்ற தொகுதி நிர்ணய கூட்டத்தில் கலாநிதி ஜெயசூர்ய சிங்கள
மகளிருடன் இணைத்து முஸ்லிம்கள் பற்றி ஆற்றிய உரை படுமோசமானது. அவரது
தூண்டுதல் உரை வருமாறு:
“உண்மையில் முஸ்லிம்கள் சம்பந்தப்பட்டவரையில் விடயம் எதிர் மறையானதாகும் . சிங்களவர்கள் முஸ்லிம்களால் அங்கிருந்து படிப்படியாக அகற்றப்படுகின்றார்கள் உதாரணமாக புத்தளத்தை எடுத்துக் கொள்ளுங்கள் முஸ்லிம்கள் மூன்று அல்லது நான்கு சிங்கள பெண்களை மணம் செய்வதன் மூலம் சிங்கள இனத்திற்கு எதிரான ஒரு புதுவிதமான இனக் கொலையை செய்கிறார்கள்.” டெய்லி நியுஸ் 23.01.1976)
“உண்மையில் முஸ்லிம்கள் சம்பந்தப்பட்டவரையில் விடயம் எதிர் மறையானதாகும் . சிங்களவர்கள் முஸ்லிம்களால் அங்கிருந்து படிப்படியாக அகற்றப்படுகின்றார்கள் உதாரணமாக புத்தளத்தை எடுத்துக் கொள்ளுங்கள் முஸ்லிம்கள் மூன்று அல்லது நான்கு சிங்கள பெண்களை மணம் செய்வதன் மூலம் சிங்கள இனத்திற்கு எதிரான ஒரு புதுவிதமான இனக் கொலையை செய்கிறார்கள்.” டெய்லி நியுஸ் 23.01.1976)
தன் சமூகப் பெண்களை
முஸ்லிம்களுடன் சம்பந்தப்படுத்தி பேசுவதன் மூலம் அப்பாவி சிங்களவர்களை
உசுப்பேற்றிவிட கலாநிதிக்கு அதைவிடவும் கேவலமாகப் பேச வார்த்தைகள்
தேவையில்லை. இவரின் இந்தப் பேச்சின் பின்னர் பெப்ரவரி 02 புத்தளம்
படுகொலைகளுக்கான நிகழ்ச்சி நிரலின் கடைசி அங்கமாகும். இந்த இடத்தில் இதற்கு
முன்னர் இடம்பெற்ற சம்பவங்களின் கோர்வைகளையும் இங்கு சுட்டிக்காட்ட
வேண்டிய தேவை எழுகின்றது. உண்மையில் 1976 ம் ஆண்டின் பொலிஸ் கோர
தாண்டவத்தின் ஆரம்பம் 1974 ம் ஆண்டே உருவாக்கப்பட்டுவிட்டது.
- மைலங்குள ஆதிக்கம் – 1974
இக்காலப்பகுதியில் வட்டக்கண்டல்
மற்றும் புத்தளத்தில் முஸ்லிம்கள் இணைந்து இப்பகுதியில் இருந்த மைலங்குள
அரசாங்கக் காணியை சுமார் 50 ஏக்கர் ஆளுக்கு 2 ஏக்கராக பிரித்து
எடுத்துக்கொண்டனர். காடு வெட்டப்பட்டு பயிர்ச் செய்கை நிலமாகியதைக் கண்ட அன்றைய உதவி அரசாங்க அதிபர் திரு கோபாலரட்னம் இக்காணிகளுக்கு “போர்மிட்”
வழங்கினார். இப்பயிர் செய்கைக் காணிகளுக்கு நீர் வழங்கும் முகமாக
நீர்பாசனத் திணைக்களம் தப்போவைக் குளத்தில் இருந்து கால்வாய்களை அமைத்துக்
கொடுத்தது. இதனை அடுத்து முஸ்லிம்கள் இக்காணியில் ‘எள்ளு’ பயிர் செய்கையை
அமோகமாக மேற்கொண்டனர். இந்த சந்தர்ப்பத்தில்தான்
பெரும்பான்மைச் சிங்களவர்கள் சில அதிகாரிகளால் தூண்டப்பட்டனர். இதனை
அடுத்து சிங்கள மக்களிடையே பொறாமை தீப்பற்றி எரிந்தது. முஸ்லிம்களின்
இக்காணிகளுக்கு வேட்டுவைக்கும் திட்டமும் உருவாக்கப்பட்டது.
