Advertisement

Main Ad

மக்கள் காங்கிரஸ் மைத்திரி பக்கம் தாவியதைத் தொடர்ந்து, மத்திய அரசில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை இழந்துள்ள அரசு,

( எஸ்.அஷ்ரப்கான் )


மக்கள் காங்கிரஸ் மைத்திரி பக்கம் தாவியதைத் தொடர்ந்து, மத்திய அரசில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை இழந்துள்ள அரசு, கிழக்கு மாகாண சபையிலும் ஆட்சியை இழக்கும் அபாயத்தையும் எதிர்நோக்கியுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் அம்பாரை  மாவட்ட பிரச்சாரச் செயலாளர் எஸ்.அப்துஸ் ஸலாம் தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தல் பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனாவை ஆதரித்து வெள்ளிக்கிழமை (26) சம்மாந்துறையில் இடம்பெற்ற கருத்தரங்கொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் தொடர்ந்தும் அங்கு உரையாற்றும்போது,

நாளுக்கு நாள் மைத்திரியின் பலம் அதிகரித்த வண்ணமே உள்ளது. நாட்டிலுள்ள சர்வாதிகார ஆட்சி முறையை இல்லாதொழித்து, இனவாதமற்ற எல்லா இன மக்களும் உண்மையான சுதந்திரத்தை பெற்றுக்கொள்ள வழியமைக்கும் வகையில் நாட்டில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் குறிக்கோளுக்காக பல்வேறு தரப்பினரும் இன்று பொது எதிரணிக்கு ஆதரவளிக்க தொடங்கியுள்ளனர்.

இதுவரை இடம்பெற்றுள்ள இருபக்க கட்சித்தாவலின் காரணமாக ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசின் பாராளுமன்ற ஆசனங்கள் 161இல் இருந்து 148ஆகக் குறைந்ததனால், அரசு மத்தியில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை இழந்துள்ளது.

அரசுடன் இருந்த அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் உள்ளிட்ட 15 பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிரணிக்குத் தாவியுள்ள அதேவேளை, எதிரணியில் இருந்த இரு பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசின் பக்கம் தாவியுள்ளனர்.

இதேவேளை, பொது எதிரணியில் இணைந்து கொண்ட முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீனுடன், அண்மையில் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரான முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எஸ்.எஸ்.எம். அமீர் அலியும், மாகாண சபையின் பிரதித் தவிசாளர் எஸ்.எம். சுபைரும் இணைந்து கொண்டுள்ளார்.

இது தவிர, மாகாண சபைமுதல்வாரன ஆளும் ஐக்கிய முன்னணி உறுப்பினர் பிரியந்த பத்திரனவும் எதிரணிக்குத் தாவியுள்ளார். இவர்களோடு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மாகாணசபை உறுப்பினரான சிப்லி பாறுக்கும் இணையும் போது, தற்போது, கிழக்கு மாகாண சபையில், ஆளும் தரப்பிலுள்ள 22 ஆசனங்கள் 18ஆகக் குறைவடையும். எதிரணியின் 15 ஆசனங்கள் 19ஆக உயரும். இந்நிலையில், கிழக்கில் அரசு ஆட்சியை இழக்கும் அபாயத்தை எதிர்நோக்கும்.

எனவே, இந்த ஆட்சியமைக்க இருக்கும் பொது எதிரணியின் பக்கம் ஒன்றுதிரண்டு தமிழ் பேசும் சமூகங்களும் பார்வையாளர்களாக இல்லாமல் வெற்றியின் பங்குதாரர்களாக மாற வேண்டும். என்றும் அங்கு குறிப்பிட்டார்