Advertisement

Main Ad

மு.கா இல்லாத கூட்டமைப்பு உப்பில்லாத கறிக்குசமன்




மஹிந்த ஆட்சியில் முஸ்லிங்கள் மீது அநீதி இருக்கின்றது என்று வீதியில் இறங்கி போராடி நல்லாட்சியை கொண்டுவர முஸ்லிம் கட்சிகள் ஒன்றிணைந்து அன்னத்துக்கு உயிர்கொடுக்க ஒரே மேடையில் அமர முடிந்த நமக்கு இப்போது மஹிந்த ஆட்சியில் நடைபெற்ற அநீதிகளை விட அதிக அநீதிகள் குறிப்பிட்ட சில காலத்தில் அதிலும் குறுகிய காலத்தில் இடம்பெற்ற போதும் அதனை எதிர்த்து குரல் கொடுக்க ஒன்றிணைய முடியாமல் இருப்பது ஏன் ?


மிக நீண்ட கால வரலாற்றையும்,நீண்ட சாதனைகளையும் நிகழ்த்தி இலங்கையில் வாழும் முஸ்லிம் உம்மத்துக்கு முகவரி பெற்றுக்கொடுத்த முஸ்லிம் காங்கிரஸ் இந்த நல்லாட்சியை ஆதரிப்பதுக்கு கால தாமதமாக வந்தாலும் அதன் பங்களிப்பு அளப்பெரியது. ஐக்கிய தேசிய கட்சியுடன் மிக நெருங்கிய உறவை பேணிவரும் முஸ்லிம் கட்சியென்றால் அது மு.கா என்பது மறைக்கப்பட முடியாத உண்மை. அப்படி இருந்தும் முஸ்லிம் காங்கிரசின் கோட்டை என வர்ணிக்கப்படும் அம்பாறையில் இரண்டு பிரதியமைச்சர்கள்,ஒரு மாவட்ட அபிவிருத்தி குழு இணைத்தலைவர், ஒரு மாநில அமைச்சர், ஐந்து மாகாணசபை உறுப்பினர்,கட்சியின் தவிசாளர்,செயலாளர் ஆகியோரையும் மற்றும் பல முக்கியஸ்தர்களையும் கொண்ட மு.கா அம்பாறை மாவட்ட மக்கள் மத்தியில் பலத்த செல்வாக்குடன் இருக்கிறது.


மு.காவின் அசைக்க முடியாத கோட்டையாக இருந்து வரும் கல்முனை மாநகரின் ஆட்சியின் கீழே உள்ள சாய்ந்தமருதில் பல வருடங்களாக இயங்கிவந்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தை அரசியல் வாதிகளின் அசமந்த போக்கினால் பறிகொடுத்த பின்னர் கண்கெட்ட பின்னர் சூரிய நமஸ்காரம் என்பது போல இதோ வரும் அதோ வரும் என மாறிமாறி அரசியல் அறிக்கை விட்டனர். ஆனால் நடந்தது என்ன ? சிங்கள மொழியில் தேர்ச்சி இல்லாத சிறுபான்மையினர் அதிகம் உபயோகப்படுத்திய அந்த நிலையத்தின் இழப்பினால் கரையோர மக்கள் அனுபவிக்கும் துன்பங்கள் சொல்லிலடங்காதவை. அம்பாறை நகரிலிருந்து ஒரு ஒதுக்குப்புறமாக அமையப்பெற்றிருக்கும் அந்த கட்டிடத்தில் சேவையை பெற அந்த மக்கள் படும்பாட்டை நேரடியாக அரசியல் தலைவர்களால் உணரமுடியுமா ??

பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களை கல்முனை கூட்டம் ஒன்றுக்கு அழைத்துவந்த முஸ்லிம் காங்கிரஸ் கல்முனையை அபிவிருத்தி மிக்க மாநகரமாக உருவாக்கப்படும் எனும் வாக்குறுதியை பல்லாயிரகணக்கான மக்கள் முன்னிலையில் பிரதமரின் வாயால் வாங்கி கொடுத்தது. கல்முனையின் மேயராக இப்போதைய பிரதியமைச்சரில் தொடங்கி சட்ட முதுமானியும் மு.கா பிரதி செயலாளருமான நிஸாம் காரியப்பர் வரை மு.காவின் ஆட்சியின் கிழே இருந்து வந்தும் இன்றும் அந்த மாநகரம் முன்னாள் அமைச்சர் மன்சூரின் காலத்தில் கண்ட அபிவிருத்திலையே இருப்பது மு.காவின் ஆளுமையை பறைசாற்ற தவறவில்லை.