ஒரு நாள் காலை தமது காணிகளுக்கு
வந்த முஸ்லிம்களுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. முஸ்லிம்களின் அனைத்துக்
காணிகளிலும் புதிது புதிதாய் குடிசைகள் முளைத்திருந்த அதே நேரம் அவை
அனைத்திலும் எங்கிருந்தோ கொண்டுவரப்பட்ட புதிய சிங்கள முகங்கள் காணப்பட்டன.
இதுபற்றி முஸ்லிம்கள் வாக்குவாதப்பட்டபோது இப்படி ஒரு பதில் கிடைத்தது. “மாவட்ட
காணி அதிகாரியாக இருக்கும் திரு.குணரட்ணமும் கச்சேரி நிள அளவையாளர்
திரு.மாக்ஸ் சொய்சாவும்தான் எங்களை இங்கு இருக்கச் செய்தார்கள். உங்களால்
முடிந்ததை பார்த்துக் கொள்ளுங்கள்.”
எப்படியாவது தமது காணிகளைத்
திரும்பப் பெற முஸ்லிம்கள் எடுத்த அனைத்து முயற்சிகளும் வீணாகின.
துவேஷத்தின் கோர முகத்தின் முன் அவர்களால் எதனையும் செய்ய முடியவில்லை.
கடைசியில் 1974 ம் ஆண்டு ஜூலை 27 ஆம் திகதி அக்குடிசைகள் அனைத்தும்
இனந்தெரியாதோரால் தீவைத்து அழிக்கப்பட்டன. இது தொடர்பாக மூன்று முஸ்லிம்கள்
கைது செய்யப்பட்டு வழக்கும் தொடரப்பட்டது.
- 1975 நோன்பு நேரத்தில் பொலிஸ் தாக்குதல்
1975 ம் ஆண்டு ரமழான் இரவில்
புத்தளம் பெரிய பள்ளிவாசலை அண்டிய வீதிகளில் கிளித்தட்டு விளையாடிய சில
இளைஞர்கள் அப்பகுதியில் வசித்துவந்த பொலிஸாருக்கு உணவு வழங்கும் இளைஞன்
மீது தவறுதலாக மோதியுள்ளனர். இதனை ஊதிப் பெரிதாக்கிய புத்தளம் பொலிஸார்
சம்பவம் நடந்த இடத்துக்கு வந்து இங்கு விளையாடிய இளைஞர்களை மிகக் கடுமையாக
தாக்கினர். தமது உயிருக்கு அஞ்சி பள்ளிவாயலுக்குள் ஓடிய பல இளைஞர்கள்
பள்ளிவாயலுக்குள் புகுந்த பொலிஸாரால் இழுத்துவரப்பட்டு தாக்கப்பட்டனர்.
இதுபற்றி முறையிடச் சென்றவர்களின் முறைப்பாட்டையும் புத்தளம் பொலிஸார்
கண்டு கொள்ளவில்லை.
- பஸ் நிலைய இடமாற்றம்
இப்போதைய பஸ் நிலையத்தை
எப்படியாவது (அப்போது புத்தளம் பஸ் நிலையம் இப்போதைய சொப்பிங் கொம்ளக்கஸில்
அமைந்திருந்தது) ரயில் நிலைய பக்கம் மாற்றப்பட வேண்டும் என்ற கடும்
முயற்சியில் இறங்கியவர்கள் கோலித தேரோ, உதவி பொலிஸ் அதிகாரி டிமெல்
அப்போதைய அரச அதிபர் ராஜபக்ஸ போன்றவர்கள் ஆவர். 1976 ம் ஆண்டில்
புத்தளத்தில் நடந்த படுகொலையில் இந்த பஸ் நிலைய மாற்றமும் முக்கிய பங்கு
வகித்தது. ஏனெனில் இந்த பஸ் நிலையத்தை அண்டியே முஸ்லிம்களின் பொருளாதார
நிலையங்கள் அமைந்திருந்தன.
