சுஐப் எம் காசிம்
மறிச்சுக்கட்டி, கரடிக்குளி, பாலைக்குளிக் கிராமங்களில் காலா காலமாக வாழ்ந்த மக்களின் பூர்வீகக் காணிகளும் வாழ்வாதாரத் தேவைகளுக்காக அவர்கள் பயன்படுத்தி வந்த மேட்டு நிலங்களும் வர்த்தமானி அறிவித்தல் மூலம் கையகப்படுத்தப்பட்டமையை அடுத்து அந்த ம்க்களுக்கு இழைக்கப்பட்ட அநியாயங்களுக்கு தீர்வு காணும் வகையில் ஜனாதிபதி மூன்று பேர் கொண்ட ஆணைக்குழுவை அமைத்துள்ளார். இந்த ஆணைக்குழு ஒரு மாதத்தில் இந்த விடயங்களை ஆராய்ந்து ஜனாதிபதிக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டுமென ஜனாதிபதின் செயலாளர் பி பி அபேயகோன் பணித்துள்ளார்.
வடபுலத்திலே வாழ்ந்த முஸ்லிம்கள் 1990 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகளினால் வெளியேற்றப்பட்டமை கசப்பான உண்மை. இந்த மக்கள் கால் நூற்றாண்டுகளுக்கு மேலாக தென்னிலங்கையில் வாழ்ந்து வருகின்றனர். சமாதானம் ஏற்பட்ட பின்னர் தாம் வாழ்ந்த பூர்வீக இடங்களில் மீள்குடியேறச் சென்ற போது அந்த இடங்கள் காடாகிக் கிடந்தன. அந்தக் காடுகளை வெட்டி ,கொட்டில்களை அமைத்த போதே இனவாதிகளின் கூக்குரல்கள் எழுந்தன. இனவாதிகள் அங்கு சென்று கொட்டில்களையும் பிடுங்கி எறிந்தனர்.
”முஸ்லிம்கள் காடழித்துக் குடியேறுகின்றனர். அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அந்தக் குடியேற்றத்திற்கு உதவுகின்றார். வெளிநாடுகளில் இருந்து மக்களைக் கொண்டு வந்து இங்கு அரபுக் கொலணியொன்றை உருவாக்குகின்றார் ”என்ற கோஷம் வலுப்பெற்றது.
இனவாதச் சூழலியலாளர்களும், இனவாத ஊடகங்களும் திட்டமிட்டு அப்பாவிச் சிங்களவர்கள் மத்தியிலே வில்பத்து நாசமாக்கப்படுகின்றது என்ற நச்சு விதைகளை விதைத்தனர். போதாக் குறைக்கு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மீது அரசியல் ரீதியாக காழ்ப்புணர்வு கொண்ட சக்திகள், பௌத்த இனவாதிகளை மறிச்சுக்கட்டிப் பிரதேசத்திற்கு அழைத்து வருவதற்கு வழி சமைத்துக் கொடுத்தனர்.
யுத்தகாலத்தில் முஸ்லிம்கள் தென்னிலங்கையில் வாழ்ந்த போது அதாவது 2012 ஆம் ஆண்டு மே மாதம் 21 ஆம் திகதி கொழும்பில் இருந்து கொண்டு ஜி பி எஸ் முறையினால் மறிச்சுக்கட்டி, கரடிக்குளி, பாலைக்குளி மக்களுக்குச் சொந்தமான 6042 ஹெக்டேயர் விஸ்தீரணம் கொண்ட காணிகள் கபளீகரம் செய்யப்பட்டு இருந்தது. அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மேற்கொண்ட பகீரத முயற்சியினால் ஜனாதிபதி விஷேட செயலணி அமைக்கப்பட்டு முஸ்லிம்களின் காணிகளில் ஒரு சிறிய தொகை விடுவிக்கப்பட்டிருந்தது.இந்த செயலணியில், மீள்குடியேற்றத்துடன் எத்தகைய தொடர்பும் இல்லாத கைத்தொழில் வர்த்தக அமைச்சின் செயலாளர் ஒருவரும் இடம்பெற்றிருந்தமை அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இந்த முயற்சியில் எவ்வளவு ஈடுபாடு கொண்டிருந்தார் என்பதை புலப்படுத்துகின்றது.
முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை முன்னின்று செயற்படுத்தியதனால் அமைச்சர் மீது இனவாதிகள் தொடர்ச்சியாக மேற்கொண்ட அபாண்டங்களினாலும் வீண்பழிகளினாலும் அவர் பட்ட கஷ்டங்கள் சொல்லொணாதவை. குறிப்பாக ஹிரு தொலைக்காட்சியில் ஆனந்தத் தேரருடனும், தெரண 360 நிகழ்ச்சியிலும், இலண்டன் பி பி சி சிங்கள நிகழ்ச்சியிலும் அமைச்சர் கலந்து கொண்டு முஸ்லிம்களின் பக்க நியாயங்களை தெளிவுபடுத்தினார்.
வில்பத்துவை முஸ்லிம்கள் அழிக்கவில்லை என்று நிறுவுவதற்காக அது தொடர்பிலான அத்தனை ஆவணங்களும் திரட்டப்பட்டன. கொழும்பிலே ஏராளமான ஊடகவியலாளர் மாநாடுகள் அவ்வப்போது நடத்தப்பட்டு உண்மை நிலையை அமைச்சர் விளக்கினார். மறிச்சுக்கட்டிக்கு ஊடகவியலாளர்களை அழைத்துச் சென்று எல்லைகளை தெளிவுபடுத்தினார்.மன்னாருக்கும் வில்பத்துவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லையென்ற ஆதாரங்களை வழங்கினார். எனினும் இனவாத சக்திகள் தமது தொடர்ச்சியான செயற்பாடுகளை விட்டதாக இல்லை. முகநூல்களிலும் இனவாத இலத்திரனியல் ஊடகங்களிலும் முஸ்லிம்களையும் அமைச்சர் ரிஷாட் பதியுதீனையும் மோசமாக கொச்சைப்படுத்தினர்.
தேசிய பிக்கு முன்னணி போலியான அறிக்கையொன்றை தயாரித்து ஜனாதிபதியிடம் கையளித்தது. “வில்பத்தை பாதுகாப்போம்” என்ற ஓர் பேரியக்கம் முகநூலில் உருவாக்கப்பட்டு தவறான தகவலகள் பரப்பப்பட்டன.
வடக்கு முஸ்லிம்களுக்கெதிரான இந்தப் போலிப் பரப்புரையின் விளைவினாலேயே இந்த வருடம் மார்ச் 24 ரஷ்யாவில் வைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன மாவில்லு, வெப்பல், கரடிக்குளி/மறிச்சுக்கட்டி, விலத்திக்குளம், பெரியமுறிப்பு ஆகிய ஒதுக்குக் காடுகளுக்கு உரியதான வர்த்தமானிப் பிரகடனமொன்றை வெளியிட்டார்.
இதன் மூலம் முஸ்லிம்களுக்கு சொந்தமான 40030.525 ஹெக்டேயர் விஸ்தீரணத்தைக் கொண்ட காணி கபளீகரம் செய்யப்பட்டது. ஜனாதிபதி மைத்திரியின் பிரகடனம் ”மரத்தால் விழுந்தவனை மாடேறி மிதித்தது” போலிருந்தது.
இவ்வாறான ஒரு பிரகடன முயற்சியொன்று இடம்பெறப் போவதாக செய்திகள் வெளியான போது அந்த மக்களின் பிரதிநிதியென்ற வகையில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மேற்கொண்ட முயற்சிகளை விலாவாரியாக வெளியிடுவது இப்பத்தியின் சுருக்கம் கருதி தவிர்த்துக் கொள்ளவேண்டியுள்ளது.
கொழும்பிலே மக்கள் பிரதிநிதிகளான ரிஷாட் பதியுதீன், அமீர் அலி, ஹிஸ்புல்லாஹ், பௌசி, மற்றும் முஜிபுர் ரஹ்மான், நவவி முஸ்லிம் மீடியா போரம், முஸ்லிம் கவுன்ஸில் உட்பட்ட சிவில் அமைப்புக்கள் சந்தித்து வர்த்தமானிப் பிரகடன ஆபத்துக்கள் குறித்து கலந்தாலோசித்தனர். அதன் பின்னர் கொழும்பு ரேணுகா ஹோட்டலில் முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என் எம் அமீன் தலைமையில் அமைச்சர்களான ரிஷாட் பதியுதீன், ஏ எச் எம் பௌசி, ஹிஷ்புல்லாஹ், எம்பிக்களான நவவி, இஷாக், முஜிபுர் ரஹ்மான் தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அஸாத்சாலி ஜம் இய்யதுல் உலமா மற்றும் முஸ்லிம் அமைப்புக்களின் பிரதிநிதிகளின் பங்கேற்புடன் ஊடகவியலாளர் மாநாடொன்றும் இடம்பெற்றது.