மு.காவில் இருந்து வெளியேறிய அதாவுல்லாஹ்,ஹிஸ்புல்லாஹ்,அன்வர் இஸ்மாயில்,ரிசாத், பேரியல் அஸ்ரப் போன்றோரால் செய்யப்பட்ட சேவைகளை கூட செய்யாமல் இருப்பது முஸ்லிங்களின் தாய் கட்சியான முஸ்லிம் காங்கிரசுக்கு கெட்டபெயரை உண்டாக்க கூடிய ஒரு செயலே


முஸ்லிம் மக்கள் அதிகமாக வாழும் இறக்காமத்தில் சிலை வைக்கப்பட்டவுடன் வாயு அடைக்கப்பட்ட சோடாப்போத்தல் போன்று கொதித்தெழுந்து பிரதமரின்,ஜானாதிபதியின், எதிர்கட்சி தலைவரின் மூலம் தீர்வு கிடைக்கும் என உலங்கு வானூர்தி மூலம் அவசரமாக வந்து மக்களுக்கு பள்ளிவாசலில் வைத்து அம்பாறை மாவட்ட மக்களின் அதிகூடிய ஆணையை பெற்ற கட்சியான மு.கா வின்  தலைவர் கௌரவ ஹக்கீம் அவர்கள் கூறிய கதைக்கு என்ன ஆனது ?


மேற்கூறிய குற்றசாட்டுக்களுக்கு ஐ.தே கட்சியின் அம்பாறை மாவட்ட எம்.பியும் ஐ.தே.கட்சி தேசிய அமைப்பாளருமான அமைச்சர் தயா கமகே அவர்களிடம் பணத்துக்கு சோரம் போனதாக பாரிய குற்றசாட்டு பரவலாக இருக்கின்ற போதும் மு.கா மௌனம் காப்பது அந்த குற்றசாட்டை ஏற்றுகொள்வதற்கு சமனாகும்.

சுனாமியனால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களுக்கென சவூதி அரேபிய அரசாங்கத்தினால் 2005ம் ஆண்டு கட்டப்பட்ட 500 வீடுகளை கொண்ட அக்கரைப்பற்று நுரைச்சோலை வீட்டுத்திட்டம் இன்று பாழடைந்து வருகின்றது. எமது முஸ்லிம் அரசியல்வாதிகள் கூட இந்த விடயத்தை ஒரு தேர்தல் கால வாக்குறுதியாக மட்டுமே கருதி செயற்படுகின்றனர். போகிற போக்கில் நுரைச்சோலை வீட்டுத்திட்டம் அக்கரைப்பற்று காடாக வர்த்தகமானி பிரகடனம் வந்தாலும் ஆச்சரியப்படதேவையில்லை. 

(நகர திட்டமிடலுக்கு(ஹக்கீம்) மீள்குடியேற்றத்துக்கு(ஹிஸ்புல்லாஹ்.) அமைச்சர்களாக,இராஜாங்க அமைச்சராக முஸ்லிம் அரசியல்வாதிகளே இருப்பதும் கடந்த 2016 நோன்பு தினத்தில் நோன்பை நோற்றவராக அமைச்சர் ரிசாத் இந்த பிரச்சினைக்கு ஒருவாரத்தில் தீர்வு கிடைக்க நான் வாக்குறுதியளிக்கிறேன் என சாய்ந்தமருது கடற்கரையில் வைத்து ஊடகவியலாளர்கள் முன்னிலையில் கூறினார் அந்த சமயத்தில் அமைச்சர் நோன்பு நோற்றவராக இருந்தார் என்பதும் அவர் கூறிய வாக்குறுதி வருடங்களை தாண்டி விட்டதும் இங்கு குறிப்பிடதக்கது)

தேர்தல் கால வாக்குகளுக்காக மேடைக்கு மேடை மு.காவினாலும்,தே.காவினாலும், ம.காவினாலும் மாறி மாறி வாக்குறுதியளிக்கப்பட்டு வந்த சாய்ந்தமருது நகரசபை பிரகடனம் குறித்த துறைக்குப் பொறுப்பான அமைச்சரையும்(பைசர் முஸ்தபா ) அழைத்துவந்து மக்கள் முன்னிலையில் மக்கள் காங்கிரசினால் வாக்குறுதியளிக்கப்பட்டு வருடத்தை அண்மித்தும் ஆனபாலன் எதுவுமில்லாத சந்தர்ப்பத்தில் இப்போது பள்ளிவாசல்களிலும் வைத்து சத்தியம் செய்யும் அளவுக்கு நிலை மாறியுள்ளது கவலைதரக்கூடிய விடயமே. என்றாலும் உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கு முன்னர் கிடைக்க ஆவணம் செய்வோம் என ஐ.தே.கட்சியின் எம்.பிக்களும்,அமைச்சர்களுமான ரவுப் ஹக்கீம்,ரிசாத் பதியுதீன் ஆகியோர் கூறியிருப்பது சற்று ஆறுதலாக இருந்தாலும் மக்கள் மத்தியில் பாரிய கேள்விக்குறியாகவே இருந்து வருவது நிதர்சனமிகு உண்மையே..