இந்தக் கொலைக் கூட்டணி அதற்கான
தருணத்தை எதிர்பார்த்திருந்தது. 1976.01.04 ஆம் திகதி இளைஞர்
எம்.எச்.எம்.ரியாஸ் என்பவருக்கும் இ.போ.ச பஸ் நடத்துனர் ஒருவருக்கும்
இடையில் நடந்த சிறிய சண்டை இப்பாவிகளுக்கு கலவரத்தைத் தூண்ட மிகவும்
வசதியாக போய்விட்டது. இதனை காரணமாக வைத்து அப்போதைய அரச அதிபர் ராஜபக்ஸ
தற்போது பஸ் நிலையம் அமைந்திருக்கும் இடத்திற்கு உடனடியாக இடம்மாற்றினார்.
முஸ்லிம்களின் பொருளாதாரத்திற்கு முதல் அடியும் விழுந்தது.
- தீக்கரையான பஸ்:
பஸ் நிலைய இடமாற்றத்தால் மிகவும்
மன வேதனைக்குள்ளாகினர்.குறிப்பாக சிறிய வியாபாரிகளுக்கு இதன் பாதிப்பு
மிகக் கடுமையானதாக காணப்பட்டது.
14.01.1976 ம் ஆண்டு புத்தளம்
வாய்க்கால் சந்தியில் வைத்து முகமூடி அணிந்த சிலரால் கரைத்தீவு பஸ்ஸ˜க்கு
தீவைக்கப்பட்டது. பிரயாணிகளுக்கு எவ்வித பாதிப்பு ஏற்படாவிட்டாலும் இது
யாரால் செய்யப்பட்ட திட்டமிடப்பட்ட செயல் என இது வரையும் தகவல்கள்
கிடைக்கப்பெறவில்லை.
- புத்தளம் பெரிய பள்ளியின் அறிவித்தல் அகற்றப்பட்டமை (வாகனங்கள் நிறுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளது)
இத்தீவைப்பு சம்பவத்தால் கோபமுற்ற
உதவிப் பொலிஸ் அதிகாரி டிமெல் பொது இடமொன்றில் வைத்து இப்படிக் கூறினார்:
ஜும்ஆ தொழுகையின் போது அவ்வழியால் செல்வதுடன் முஸ்லிம்களையும் சுழல்
துப்பாக்கியால் சுடுவேன். அவர் அவ்வாறு கூறியதற்கு காரணம் இருந்தது.அந்த
நாட்களில் புத்தளம் பெரிய பள்ளிவாசல் ஜும்ஆ தொழுகையின் பள்ளிவாசலின் இரு
பக்கமும் வாகனத் தடை அறிவித்தல் பலகை வைக்கப்படுவது வழக்கம். இதுபற்றியே
டிமெல் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இதனால் அச்சமுற்ற முஸ்லிம்
பிரமுகர்கள் சிலர் புத்தளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் முறைப்பாடு
செய்ததன் பலனாக இரு பொலிஸார் அங்கு காவலுக்கு நிறுத்தப்பட்டனர். ஆனால்
30.01.1976 ம் திகதி வெள்ளிக்கிழமை இந்த காவல் Master Plane
என்பதை நிரூபித்தது. ஜும்ஆ தொழுகை ஆரம்பமான சில நிமிடங்களில் இரண்டு
பொலிஸ் ஜீப்புகள் அவ்விடத்திற்கு வந்தன. அங்கு வந்த டிமெல் அறிவித்தல்
பலகையை உடைத்தெரிந்துவிட்டு முஸ்லிம்களைப் படு மோசமாக திட்டிவிட்டுச் சென்றார். இதனால் ஆத்திரமடைந்த முஸ்லிம்
பிரமுகர்கள் டாக்டர்.ஐ. இல்யாஸ் அப்போதைய நகர பிதா எம்.ஐ.இபுனு
ஆகியோர்களின் தலைமையில் புத்தளம் உதவி பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்திற்கு
சென்று முறையிட்டனர். அம்முறைப்பாட்டை ஏற்றுக்கொண்ட அன்றைய பொலிஸ்
அத்தியட்சகர் திரு. ஜயந்த விக்ரமரட்ண பொலிஸ் நிலைய பொலிஸ் நிலைய
பொறுப்பதிகாரி திரு எட்வாட் ஆகியோர் இதுபற்றி விசாரித்து நீதி வழங்குவதாக
உறுதியளித்தனர். இம்முறைப்பாட்டுக்குப் பின்னர் பொலிஸ் நிலையத்தில் இருந்து
வெளியாகிய நகர பிதா இபுனு அவர்களைப் பார்த்து “மரக்கலயா தம்பியா” என்று
கேலி செய்ததாக அவர்குறிப்பிட்டுள்ளார்.
