சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் உள்ளிட்ட சாய்ந்தமருது
பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் சேவையைப் பாராட்டி திகாமடுல்ல மாவட்ட
பாராளுமன்ற உறுப்பினரும், கல்முனை தொகுதி அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்
குழுத் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் நற்சான்றுப் பத்திரம்
வழங்கி கௌரவித்தார்.
சாய்ந்தமருது பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்
சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி
எச்.எம்.எம்.ஹரீஸ் தலைமையில் இன்று இடம்பெற்றது. இந்நிகழ்வின்போதே
இந்நற்சான்றுப் பத்திரம் பாராளுமன்ற உறுப்பினரால் பிரதேச செயலாளரிடம்
கையளித்து வைக்கப்பட்டது.
பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் வழிகாட்டலில் 'நிறைவான இல்லம் வளமான
தாயகம்' எனும் தொனிப்பொருளில் நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும்
'கிராமிய மக்கள் ஒன்று கூடலும் நடமாடும் சேவையும் சாய்ந்தமருது பிரதேச
செயலகத்தின் ஏற்பாட்டில் பல்வேறு இடங்களில் இடம்பெற்றது.
இந்நடமாடும் சேவையினை சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீமின்
சிறந்த வழிகாட்டலில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மிகக் கச்சிதமான
முறையில் ஒழுங்கு செய்திருந்தனர்.
அத்துடன் இந்நடமாடும் சேவையில் மக்களின் குறைபாடுகள், தேவைகள்
பெரும்பாலானவைக்கு தீர்வுகள் காணப்பட்டதுடன் கிராமம் கிராம
மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் பற்றி பொதுமக்கள் பாராளுமன்ற
உறுப்பினருடன் கலந்துரையாடுவதற்கான ஏற்பாடுகளும் சிறப்பான முறையில் ஒழுங்கு
செய்யப்பட்டிருந்தன.
இந்நடவடிக்கைகளும், செயற்பாடுகளும் பாராளுமன்ற உறுப்பினரை வெகுவாக
கவர்ந்துள்ளது. இதனையெடுத்தே இந்நற்சான்றுப் பத்திரத்தை வழங்கி
கௌரவித்தார்.
மேலும் சாய்ந்தமருது பிரதேச செயலக மக்கள் நடமாடும் சேவை வெற்றிகரமாக
நடாத்துவதற்கு உதவிய அனைத்து திணைக்கள தலைவர்களுக்கும்,
உத்தியோகத்தர்களுக்கும் நன்றிகளை பாராளுமன்ற உறுப்பினர் இதன்போது
தெரிவித்தார்.