அம்பாறையில் புதிதாக களமிறங்கிய மயில் சின்னத்தை 33000 வாக்குகளை அளித்து அம்பாறை மாவட்ட மக்கள் ஆதரித்தமையானது அமைச்சர் ரிசாத்தின் ஆளுமையை நம்பியே. என்றாலும் அமைச்சரின் மூலம் அம்பாறை அடைந்த பயன் என்ன என்பதை சிந்திக்க வேண்டியுள்ளது. கட்சி முக்கியஸ்தர்களில் சிலருக்கு அரச திணைக்கள தலைவர் பதவி வழங்கியுள்ளதையும்,சில மகளிர் சங்கங்களுக்கு சில தையல் இயந்திரம் வழங்கியதையும் தவிர அமைச்சரின் மூலம் பெரிதாக எந்த அபிவிருத்தியோ அல்லது உரிமைகளையோ பெற்றதாக இல்லை. மேலே கூறப்பட்டிருக்கும் அம்பாறை மாவட்ட பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற மக்கள் காங்கிரசின் காத்திரமான பங்களிப்பு குறைவே.

கடந்த மஹிந்த ராஜபக்ஸ அரசில் நேரடியாக பாதிக்கப்பட்ட பள்ளிவாசல்களுக்கும், வர்த்தக நிலையங்களுக்கும்,ஜனாசாவாக்கப்பட்ட முஸ்லிம் சகோதரர்களுக்கும் உரிய நீதியை பெற்றுத்தர நாங்கள் ஆவணம் செய்வோம் என மேடைக்கு மேடை முழங்கிய முஸ்லிம் அரசியல் தலைவர்கள் அதனை செய்துவிட்டார்களா ?

நல்லாட்சி அரசை நிறுவியதில் பாரிய செல்வாக்கு செலுத்திய முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகளான எமது தலைமைகள் பாராளுமன்றத்தில் இருக்கின்ற போதே நல்லாட்சி அரசின் முக்கிய அமைச்சர்களின் அனுசரணையோடு இனவாதிகள் தமது கைவரிசையை காட்டிவந்தனர், இன்றும் காட்டிவருகின்றனர் அந்த இயக்கங்களின் அராஜகங்கள் இன்றும்  ஓய்ந்த பாடில்லை. அப்போதைய ஆட்சியில் கலகட அத்தே ஜானசார எனும் தேரர் மதம் பிடித்து ஆடிய போது தெருவுக்கு வந்து சண்டையிட்ட நாம் இந்த ஆட்சியின் போது அதனைவிட அதிகமாக குறித்த தேரரும் அவரை அண்டியவர்களும் ஆட்டம் போடுகின்ற போது நாம் மௌனமாக வேடிக்கை பார்ப்பது ஏன் ? சாணக்கியமா ??

கடைகள் நள்ளிரவில் தீக்கிரையாகின்ற போது காலையில் தவறாது சென்று காட்சிகளை கண்ணால் கண்டுகளித்த எம்.பிக்களும், நல்லாட்சியின் அமைச்சர்களுக்கும் குறித்த வர்த்தகர்களுக்கு பெற்றுகொடுத்த நஷ்டஈடு எவ்வளவு ??

விடுதலை புலிகளின் காலத்தில் தனது சொத்துக்களையும்,வீடு,வளவுகளையும் இழந்து அனாதைகளாக இடம்பெயர்ந்த மக்களின் காணிகளை கடந்த அரசில் மஹிந்த ராஜபக்ஸ அவர்கள் விடுவித்து கொடுத்த போதும் இப்போதைய நல்லாட்சி அரசின் தலைவராக இருக்கும் அதிமேதகு ஜனாதிபதி காடாக பிரகடனம் செய்து வர்த்தகமானி அறிவித்தல் விடுத்தபோது அதிமேதகு ஜனாதிபதி அவர்களை நேரடியாக சந்தித்து குறித்த மக்களின் பிரச்சினைக்காக பேசிய தலைவர் யார் ?? செயலாளரை மட்டுமே சந்தித்து பேசிவிட்டு வரும் அளவிற்க்கு நாம் ஒதுக்கப்பட்டோமா?? என்ற கேள்விக்கு எமது மனச்சாட்சிகளிடம் பதிலை எதிர்பார்க்க வேண்டியுள்ளது

கடந்த கால அசாதாரண சூழ்நிலைகளில் சிக்கிகொண்ட மக்களை மீண்டும் மீள்குடியேற்ற நாம் மேற்கொண்ட முயற்சிகள் என்ன ?

