(க.கிஷாந்தன்)
தலவாக்கலை தோட்ட நானுஓயா பிரிவில் 100 இற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தோட்ட நிர்வாக நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், தொழிலாளர்களுக்கு கொடுக்க வேண்டிய சலுகைகளை வழங்கப்படாமைக்கும், தோட்ட தொழிலாளர்களை தேவையற்ற பிரச்சினைகளுக்குள்ளாகி வேலைநிறுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
குறித்த தோட்டத்தின் கொழுந்து மடுவத்திற்கு முன்பாக 18.05.2017 அன்று காலை 09 மணிமுதல் 11 மணிவரை பதாதைகளை ஏந்தி கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
கடந்த மாதத்தில் இத்தோட்டத்தில் மரண சடங்கு ஒன்று நிகழ்ந்துள்ளது. இதன்போது மரண சடங்கினை நடத்தவதற்காக தொழிலாளர்களிடம் மாதாந்தம் அறவிடப்படும் மரண நிதியினை தோட்ட நிர்வாகத்திடமிருந்து, மரண கமிட்டி உறுப்பினர்கள் கோரிய போது தோட்ட நிர்வாகம் வழமை போல் வழங்க வேண்டிய பணத்தை விட குறைவாகவே வழங்கியுள்ளது.
இது தொடர்பாக தோட்ட தலைவர்கள் தலைமை அதிகாரியிடம் கலந்துரையாடிய போது தோட்ட அதிகாரி குறித்த தலைவர் தன்னிடம் தவறான வார்த்தைகளால் பேசியதாக தெரிவித்து தலவாக்கலை பொலிஸ் நிலையத்தில் தோட்ட அதிகாரி புகார் செய்துள்ளார். இதனையடுத்து தோட்ட அதிகாரி குறித்த தலைவரை தனது பணியிலிருந்து இடைநிறுத்தியுள்ளார் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
மேலும் சம்மந்தப்பட்ட தலைவர்க்கு உடனடியாக தொழில் வழங்க வேண்டும் எனவும், வழங்காத பட்சத்தில் தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கப்போவதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் மேலும் தெரிவித்தனர்.
அத்தோடு தோட்ட நிர்வாகத்தால் தொழிலாளர்களை அடிமைப்படுத்துவதாகவும், பிரச்சினைகள் வரும்பொழுது உடனடியாக பொலிஸ் நிலையத்திற்கு புகார் செய்வதாகவும், 18.05.2017 அன்று முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது தோட்ட அதிகாரியால் பொலிஸ் உத்தியோகஸ்தர்களை அழைத்து வந்தமை தமக்கு பயம் ஏற்பட்டுள்ளதாகவும் ஆர்ப்பாட்டகாரர்கள் இதன்போது சுட்டிக்காட்டினர்.
எனவே இதற்கு உடனடியாக தீர்வு ஒன்றை பெற்று தர வேண்டும் என்பதற்காகவே இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்ததாக ஆர்ப்பாட்டகாரர்கள் தெரிவித்தனர்.
0 Comments