தென்கிழக்கு பல்கலையில் இன்று (20.04.2014) ஜனாதிபதியால் திறந்து வைக்கப்படும் அஷ்ரப் ஞாபகார்த்த நூலகம் மற்றும் வர்த்தக முகாமைத்துவ பீட கட்டிட தொகுதி திறப்புவிழாவை முன்னிட்டு இக்கட்டுரை பதிவாகிறது.
-கலீல் எஸ். முஹம்மத்-
அதிமேதகு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களின் மகிந்த சிந்தனை வேலைத் திட்டத்தின் கீழ் பல்கலைக் கழகங்களின் உட்கட்டமைப்பை அபிவிருத்தி செய்யும் திட்டத்தில் சுமார் 360 மில்லியன் ரூபா செலவில் கட்டி முடிக்கப்பட்டதாகும்.
இன்று (20.04.2014) காலை 10.30 மணிக்கு ஆரம்பிக்கவுள்ள நிகழ்வில் அதிமேதகு ஜனாதிபதி மகிந்த ராஜபக்க்ஷ அவர்களினால் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இரு கட்டிடத் தொகுதிகளும் திறந்து வைக்கப்படவுள்ளது.
அதனை தொடர்ந்து உயர் கல்வி அமைச்சர் எஸ் பி திஸாநாயகவினால் ஒலுவில் வளாகத்திலும் சம்மாந்துறையில் அமைந்துள்ள பிரயோக விஞ்ஞான பீடத்திலும் 200 மில்லியன் செலவில் மீண்டும் இரு புதிய மாணவர் விடுதிக்கான அடிக்கல்களும் நடப்படவுள்ளன.
விழாக்கோலம் பூண்டுள்ள ஒலுவில் பூங்கா!
ஜனாதிபதி வருகையையொட்டி பல்கலை வளாகம் முழுவது வர்ண கொடிகளும் பல்கலைக்கழக கொடிகளும் பறக்கவிடப்பட்டு விழாக்கோலம் பூண்டுள்ளது.
ஜனாதிபதிக்கு செங்கம்பள வரவேற்பு!
இரண்டாவது முறையாக தென்கிழக்கு பல்கலைக்கு வரும் இலங்கை ஜனநாயக சோசலிஷ குடியரசின் அதி மேதகு ஜனாதிபதிக்கு செங்கம்பள வரவேற்ப்பு வழங்கப்பட உள்ளது.
பிரத்தியேகமான அருங்காட்சியகம்! (மியூசியம்)
இப்பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டு இரு தசாப்த காலம் நிறைவுறும் தறுவாயில் அனைத்து மாணவர்களும் பயன் பெறும் பொருட்டு மிகப் பிரமாண்டமான முறையில் வடிவமைக்கப்பட்ட நூலகமானது பல நவீன வசதிகளுடனும் புதுப் பொலிவுடனும் மாணவர்களுக்காக கையளிக்கப்படுகிறது.
21 ஆம் நூற்றாண்டின் அறிவுக்களஞ்சியமான இந் நூலகம் பல ஆர்வலர்களுடைய அயராத உழைப்பினாலும், பொது மக்களினதும், பல உள்நாட்டு, வெளிநாட்டு நிறுவனங்களினதும் தாராளமான ஆதரவினாலும் வளர்ச்சி பெற்றிருந்த இந் நூலகம் இன்று இதன் கட்டிடம் புதிதாக கட்டப்பட்டு புதிய பல நூல்களும், பழமைவாய்ந்த கையெழுத்துப் பிரதிகளும், புராதன சின்னங்கள் கற்கால உபகரணங்கள் அடங்கிய பிரத்தியேகமான அருங்காட்சியகமும் (மியூசியம்) புதுப் பொலிவுடன் கிழக்கிலங்கையின் முழு சமூகமும் பயன் பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
வலது குறைந்த மாணவர்களுக்கென விசேட கவனம்!