அல்லாஹ்வையும் இஸ்லாத்தையும் பகிரங்கமாக நிந்தித்தவர்கள் சுதந்திரமாக சுற்றிவரும் நமது தேசத்தில் கௌதம புத்தரை முகப்புத்தகத்தில் நிந்தித்தால் கூட  சிறைவாசம் அனுபவிக்க வேண்டியத்தை நாம் கண்களூடாக பார்க்கிறோம்.

இப்படியான பல இன்னல்களை அனுபவித்து வரும் முஸ்லிம் சமுதாயம் எப்போதுமே இந்த நாட்டுக்கு விரோதமோ,அரசுக்கு எதிரான கிளர்ச்சிகளோ செய்யாத தேசப்பற்று மிகுந்த ஒரு இனம் என்பது பெருமையான ஒன்றாக இருந்தாலும் தொடர்ந்து நசுக்கப்பட்டு வரும் ஒரு இனமும் கூட. இவை அனைத்துக்கும் முக்கிய காரணம் எமது மக்களிடம் காணப்படும் பிரதேச வாதமும், தலைமைத்து போட்டியும்,கட்சி சண்டைகளுமே என்பது கசப்பான உண்மை.

முஸ்லிங்களின் பிரச்சினைகள் சகலதுக்கும் தீர்வுக்கான நாம் முதலில் ஒற்றுமையை கடைபிடிக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். முஸ்லிங்களின் தேசிய கட்சிகளான மு.காங்கிரஸ்,ம.காங்கிரஸ்,தே.காங்கிரஸ்,நல்லாட்சிக்கான மக்கள் முன்னணி,நுஆ, போன்ற கட்சிகளும் மக்கள் நலன் விரும்பும் போது இயக்கங்களும் ஒருமித்த குரலுடன் ஒரே சின்னத்தில் ஒன்றுதிரள வேண்டியது காலத்தின் தேவையாக உள்ளது.

இந்த கூட்டமைப்பின் தலைமைத்துவத்தை ஒரு சபையாக நிறுவி அந்த சபையில் அரசியல் தலைவர்கள், ஜம்மியத்துல் உலமா பிரதிநிதிகள்,பல்கலைகழக பேராசிரியர்கள், சமுக இயக்க பெரியார்கள் என பலரையும் கொண்டு அமைப்பதன் மூலம் வெற்றிகரமாக செயற்படுத்த கூடியதாக இருக்கும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாகும்.

பல பக்கங்களிலும் இருந்து கொண்டு சிறிய அளவில் குரல் கொடுப்பதுக்கும் ஒற்றுமையாக இருந்து ஒருமித்த குரலில் பேசுவதட்க்கும் நிறையவே அனுகூலங்கள் உண்டு. இதனை புரிந்துகொண்டு மக்களின் தேவைகளை நிவர்த்திசெய்ய சகலரும் ஒன்றிணைய வேண்டும். இல்லாது போனால் முஸ்லிங்கள் அடக்கி ஒடுக்கப்பட்டு பொருளாதாரங்கள் சிதைக்கப்பட்டு முஸ்லிங்களின் இருப்பு எமது தேசத்தில் கேள்விக்குறியாகும்.

என்றாலும் இந்த கூட்டமைப்பில் மு.காவும் தன்னை இணைத்துக்கொண்டு முஸ்லிம்களின் தாய்கட்சி என்ற அடிப்படையில் வழிகாட்டியாக இருக்க வேண்டும். மக்களின் தேவைகளை புரிந்துகொண்டு சேவைசெய்ய கூடிய அமைப்பாக இந்த அமைப்பு செயற்படுவதன் மூலம் மட்டுமே உரிய பயனை பெற முடியும். அதலால் இதய சுத்தியுடன் நாளைய இறைவனின் தீர்ப்பு நாளுக்கு பயந்தவர்களாக ஒன்றிணைத்து செயற்பட்டு முஸ்லிம் குரலாக செயற்பட வேண்டும்.

இவைகள் நடக்கும் என்ற நம்பிக்கையுடன் இருக்கும் மக்களுக்கு நீங்களும் காலமுமே ஆறுதல்.


 நூருல் ஹுதா உமர்
 -மாளிகைக்காடு -

Post a Comment

0 Comments