இலங்கை நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெறும் அநீதிகள் தொடர்பாக குரல் கொடுக்க யாருமில்லை என்ற நிலை தான் இத்தனை காலமும் நிலவி வந்தது.அண்மைக் காலமாக அந்த நிலை படிப் படியாக மாற்றம் பெற்று வருவதை அவதானிக்க முடிகிறது.பாராளுமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ்,அமைச்சர் றிஷாத் ஆகியோர் தங்களுக்கு கிடைக்கும் நேரங்களை மிகவும் சிறந்த முறையில் பயன்படுத்தி வருகின்றனர்.கடந்த 8ம் திகதி வரவு செலவுத் திட்ட குழு நிலை விவாதத்தில் உரையாற்றிய இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் மிகவும் காரசாரமாக பேசியிருந்தார்.இதன் பிறகு அவரும் பாராளுமன்றத்தில் முஸ்லிம்களின் பிரச்சனைகளை பேசும் ஒருவராக மாறியுள்ளார்.அவரின் பேச்சு இன்று ஒரு பேசு பொருளாக மாறியுள்ளது.சிலர் அவரை அஷ்ரப் மீண்டும் ஒரு அவதாரம் எடுத்து வந்தது போன்று புகழாரம் சூட்டுகின்றனர்.இன்னும் சிலர் வேலியில் சென்ற ஓணானை வேட்டிக்குள் விட்ட கதையாக வர்ணிக்கின்றனர்.
உரையின் சுருக்கம்
அவரது உரையில் முஸ்லிம்கள் வாழ்வது இஸ்லாத்திற்காகத் தான்,இஸ்லாத்தில் வாழ முடியாத நிலை வரும் போது அவர்களுக்கு எதிராக யுத்தம் செய்ய வேண்டும்,தொடர்ச்சியாக இஸ்லாம் நிந்திக்கப்படும் போது இளைஞர்களை எங்களால் கட்டுப்படுத்த முடியாது,இந்த நிலைமை தொடர்ந்தால் முஸ்லிம் இளைஞர்களும் ஆயுதம் ஏந்துவதை யாராலும் தடுக்க முடியாது,முஸ்லிம்களும் ஆயுதம் தூக்கினால் ஐம்பது அறுபது வருடங்கள் சென்றாலும் இந்த நாட்டை கட்டியெழுப்ப முடியாமல் போய்விடும்,இது பௌத்த நாடு,முஸ்லிம்களும் இந்த நாட்டின் சொந்தக் காறர்கள்,இலங்கை முஸ்லிம்கள் காட்டிக்கொடுப்பவர்கள் அல்ல ஆகியவற்றை முக்கியமான பேச்சுக்களாக சுட்டிக்காட்டாலாம்.இவைகள் ஒரு முஸ்லிமின் உள்ளத்தில் எப்போதும் பசு மரத்தானியாய் பதிந்திருக்கும் வார்த்தைகள்.ஒரு முஸ்லிமிற்கு இஸ்லாத்தை பின்பற்ற முடியாத நிலை ஏற்படும் போது இந்த வார்த்தைகள் வெளிப்படுவதும் அவர் கூறியவைகள் இடம்பெறுவதும் தவிர்க்க முடியாதவை.
அரசின் மீது நம்பிக்கையின்மை உரைக்கு அடித்தளமிட்டதா?
