Advertisement

Main Ad

தென்ஆப்பிரிக்காவின் மூக்கை உடைத்து இந்திய அணி வெற்றியை பட்டாசு வெடித்து கொண்டாடியது


உலக கோப்பை கிரிக்கெட் சுவாரஸ்யத்துக்கு மத்தியில் சில தினங்களாக ரசிகர்களை வெகுவாக கவர்ந்த ஒரு விஷயம், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் ஒளிபரப்பி வரும் வித்தியாசமான அந்த விளம்பரம் தான்.

‘‘இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் வீட்டில் டி.வி. பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அப்போது காலிங் பெல் சத்தம் கேட்க, இந்திய ரசிகர் ஒருவர் வெளியே வருகிறார். அங்கு தென்ஆப்பிரிக்க ரசிகர்கள் இருவர் ஒரு பாக்ஸ் நிறைய பட்டாசு மற்றும் மத்தாப்புகளுடன் நிற்கிறார்கள். இந்திய ரசிகரிடம் அதை கொடுத்து விட்டு ‘மோக்கா...மோக்கா...’ என்று இந்தியில் பாட்டுபடித்தபடி நழுவுகிறார்கள். அந்த இந்திய ரசிகரோ ஒன்றும் புரியாதபடி வீட்டிற்குள் நுழைகிறார்’’.

அதன் அர்த்தம் இது தான். உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி இதுவரை 15 அணிகளுடன் மோதியிருக்கிறது. இதில் பாகிஸ்தானிடம் ஒரு முறையும் தோல்வியை சந்தித்ததில்லை என்று ஜம்பம் தட்டிக்கொள்ளும் நாம், இன்னொரு கரும்புள்ளியையும் சுமந்து கொண்டிருக்கிறோம் என்பது வேதனையான உண்மை. அது வேறொன்றுமில்லை, உலக கோப்பையில் நாம் இதுவரை தென்ஆப்பிரிக்காவை மட்டும் வென்றதில்லை. அதைத்தான் அந்த தென்ஆப்பிரிக்க ரசிகர்கள் குறிப்பிட்டு, ‘இப்போது மீண்டும் ஒரு வாய்ப்பு; முடிந்தால் வென்று சரவெடியுடன் கொண்டாடி பாருங்கள்’ என்று சவால் விடுவது போல் இருந்தது.

உலக கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணி இதுவரை தென்ஆப்பிரிக்காவுடன் மூன்று முறை மோதியிருக்கிறது.

1992–ம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு நகரில் முதல் முறையாக எதிர்கொள்ள நேர்ந்தது. மழையால் 30 ஓவராக குறைக்கப்பட்ட இந்த ஆட்டத்தில் முகமது அசாருதீன் தலைமையிலான இந்திய அணி 6 விக்கெட்டுக்கு 180 ரன்கள் எடுத்தது. இந்த இலக்கை தென்ஆப்பிரிக்கா 5 பந்துகள் மீதம் இருக்கையில், 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

1999–ம் ஆண்டு உலக கோப்பையின் போது இந்திய அணி மறுபடியும் தென்ஆப்பிரிக்காவை எதிர்கொண்டது. இதில் முதலில் பேட் செய்த இந்தியா 5 விக்கெட்டுக்கு 253 ரன்கள் சேர்த்தது. சவுரவ் கங்குலி 97 ரன்களும், ராகுல் டிராவிட் 54 ரன்களும், சச்சின் தெண்டுல்கர் 28 ரன்களும் எடுத்தனர். இந்த இலக்கை தென்ஆப்பிரிக்கா காலிசின் (96 ரன்) அபாரமான ஆட்டத்தின் துணையுடன் 48–வது ஓவரில் எட்டிப்பிடித்தது.

அடுத்து 2011–ம் ஆண்டு உலக கோப்பையில் இந்திய அணி 3–வது முறையாக தென்ஆப்பிரிக்காவுடன் முட்டி மோதியது. இந்த உலக கோப்பையை கைப்பற்றி இந்தியா வரலாறு படைத்தாலும் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான லீக்கில் மட்டும் தோல்வி அடைந்தது. அந்த அணிக்கு எதிராக இந்திய அணி சச்சின் தெண்டுல்கரின் (111 ரன்) சதத்தால் 296 ரன்கள் குவித்தது. 2 பந்து மிச்சம் வைத்து இந்த ஸ்கோரையும் தென்ஆப்பிரிக்கா வெற்றிகரமாக கடந்தது.

இப்படியாக... 23 ஆண்டுகளுக்கு முன்பு இதே ஆஸ்திரேலிய மண்ணில் தான் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான தோல்விப்படலம் ஆரம்பித்தது.

இந்நிலையில் தொடங்கிய இடத்திலேயே அதற்கு முடிவு கட்டுவதற்கு இந்தியாவுக்கு இப்போது அருமையான சந்தர்ப்பம் இன்று கனிந்தது. உலக கோப்பையில் இன்று மெல்போர்னில் நடக்கும் யுத்தத்தில் இந்தியாவும், தென்ஆப்பிரிக்காவும் மல்லுகட்டின. இந்தமுறை இந்திய அணி, 130 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, தென்ஆப்பிரிக்காவின் மூக்கை உடைத்து வெற்றியை பட்டாசு வெடித்தது. தென் ஆப்பிரிக்கா புஷ்வாணமாகி விட்டது என்பது தெரிந்துவிட்டது.