பல்கலைகழகத்தில் கல்வி பயிலும் வலது குறைந்த மாணவர்களுக்கென விசேடமான முறையில் வடிவமைக்கப்பட்டிருப்பது ஒரு குறிப்படத்தக்க அம்சமாகும்.
அவர்களுக்காக பிரத்தியேகமாக அமைக்கப்பட்டுள்ள சக்கர நாற்காலியில் செல்லும் வகையில் அமைந்த படிகள், இலத்திரனியல் நாற்காலிகள், பிரத்தியேகமான மல சல கூட வசதி, சிற்றுண்டி சாலை, அம்மாணவர்கள் உட்கார்ந்து வாசிப்பினை மேற்கொள்வதற்காக நூலக நுழைவாயிலில் விஷேட இருக்கை வசதிகள் என்பன ஒருங்கே அமையப்பெற்றுள்ளன.
ஆன்லைன் டிஜிட்டல் சிஸ்டம்!
இந் நூலகம் 260 மில்லியன் செலவில் கட்டி முடிக்கப்பட்டது மட்டுமல்லாமல் நவீன உலகை எதிர்கொள்ளும் பொருட்டு அதி நவீன கட்லாக் சிஸ்டம் மற்றும் கணணி மயப்படுத்தப்பட்ட (ONLINE DIGITAL LIBRARY) கிழக்கிலங்கைக்கு பெரும் அறிவுப் பொக்கிஷமாக இது மிளிரும் என்பதை உறுதியாக கூறலாம்.
பல்கலையின் திறன் மிகுந்த இரு தலைமைகளின் சாதனை!
தற்போதைய உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயில், பதிவாளர் அப்துஸ் சத்தார் ஆகியோரின் வருகைக்குப் பின்னர் தென்கிழக்குப் பல்கலைக்கழக நிர்வாகம் உள்ளக முரண்பாடுகள் எதுவுமின்றி ஒரே பாதையில் உத்வேகத்துடன் செயற்பட்டு வந்ததன் பிரதிபலிப்பே இவ்வாறான அபீவிருத்தியும் ஜனாதிபதியின் மீள் விஜயமுமாகும் என்று உறுதியாக நம்பலாம். மற்றும் நிர்வாக உத்தியோகத்தர்களினது அயராத உழைப்புக்கான சாதனைப் பரிசு என்றே கூற வேண்டும்.
மேலும் அமைச்சுடனும் அமைச்சு அதிகாரிகளுடனும் கொண்டிருந்த சுமூகமான உறவே இவ்விரு கட்டிட நிர்மானங்களுக்காக உயர்கல்வி அமைச்சினால் நேரடியாக பல்கலைக்கழகதுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு நிறைவுருகின்றமையும் இங்கு குறிப்பிட்டு சொல்ல வேண்டிய ஒன்றாகும்.
இது உண்மையில் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் இந்நூலகத்தின் அவசியமானது மாணவர்களுக்கு கிடைத்திருக்கும் பெரும் வரப்பிரசாதமாகும்.
கலைத்துவம் மிக்க நூலகத்திற்கும் கட்டிட வடிவமைப்பிற்கும் உப வேந்தரின் காத்திரமான பங்களிப்பு!
முற்றத்திலே நிழல் மரங்கள் கொண்ட இருக்கை வசதி, நீர் ஊற்று பாயும் மலைச்சாரல் வடிவமைப்பு, பார்ப்பவர் கண்களை கவரும் வகையில் அமைந்துள்ளது. எந்த ஒரு நூலையாவது படித்துவிட்டு செல்ல வேண்டும் என்கிற மனோ பக்குவத்தை உண்டுபண்ணும் வகையில் கலை நயத்துடன் காட்சி தருகிறது.
மட்டுமல்லாது முழு பல்கலைகழகத்தின் சுற்றுப்புற சூலழினையும் அழகுபடுத்தி கலை வடிவம் கொடுப்பதில் தன்னை அர்ப்பணிப்புடன் சாதாரண ஊழியனாக, ஒரு கலைஞ்சனாக செயல்படும் விதம் பாராட்டத்தக்கதாகும்.
