நபி முஹம்மத் (ஸல்) அவர்களைப் பற்றியும் அவர்களின் இஸ்லாமியப் பிரச்சாரத்தின் தனித் தன்மை, சிறப்பியல்புகள் பற்றியும் மாற்று மதத்தை சேர்ந்த கல்வியலாளர்கள், அறிஞர்கள் என்று பலரும் காலா காலமாக சிலாகித்து சிறப்பித்து கூறி வருவதை இவ்வுலகு தெளிவாக அடையாளம் கண்டு வருகின்றது. – எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே! இந்த வகையில் இலங்கை சப்ரகமுவ பல்கலைக் கழக வேந்தர் பேராசிரியர் கும்புரகமுவ வஜிர நாயக்க தேரர் அவர்கள் நபியவர்களைப் பற்றி நேற்று கொழும்பில் இடம் பெற்ற ஒரு நிகழ்வில் பேசிய சில முக்கிய பகுதிகளை இங்கு வழங்குகின்றோம்.
இந்த உலகில் வாழ்ந்தவர்களில் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் சிரேஷ்டமானவர் என சப்ரகமுவ பல்கலைக் கழக வேந்தர் பேராசிரியர் கும்புரகமுவ வஜிர நாயக்க தேரர் தெரிவித்தார். உலகில் தாக்கம் செலுத்தியவர்களில் அவர் மிகவும் முக்கியமானவர் என போராசிரியர் குறிப்பிட்டார். “ஆயுத மாற்றம் மற்றும் சிந்தனை மாற்றம் ஆகிய இரண்டு வழிகள் மூலம் உலகில் தாக்கம் செலுத்த முடியும். எனினும் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் சிந்தனையின் ஊடாக உலகில் பல மாற்றங்களை மேற்கொண்டார். மிகவும் பின் தங்கிய காலத்திலேயே முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இந்த உலகில் வாழ்ந்தார்கள். எனினும் அவர்கள் நல்லவர்களையும் கெட்டவர்களையும் எவ்வாறு பிறிப்பது என்பது குறித்து முழு உலகிற்கும் தெளிவுபடுத்தினர். இதற்கு மேலதிகமாக அக்கால இளைஞர்களை சிறந்தவர்களாகவும் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மாற்றினார்கள். சூழல் கரிசனை குறித்து அல்குர்ஆன் மிகத் தெளிவாக கூறியுள்ளது. அடிமைகளின் உரிமை குறித்தும் அல்குர்ஆனில் மிகத் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை தெளிவாக முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மக்கள் மத்தியில் முன்வைத்தனர். கருணை பற்றியும் குர்ஆன் விளக்கமாக கூறுகின்றது. அதாவது விபச்சார பெண்னொருவர் நாயின் தாகத்திற்கு தண்ணீர் கொடுத்தமையினால் அவரின் முழுமையாக மன்னிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இஸ்லாத்தில் கருணை எவ்வளவு முக்கியம் என்பதை அறிய முடிகின்றது” என்றார்.

