Advertisement

Main Ad

ஒட்டுண்ணிபோல அரசாங்கத்தில் ஒட்டிக் கொண்டிருக்கும் ஒரு சில முஸ்லிம் அரசியல்வாதிகள் முஸ்லிம் சமூகத்தையும் தலைவர்களையும் காட்டிக் கொடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவது கவலை தருகின்றது

அஸ்ரப் ஏ சமத்

ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்கும் போது இன்னும் ஒட்டுண்ணிபோல அரசாங்கத்தில் ஒட்டிக் கொண்டிருக்கும் ஒரு சில முஸ்லிம் அரசியல்வாதிகள் முஸ்லிம் சமூகத்தையும் தலைவர்களையும் காட்டிக் கொடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவது கவலை தருகின்றது என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பிரான்ஸ் கிளை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பிரான்ஸ் கிளையின் கூட்டம் பாரிசில் நேற்று முன்தினம் இடம்பெற்ற போது, கட்சியின் தலைவர் றிசாத் பதியுதீன் பொது எதிரணிக்கு ஆதரவளிக்க மேற்கொண்ட தீர்மானத்துக்கு ஏகமனதான பாராட்டும் வழங்கப்பட்டது.
கட்சியால் பதவிகளையும் அந்தஸ்தையும் பெற்றுக் கொண்ட சில அரசியல்வாதிகள் கட்சித்தீர்மானத்துக்கு மாற்றமாக இன்னும் அரசில் ஒட்டிக் கொண்டு தேவையற்ற விமர்சனங்களையும் கட்சித்தலைவர் பற்றிய மோசமான கருத்துக்களையும் வெளியிடுவது குறித்தும் கூட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

முஸ்லிம் சமூகத்தை குறியாக வைத்து இனவாதிகள் தொடர்ச்சியாக தாக்குதல்கள், அட்டூழியங்கள், அட்டாகசங்களை புரிந்த போதெல்லாம் ஏறெடுத்துப் பார்க்காமல் இருந்த இலங்கை நாட்டின் தலைமை, இன்று தனது பதவியை மீண்டும் காப்பாற்றிக் கொள்வதற்காக முஸ்லிம் கிராமங்களுக்குச் சென்று அவர்களின் தயவை வேண்டி நிற்கின்றது. போலி வாக்குறுதிகளை வழங்கி சமூகத்தை ஏமாற்றப் பார்க்கின்றது.
பேருவளை, தர்காநகர், பாணந்துறை-நோ லிமிட் போன்றவற்றில் நிகழ்ந்த அராஜகங்களுக்கு எல்லாம் வாய்மூடி மௌனியாக இருந்த நாட்டுத் தலைமை, அந்த வேளை முஸ்லிம் கட்சித் தலைமைகளையும் பிரதிநிதிகளையும் சந்திப்பதற்கு கூட மறுத்திருந்தது. இந்தப் பிரச்சினையை அலட்சியப்படுத்தி துச்சமாக மதித்து சமூகத்தை ஏமாற்றியமை எவரும் மறப்பதற்கில்லை.

எமது கட்சியின் தலைவர் ரிசாத் பதியுதீனும், முகா தலைவர் ரவூப் ஹக்கீமும் அமைச்சரவையிலும், பாராளுமன்றத்திலும் ஆக்ரோஷமாக குரல்கொடுத்து நியாயம் கேட்ட போது அவர்களின் குரல்களை நசுக்க முற்பட்ட ஆட்சியாளர்கள், இப்போது முஸ்லிம்களில் பற்றுக் கொண்டவர்கள் போல் நடிக்கிறார்கள். இவ்வாறான பிரச்சினைகளை பெரிதுபடுத்தி நாட்டு மக்களிடையே ஒற்றுமையைச் சீர்குலைப்பதற்கு முற்பட வேண்டாம் எனவும். சிங்களவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை அந்த சமூகம் ஒருபோதும் பெரிதுபடுத்துவதில்லை எனவும் அவர்களும் உங்களைப் போன்று சிறிய பிரச்சினைகளை பெரிதுபடுத்தினால் என்ன நடக்கும் என்று சிந்துப் பாருங்கள் என முஸ்லிம் தலைவர்களிடம் கோபக் கனலுடன் கடிந்து கொண்ட ஆட்சித்தலைமையின் செயற்பாடுகளை நாம் மறப்பதற்கில்லை.
பொருத்தமான நேரத்தில் அரசில் இருந்து வெளியேறி அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த முஸ்லிம் தலைவர்களுக்கு நாம் என்றுமே கடமைப்பட்டுள்ளோம். எனினும் முஸ்லிம் சமூகத்தின் கோடரிக் காம்புகள், ஆட்சியாளர்களை திருப்திப்படுத்துவதற்கும் பதவிகளை தக்கவைப்பதற்குமான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

எமது கட்சியின் தலைவர் ரிசாத் பதியுதீனைப் பற்றி அபாண்டமான பொய்களையும் கட்டுக் கதைகளையும் பரப்பி அவர் மீது சேற்றை வாரி வீசுகின்றனர். பல்வேறு கட்சிகளில் அங்கம் வகித்த இந்த புல்லுருவிகளுக்கு போக்கிடம் இல்லாத போது அடைக்கலம் கொடுத்து, பதவிகளை வழங்கி சமூக அந்தஸ்தை பெற்றுக்கொடுத்த அந்தப் பெருமகனுக்கு பழி சொல்கின்றனர்.

இவர்களின் கொட்டம் இன்னும் சில நாட்களில் அடங்கிவிடும் என நாம் உறுதியாக நம்புகிறோம் என்றும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருந்தது.