மறுநாள் நடந்த நீதி விசாரணையில்
அப்போதைய பாராளுமன்ற உறுப்பினர் மர்ஹூம் எம்.எச்.எம்.நைய்னா மரிக்கார்
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அமைப்பாளர் மர்ஹூம் .ஏ.ஏ.லத்தீப் நகர பிதா
மர்ஹூம் எம்.ஐ.இபுனு டாக்டர் ஐ.இல்யாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். விசாரணை
முடிவில் உதவி இன்ஸ்பெக்டர் டிமெல் உட்பட பலர் குற்றவாளிகளாக காணப்பட்டு
அவர்களை உடனடியாக இடமாற்றம் செய்வதாக உறுதிமொழி அளிக்கப்பட்டது.
புத்தளம் பொலிஸின் மிகப் பெரிய
அதிகாரியின் உறுதிமொழியால் அமைதியுற்ற மேற்படி புத்தளம் தலைவர்கள்
நிம்மதியாக வீடு சென்றனர். இது நடைபெற்றது 1976 ஜனவரி 31 ம் திகதியாகும்.
ஆனால் இந்த நீதிக்காக பல உயிர்களை
உடமைகளை இழக்கப் போகின்றோம் என்பது புத்தளம் முஸ்லிம் தலைவர்களுக்கோ
அல்லது புத்தளம் மக்களுக்கோ தெரியாமல் போய்விட்டது. இந்நேரம் இத்தீர்மானம்
பற்றி கேள்விப்பட்ட கோலித தேரர் சிங்கள மக்களை அழைத்து பின்வருமாறு மிகப்
பயங்கரமான வதந்திளை பரப்பிவிட்டார்:
“புத்தளத்திலே
ஆனந்தா மகா வித்தியாலயத்தில் சிங்கள பெண் பிள்ளைகளை வெட்டி கொன்று
விட்டார்கள். பெண்களின் மார்பகங்களை அரிந்துவிட்டார்கள்.இக்கொடுமைளை
பார்த்து நீங்கள் சும்மா இருக்கின்றீர்களா?
- 1976 கொலை தீவைப்பு தாக்குதல்
• மேற்படி தீர்ப்பை அடுத்து
புத்தளம் சீமெந்துத் தொழிற்சாலையில் பணியாற்றிய முஸ்லிம் ஊழியர்கள் சிங்கள
ஊழியர்களால் தாக்கப்பட்டனர்.
• சீமெந்துத் தொழிற்சாலைக்கு
அண்மையில் இருந்த ஜனாப் அஹ்மத் நெய்னா மரிக்கார் என்பவருக்கு செந்தமான
சுமார் 50 ஆயிரம் ரூபா பெறுமதியான கடை கொள்ளையடிக்கப்பட்டு தீவைத்து
கொழுத்தப்பட்டது. 11 பிள்ளைகளை கொண்ட அஹ்மது நெய்னா மரிக்காரின் குடும்பம்
அதன் பிறகு வாழ வழியில்லாமல் நிர்க்கதியாகினர்.
• இதுபற்றி புத்தளம் பொலிஸில்
முறையிடச் சென்ற அன்றைய பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம்.நெய்னா
மரிக்காரின் முறைப்பாட்டை பொலிஸ் அதிகாரி எட்வாட் ஏற்கவில்லை.அவர் இவ்வாறு
கூறினார்: எங்களிடம் ஜீப் இல்லை இப்போது எதுவும் செய்ய முடியாது.
என்றாராம்.