இன்று இலங்கை நாட்டின் பேரினவாத பயணத்தை பார்க்கின்ற போது இலங்கை மியன்மார் நாட்டின் சாயலைநெருங்குவதை அவதானிக்க முடிகிறது.இதனை இலங்கை அரசு முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்.ஓர் இரு வருடங்களாக இச் சம்பவங்கள் இடம்பெறுகின்றதென்றால் அதனை மென்மையான பேச்சுக்களில் எதிர்கொள்ள சிந்திக்கலாம்.ஒரு ஆட்சி மாற்றத்தின் மிகப் பெரும் பங்காளர்களாக இலங்கை நாட்டு முஸ்லிம்கள் இருந்து கொண்டு அவ் ஆட்சியிலும் முஸ்லிம்களுக்கு தீர்வில்லை என்றால் இனி ஒரு போதும் தீர்வு கிடைக்காது என்பதே யதார்த்தமான பார்வை.அண்மையில் மட்டக்களப்பிற்கு விஜயம் செய்த பொது பல சேனா அமைப்பினர் நீதிமன்ற தடை உத்தரவை பகிரங்கமாக கிழித்தெறிந்திருந்தனர்.இதற்கு முன்பும் பொது பல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் நீதி மன்றத்தை அவமதிக்கும் வகையில் செயற்பட்டு நீதி மன்றத்தினால் எச்சரிக்கப்பட்டிருந்தமை குறிப்படத்தக்கது.ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் செயலாளர் அப்துர் றாஷிகை நீதிமன்ற எச்சரிக்கையுள்ள நிலையில் ஞானசார தேரரை அவமதித்தார் என கைது செய்ய முடியுமாக இருந்தால் தொடர்ச்சியாக நீதி மன்றத்தை அவமதிக்கும் இந்த ஞானசார தேரரை ஏன்கைது செய்ய முடியாது.
நீதி கிடைக்கும் என்ற பூரண நம்பிக்கையுடன் செல்லக் கூடிய ஒரே ஒரு இடம் நீதி மன்றமாகும்.இவைகள் அரசியல்,இன,மத,பிரதேச வேறுபாடுகளுக்கு அப்பால் சுயாதீனமாக இயங்குவதே ஒரு நாட்டிற்கு மிகவும் சிறந்ததாகும்.உலகில் காணப்படும் நாடுகளில் நீதி மன்றம்,பாராளுமன்றம் ஆகியவற்றில் எது அதிகாரம் கூடியது சபை என்பதில் நாட்டுக்கு நாடு வேறுபாடுகளை கொண்டுள்ளது.இலங்கை பாராளுமன்றமானது இலங்கை அரசியலமைப்பை அடிப்படையாக கொண்டே செயற்படுகிறது.இலங்கை அரசியலமைப்பு இதனைத் தான் கூறுகிறதென கூறும் அதிகாரம் ஒரு நீதிமன்றத்திற்கே உண்டு.இந்த வகையில் நோக்கும் போது இலங்கையில் பாராளுமன்றத்தை விடவும் உயரிய சபையாக நீதி மன்றத்தை கூறலாம்.இந்த நீதி மன்றத்தையே கணக்கு எடுக்காமலும் அதனை அவமதிக்கும் வகையில் செயற்படுவதும் மிகவும் கண்டிக்கத்தக்கது.இன்னுமொரு வகையில் நீதி மன்றத்தை அவமதிப்பது இலங்கை நாட்டை அவமதிப்பதையும் விட பாரிய குற்றமாகும்.இம் மாபெரும் குற்றத்தை மேற்கொண்ட ஞானசார தேரர் இன்று அச்சமின்றி நடமாடுகிறார்.சிறு சிறு தவறுகளை செய்வோருக்குத் தான் நீதிமன்றம் தண்டனை வழங்குமென்றால் அந்த நீதி கட்டமைப்பு மிகவும் தவறானதாகும்.
