மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ள இந்த நோய்த்தாக்கத்தால் அங்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 81-ஐ தொட்டுள்ளது. ரியாத்தில் 73 வயது முதியவர் ஒருவரும், துறைமுக நகரமான ஜெட்டாவில் 54 வயதுடைய ஒருவரும் இறந்துள்ளதாக நேற்றைய அரசு தரப்பு தகவல்கள் தெரிவித்துள்ளன.
திடீரென நோய் அதிகரித்ததிற்கான காரணம் தெரியவில்லை என்று தொற்று நோய் விஞ்ஞான கமிட்டி உறுப்பினரும், சுகாதாரத்துறை அமைச்சகத்தின் உதவி செயலாளருமான டாக்டர் அப்துல்லா அல் அசிரி கூறுகின்றார். எனினும் சென்ற ஆண்டும் இதே காலகட்டத்திலும் பின்னர் குளிர்கால முடிவிலும் இந்த நோய் அங்கு அதிகரித்திருந்ததாகவும் அவர் செய்தியாளர்களிடம் குறிப்பிட்டுள்ளார்.
ஜெட்டா பகுதிகளில் காணப்பட்ட இந்த நோய் தாக்கத்தினால் மருத்துவ ஊழியர்கள் பீதியடைந்து தற்காலிகமாக அரசு மருத்துவமனையின் அவசர உதவிப் பிரிவையே மூடியுள்ளனர். இதனைத் தொடர்ந்து கடந்த வாரம் அந்தப் பகுதிகளில் உள்ள பொதுமக்களிடையே அமைதியை ஏற்படுத்துவதற்காக சுகாதாரத்துறை அமைச்சர் அப்துல்லா அல் ரபையா அங்குள்ள மருத்துவமனைகளுக்கு விஜயம் செய்தார். இருப்பினும், நேற்று எந்தக் காரணமும் கூறாமல் அரசு அவரைப் பதவி நீக்கம் செய்துள்ளது.
ஆசியாக் கண்டத்தில் கடந்த 2003-ம் ஆண்டில் தோன்றி 8,273 பேர்களைத் தாக்கி அவர்களில் ஒன்பது சதவிகிதத்தினரின் மரணத்திற்குக் காரணமாக இருந்த சார்ஸ் நோயைவிட குறைவான நோய்த்தாக்கம் கொண்டது இது என்றபோதிலும் இதற்கான தடுப்புமருந்தை கண்டுபிடிக்க வல்லுனர்கள் இன்னமும் முயற்சித்து வருகின்றனர்.
ஒட்டகங்கள் மீது அசாதாரணமான விதத்தில் 20 வருடங்களுக்கும் மேலாக பொதுவாக இந்த நோய்த்தொற்று காணப்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது. இதன்மூலம் அவை மனிதர்களுக்கும் பரவியிருக்கலாம் என்பது வல்லுனர்களின் யூகமாகும்.