• இன்னொரு பக்கம் புத்தளம்
கொழும்பு வீதியில் காடையர்களோடு நின்ற கோலித தேரர் அவ்வழியால் வந்த
முஸ்லிம்களை தாக்குவதற்கு உத்தரவு பிறப்பித்துக்கொண்டிருந்தாக
சம்பவத்துடன் தொடர்புபட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.கல்பிட்டி, மதுரங்குளி,
பாலாவி மக்கள் தாம் எதற்காக தாக்கப்படுகின்றோம் என்று அறியவில்லை.
• அநுராதபுரம் வீதியில்
வந்துகொண்டிருந்த பஸ் வண்டிகள் டிப்போவுக்கு கொண்டுசெல்லப்பட்டு பஸ்ஸில்
இருந்த முஸ்லிம்கள் மட்டும் இறக்கப்பட்டு இரும்புக் கம்பிகளால்
தாக்கப்பட்டனர்.
• கோலித தேரர் தலைமையிலான
கும்பலின் தாக்குதலில் பல முக்கியஸ்தர்கள் படுகாயமடைந்தனர். அவர்களுள்
ஓய்வு பெற்ற ஆசிரியர் அல்ஹாஜ் அமீர், ஆசிரியர் ஜனாப் ஆப்தீன் ஆகியோர்
அவர்களுள் அடங்குவர்.
• காயமடைந்தவர்களால் புத்தளம்
வைத்தியசாலை நிரம்பி வழிந்தது. ஆங்கிருந்த வைத்தியர்களும் தாதியர்களும்
தமது சிரமங்களை புறந்தள்ளிவிட்டு காயமடைந்தவர்களுக்கு சிறப்பான
சேவையாற்றியமை குறிப்பிடத்தக்கது.
• முன்னாள் ஸ்ரீலங்கா சுதந்திர
கட்சியின் புத்தளம் தொகுதி அமைப்பாளர் அல்ஹாஜ் எம்.எச்.எம்.நவவிக்கு
சொந்தமான புத்தளம் குருநாகல் வீதியில் அமைந்திருந்த எண்ணெய் தொழிற்சாலை
அதற்கு அருகில் இருந்த ஜனாப் அனிபா மரிக்காருக்குச் சொந்தமான எண்ணெய் ஆலை
அன்றைய புத்தளம் உதவி பொலிஸ் அத்தியட்சகரின் வீட்டுக்கு பின்புறம்
இமைந்திருந்த கே.எம்.இபுறாகிமின் எண்ணெய் ஆலை தீக்கிரையாக்கப்பட்டன. ஜனாப்
சொந்தமான எண்ணெய் ஆலை தொடர்ந்து மூன்று நாட்கள் எரிந்தன. ஜனாப் அனிபா
மரிக்கார் அதிர்ச்சிக் காரணமாக சில நாட்களிலேயே இறைவனடி சேர்ந்தார்கள்.
• மூன்று பஸ் வண்டிகளில்
புறப்பட்ட இன்னொரு காடையர் கும்பல் புத்தளம் குருநாகல் வீதியில்
அமைந்திருந்த கல்லடி முதல் கொட்டுக்கச்சி வரையிலான முஸ்லிம் வீடுகளை தீ
வைத்து கொழுத்தியது.ஒன்பது பேரை பலி எடுத்த இச்சம்பவம் இராணுவ தலையீட்டுடன் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.
இச்சம்பவத்தில் சஹீத்தாக்கப்பட்டவர்களின் விபரங்கள்:
(இவர்களின் புகைப்படங்கள் இருப்பின் எமக்கு அனுப்பி வைக்க முடியும்)
1. முஹம்மது நயீம்:
1957 ல் பிறந்த இவர் புத்தளம் பெரிய பள்ளியின் மிஹ்ராப் அருகே நின்ற போது
புத்தளம் கடல் பக்கம் இருந்து ஜன்னல் ஊடாக பாய்ந்த குண்டு இவரது தோளை
துளைத்தது. இவரை வைத்தியசாலைக்கு ஏற்றிச் செல்லும் போது இடைமறித்த காடையர்
கும்பல் அவ்வாகனத்தையும் எரிக்க முற்பட்டது. எனினும் இராணும் அதனை தடுத்து
நிறுத்தி வைத்தியசாலைக்கு அனுப்பிவைத்தனர். எனினும் இரத்தப் பெருக்கினால்
அவர் வபாத்தானார்.