அதன் பின்னர் தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அஸாத்சாலி கொழும்பு ரமதா ஹோட்டலில் ஊடகவியலாளர் மாநாடொன்றை ஏற்பாடு செய்திருந்தார். மறிச்சுக்கட்டிச் சென்று உண்மை நிலைகளை அறிந்து வந்த சூழலியலாளர் உள்ளிட்ட குழுவினரும் அதில் கலந்து கொண்டு நிலமைகளை எடுத்துரைத்தனர்.
இதேவேளை ”வில்பத்து பாதுகப்பு இயக்கம்” தமது பிரச்சாரங்களை முடுக்கி விட்டதுடன் மாத்திரம் நில்லாது விகாரமகா தேவி பூங்காவில் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிரான ஒரு ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். வில்பத்துவைப் பற்றி தெரியாத அப்பாவி இளைஞர் யுவதிகளை சமூகவலைதளங்கள் மூலம் உசுப்பேற்றி விகாரமகாதேவிக்கு வரவழைத்த இனவாத இராட்சகர்கள் முஸ்லிம்களுக்கெதிரான கோஷங்களை எழுப்பினர். இத்துடன் நின்றுவிடாது இலங்கை மன்றக் கல்லூரியில் ஊடகவியலாளர் மாநாடொன்றையும் அவர்கள் நடத்தி பொய்க்கதைகளைப் பரப்பினர்.
இந்த சந்தர்ப்பத்தில் , அந்த பிரதேசத்தை நன்கு அறிந்த திலக் காரியவசம் தலைமையிலான குழுவினர் கொழும்பிலே தாங்களும் ஊடகவியலாளர் மாநாட்டை நடத்தி முஸ்லிம்கள் எந்தப் பிழையும் செய்யவில்லையென கூறினர்..
இத்தனை விளக்கங்கள் கொடுக்கப்பட்ட பின்னரும் இனவாதிகளின் வலைக்குள்ளே ஜனாதிபதி அகப்பட்டாரோ என்னவோ ரஷ்யாவில் வைத்து வர்த்தமானிப் பிரகடனத்தில் கையெழுத்திட்டார்.
வர்த்தமானிப் பிரகடனம் வெளிவந்ததையடுத்து கொழும்பிலே முஸ்லிம் சிவில் சமூக அமைப்புக்களுடன் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கலந்தாலோசனை செய்தார். . ஜம் இய்யதுல் உலமா தலைமைக் காரியாலயத்தில் இன்னும் சில இடங்களிலும் முக்கிய கூட்டங்கள் இடம்பெற்றன. அத்துடன் மட்டும் நின்று விடாது அமைச்சர் ரிஷாட் பதியுதீன் ஜானாதிபதியுடன் தொலைபேசியில் பேசினார். பிரதமரைச் சந்தித்தார். அஸாத்சாலி ஜனாதிபதியைச் சந்தித்தார்.
இந்த முயற்சியின் விளைவினாலே ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய மார்ச் 31 ஆம் திகதி ஜனாதிபதியின் செயலாளரை முஸ்லிம் சமூக அமைப்புக்கள் முஸ்லிம் கவுன்ஸிலின் தலைமையில் சந்தித்து வில்பத்து தொடர்பிலான சர்ச்சைக்கு முடிவு கட்டுமாறு கோரிக்கை விடுத்ததை அடுத்து தீர்வு தருவதாக அவர் வாக்குறுதி அளித்திருந்தார். எனினும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரத்தியேக நடவடிக்கைகளினால் தீர்வு முயற்சிகள் தள்ளிப் போயின.
மறிச்சுக்கட்டி பிரதேச மக்கள் தங்களுக்கு ஏற்பட்ட அநீதிகளை போக்குமாறு தொடர்ச்சியான போராட்டம் ஒன்றையும் ஆரம்பித்திருந்தனர். இந்தப் போராட்டத்திற்கு சிங்கள, தமிழ் முஸ்லிம் என பேதமின்றி அனைத்து சாராரும் ஒத்துழைப்பு நல்கினர்.
இந்த நிலையில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மேற்கொண்ட இன்னுமொரு முயற்சியின் பலனாக ஜனாதிபதியை அவரது உத்தியோக பூர்வ இல்லத்தில் முஸ்லிம் கவுன்ஸிலின் தலைவர் என் எம் அமீனின் தலைமையில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், பைசர் முஸ்தபா, மற்றும் அஸாத்சாலி உட்பட முஸ்லிம் அமைப்புக்களின் பிரதிநிதிகள், பாதிக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகள் ஆகியோர் சந்தித்தனர்.