நவீன கட்டிட கலை அம்சத்துடன் வர்த்தக முகாமைத்துவ பீடம்
ஜனாதிபதியின் ஆசிர்வாதம்!
நாட்டிலுள்ள ஏனைய பல்கலைக்கழகங்களுடன் ஒப்பிடுகையில் இப்பல்கலைக்கழகம் எந்த வகையிலும் குறைத்து மதிப்பிட முடியாத அளவுக்கு ஒரு தேசிய பல்கலைக்கழகமாக மிளிர்வதையும் அதற்கு தேசத்தின் தலைமையான ஜனாதிபதி, அமைச்சர் மற்றும் அமைச்சின் அதிகாரிகளும் ஆசிர்வாதம் வழங்கியிருப்பதை மீண்டும் ஒரு முறை புடம் போட்டுள்ளது.
மர்ஹூம் அஷ்ரபிற்கு கௌரவம்!
அத்துடன் பல்லின மாணவர்கள் கல்வி பயில்கின்ற தென்கிழக்குப் பல்கலைக்கழகம் எவ்வித இனவாதமுமின்றி ஒரு தேசிய பல்கலைக்கழகமாக செயற்பட்டு வருவதானது நாட்டிலுள்ள ஏனைய பல்கலைக்கழகங்களுக்கு நல்லதோர் முன்மாதிரியாகும்.
அர்ப்பணிப்புடன் செயல்படும் நூலகரும் அதன் ஊழியர்களும்!
நூலகர், உதவி நூலகர்கள், சிரேஷ்ட,உதவி நூலக பதிவாளர்கள், நூலக உதவியாளர்கள், இலிகிதர்கள், மற்றும் சாதாரண ஊழியர்கள், எல்லோரும் ஒன்றிணைந்து இரவு பகல் பாராது செயற்பட்டதன் விளைவே இன்றைய இவ் விழா வெற்றி பெற முடிந்தது என கூறலாம்.
மீண்டும் வெற்றிப் பயணத்தில்!
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தை பொருத்தமட்டில் நாட்டிலுள்ள ஏனைய பல்கலைக்கழகங்களுடன் ஒப்பிடுகையில் புதிய பிரசவம் என்பதோடு நமது சமூகத்தின் அடையாளச் சின்னமாகவும் உயர்கல்விக்கான விலை மதிப்பிட முடியாத கல்விக் கூடமாகவும் திகழ்கிறது.
அத்துடன் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சர்வதேச தரச்சான்றிதழை நோக்கிய பயணத்தில் இணைந்து பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவதே எதிர்கால சந்ததியினருக்கு நாம் செய்யும் ஆரோக்கியமான கைங்கரியமாகும் என்பதோடு ஒரு சமூகம், ஒரு குடும்பம் அல்லது நாடு பல்துறைகளிலும் முன்னேற வேண்டுமாயின் அதன் நிர்வாகம் சிறப்பாக இருப்பதில் தான் தங்கி உள்ளது.
திறன் மிகுந்த நிர்வாக கட்டமைப்பினால்தான் அதனை துல்லியமாகவும் இலக்கு நோக்கிய பாதைக்கும் கொண்டு செல்ல முடியும். திறமையற்ற நிர்வாக முறைமை எந்த இடத்திலும் தோல்விகளையே சந்திக்கும்
இந்தசந்தர்பத்தில் தென்கிழக்கு பல்கலை தற்போது கொண்டிருக்கும் நிர்வாகம் அல்லது தலைமையானது ஏனைய பல்கலைக்கழகங்களுக்கு முன்மாதிரியாக செயற்படுகிறது என்பதை பல்வேறு தரப்பினரும் உறுதிப்படுதுவதனை பார்க்கும் போது அதன் ஒவ்வொரு அடைவும் வெற்றியை நோக்கி பயணிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