2. ஜனாப் அப்துல் கரீம்:
1951 ல் பிறந்த இவர் ஒரு மீன் வியாபரி ஆவார்.பொத்துவில் கிராமத்திலிருந்து
வரும் போது பஸ் வண்டி சீமெந்து தொழிற்சாலை பாதையில் திருப்பப்பட்டது.
அங்கு வழிமறிக்கப்பட்ட பஸ்ஸிலிருந்த அப்துல் கரீம் மோசமாக தாக்கப்பட்டு
துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்தார். மரண விசாரணையின் போது இவரது ஜனாஸாவின் சாம்பல் மட்டுமே கிடைத்தது.
3. ஜனாப் முஹம்மது அன்ஸார்: 1956 ம் ஆண்டு பிறந்தவர்.குளியாப்பிட்டியை சேர்ந்த இவர் அங்கு ஏற்பட்ட இன முறுகலைத் தொடர்ந்து புத்தளத்திற்கு
இடம்பெயர்ந்தார். கடலை வியாபாரம் செய்து வந்த இவர் பள்ளிக்கு அருகாமையில்
சென்று கொண்டிருந்த போது பொலிஸ் வாகனத்தைக் கண்டு பள்ளிக்குள் ஓடிய போது
பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி வபாத்தானார்.
4. ஜனாப் அஸன் கண்டு:
50 வயதான இவர் சிறாம்பியடியில் காவலாளியாக வேலை பார்த்துவந்தார். சிங்கள
காடையர்களின் தாக்குதலில் வபாத்தானார். மரண விசாரணையின் போது தலை கைகள்
வெட்டி அகற்றப்பட்ட எரிந்த முண்டம் மட்டுமே காணப்பட்டது.
5. ஜனாப் எம்.ஐ.அப்துல் கலீல்:
1950.02.02 ம் திகதி பிறந்தவர். வறுமையான குடும்பத்தில் பிறந்த இவர்
சிறுவயது முதலே பீடி சுற்றும் தொழில் செய்து தனது குடும்பத்தை பராமரித்து
வந்தார். அவரது 26 வது பிறந்த தினமான 2.2.1976 அன்றே பள்ளிவாசலில்
பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி வபாத்தானார்.
6. ஜனாப் அப்துல் ரஷீத்:1957 ம் ஆண்டு பிறந்தவர். சம்பவ தினம் துப்பாக்கி குண்டு தலையில் பாய்ந்து ஆபத்தான நிலையில் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு 1976.02.04 ம் திகதி வபாத்தானார்.
8. ஜனாப் முஹம்மது இஸ்மாயில் அமீர்:
1930 ல் பிறந்தவர்.வசதியான இவர் சொந்தமாக காரும் வைத்திருந்தார்.
பள்ளிக்குள் நுழைந்தவரது கையில் குண்டு துளைத்த போது பள்ளிக்குள் ஓட
முற்பட்டவரின் பிடரியின் துப்பாக்கி சூடு பட்டு மூளை சிதறி பள்ளிக்குள்
வீழ்ந்து வபாத்தானார்.
9. ஜனாப் செய்யது முஹம்மது:1957
ல் பிறந்தவர். கடையொன்றில் தொழிலாளியாக வேலை செய்து வந்தவர். பள்ளியில்
துப்பாக்கி சூடுபட்டு பொலிஸ் நிலையம் கொண்டு செல்லப்பட்டார். அங்கு
தாகத்தால் தண்ணீர் கேட்டும் வழங்கப்படாததால் அங்கு வைத்தே வபாத்தானார்.
இவர்கள் அனைவரினம் பாவங்களை அல்லாஹ் பிழைபொறுத்து மேலான சுவனத்தை வழங்குவானாக. இச்சம்பவத்தின்
போது உயிரிழந்தவர்களுக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் பல்வேறு உதவிகளை
செய்த அனைவரையும் அல்லாஹ் பொருந்திக்கொள்வானாக !!!
0 Comments