ஜனாதிபதிக்கு விளக்கப்படங்களுடன் வில்பத்தின் உண்மை நிலையும் மறிச்சுக்கட்டி மக்களின் பரிதாபமும் எடுத்துரைக்கப்பட்டது. ஜனாதிபதியுடன் பேச்சை ஆரம்பித்த போது அவர் தொடக்கத்தில் தனது நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்க மாட்டார் என்றே இருந்தது. எனினும் “கல்லில் நார் உரிப்பது போல அவருடன் சந்த்திப்பில் கலந்துகொண்டோர் நிலைமையை தெளிவுபடுத்தியதனால் பிரச்சினையைத் தீர்க்கவேண்டுமென்ற நிலைப்பாட்டுக்கு அவர் வந்திருந்தார். சூழலைப் பாதுகாப்பதில் தான் உறுதியுடன் இருப்பதாகவும் தமிழ் முஸ்லிம் சிங்களம் என்ற பேதம் தன்னிடம் இருக்கவில்லையெனவும் அவர் தெரிவித்தார். தான் ஏதோ சொல்ல அதிகாரிகள் வேறு எதையோ செய்துவிட்டனர் என்று கூறிய ஜனாதிபதி தொலைபேசியில் அதிகாரிகளைக் கடிந்து கொண்டார். இருந்த போதும் அமைச்சர்களான ரிஷாட், பைஸர் முஸ்தப மற்றும் ஆஸாத் சாலி, என் எம் அமீன் ஆகியோரின் உருக்கமான உறுதியான பேச்சும் கலாநிதி நௌபலின் விளக்கமும் ஜனாதிபதியின் மனதை ஏதோ உறுத்தியிருக்க வேண்டும். இந்தப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவர வேண்டுமென்று அவர் நினைத்தாரோ என்னவோ ஜனாதிபதியின் செயலாளருடனான கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தார். அவருடனான பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட சாதகமான புரிந்துணர்வின் அடிப்படையில், ஜனாதிபதியின் சந்த்திப்பில் பங்கேற்றோர் மறிச்சுக்கட்டிக்குச் சென்று போராட்டக்காரர்களுக்கு சந்திப்பு குறித்து தெளிவு படுத்தினர். போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.
பின்னர் ஜனாதிபதி செயலகத்தில் மே 16 ஆம் திகதி ஜனாதிபதியின் செயலாளருடன் சந்திப்பு இடம்பெற்றது. முஸ்லிம் கவுன்ஸின் தலைமையிலான சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளும் அமைச்சர்களான ரிஷாட் பைஸர் மற்றும் அஸாத் சாலி ஆகியோர் இந்தச் சந்திப்பில் மீண்டும் தமது நிலைப்பாட்டை உறுதிபடத் தெரிவித்தனர்.
“1990 ஆம் ஆண்டு முஸ்லிம்கள் வெளியேற்றப்படுவதற்கு முன்னர் எவ்வாறு தமது வாழ்விடங்களில் வாழ்ந்தார்களோ அதே நிலையை உருவாக்கித் தருமாறு விடுத்த வேண்டுகோள்அங்கு ஏற்றுக் கொள்ளப்பட்டு அது தொடர்பில் ஒரு தீர்க்கமான முடிவை மேற்கொள்வதற்காக 3 பேர் கொண்ட குழுவொன்றும் அமைக்கப்பட்டது.
இந்தக் குழு ஒரு மாதத்தில் தமது பணிகளை நிறைவு செய்ய வேண்டுமெனவும் கோரப்பட்டுள்ளது. இந்தக் குழுவின் முடிவுகளை வனபரிபாலன திணைக்களம் ஏற்றுக் கொள்ள வேண்டுமென ஜனாதிபதியின் செயலாளர் அங்கு கூறிய பொதுக் கூட்டத்தில் பிரசன்னமாகியிருந்த வன பரிபாலன திணைக்கள பணிப்பாளர் நாயகம் அதற்கு உடன்பட்டமை ஈண்டு குறிப்பிடத்தக்கது.
மறிச்சுக்கட்டிப் பிரதேச மக்களின் காணிப் பிரச்சினைக்கு அரசியல்வாதிகளும் சமூக இயக்கங்களும் ஒன்றிணைந்து மேற்கொண்ட இடையறா முயற்சியின் பிரதிபலனே இவ்வாறான ஒரு பிரதான திருப்பத்திற்கு காரணமென்பதை துணிந்து கூறலாம்.
0 Comments