இன்று ஞானசார தேரரை பாராளுமன்றம் அழைத்து வந்து அவருக்கு மதிப்பளித்து அவரிடம் கெஞ்சி கூத்தாடி இப்படி செய்ய வேண்டாம் என்ற நிலைக்கு இலங்கை அரசு வந்துவிட்டது.சிறிது காலத்திற்கு முன்பு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இவரை இலங்கையின் முன்னாள் பிரதமர்களில் ஒருவரான பண்டாரநாயக்கவை கொலை செய்த தேரருடன் ஒப்பிட்டு பாராளுமன்றத்திலேயே பேசி இருந்தார்.இது போன்று ஜனாதிபதி மைத்திரியும் இவரை கணக்கு எடுக்காத பாங்கில் செயற்படுமாறு கூறியிருந்தார்.முன்னாள் ஜனாதிபதிகளில் ஒருவரும் இவ்வாட்சியின் முக்கிய நாயகியுமான சந்திரிக்கா இவர் ஏதாவது செய்கின்ற போது நாய்க் கூண்டில் அடைப்போமென கூறியிருந்தார்.இன்றைய நிலைமை அவர்களை பாராளுமன்றத்திற்கு அழைத்து அவர்களையும் ஒரு பொருட்டாக மதித்து பேச்சுவார்த்தை நடாத்தப்படுகிறது.இவர்களை பாராளுமன்றத்தில் வைத்து பேச்சுவார்த்தை நடாத்துவது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல.இலங்கை அரசு இந்த இனவாதத்தை கட்டுப் படுத்தும் என்ற நம்பிக்கையை இலங்கை முஸ்லிம் மக்கள் இழந்துவிட்டனர்.
உரை பொருத்தமானதா?
இலங்கை முஸ்லிம் மக்கள் இவ்வரசும் முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதத்தை கட்டுப்படுத்தும் என்ற நம்பிக்கயை இழந்துவிட்டதன் காரணமாக இந்த நிலைமை தொடர்கின்ற போது ஏற்படக் கூடிய பாதிப்புக்களையும் முஸ்லிம்களின் நிலைப்பாடு பற்றியும் கூற வேண்டிய தேவை உள்ளது.அது ஒலிக்க மிகவும் பொருத்தமான சபை பாராளுமன்றம் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.இன்று இனவாதிகளின் போக்கு இஸ்லாத்திற்கு எதிராகவே உள்ளது.இவ்வுலகில் முஸ்லிம்கள் வாழ்வது இஸ்லாத்திற்காகவே என்ற விடயம் தெளிவுபடுத்தப்பட வேண்டும்.இனவாதிகளின் சில்லறை விளையாட்டுகளுக்கு அஞ்சி இஸ்லாமிய விழுமியங்களை ஒரு போதும் முஸ்லிம்கள் கைவிட மாட்டார்கள்.அதனை இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தனதுரையில் செவ்வனே செய்திருந்தார்.அவருடைய உரையில் இந்த நிலை தொடரும் போது முஸ்லிம் இளைஞர்கள் ஆயுதம் தூக்கி போராடுவதை தடுக்க முடியாது எனக் கூறியிருந்தார்.இது தான் விமர்சனவாளர்கள் தூக்கிப்பிடித்த பிரதான கூற்றாகும்.இந்த கூற்றை பல கோணங்களில் நோக்கலாம்.
இரு வீடுகளுக்கு சேர்த்து ஒரு பாதை மாத்திரமே உள்ளது.அதில் ஒரு வீட்டுக்காரன் நியாயமற்ற காரணங்கள் சிலவற்றை சுட்டிக்காட்டி இப்பாதையினூடாக மற்றயவரை பயணிக்க வேண்டாமென அச்சுறுத்துகிறார்.தற்போது குறித்த அச்சுறுத்தப்படும் நபருக்கு வெளியில் செல்ல முடியாத நிலை உள்ளது.இப்போது குறித்த அச்சுறுத்தும் நபருக்கு நீ செய்வது பிழையென ஒரு குறித்த எல்லை வரை தான் விளங்கப்படுத்த முடியும்.அதன் பிறகு நீதி கூறக் கூடியவர்களிடம் செல்லலாம்.அவர்களும் கையை விரித்தால் குறித்த எச்சரிக்கையாளரின் பாணியில் சென்று தான் அதனை வெல்ல முடியுமாக இருந்தால் வேறு வழியில்லை அதனை அப்படி சென்று தான் வெல்ல வேண்டும்.இதனை ஒரு போதும் தவறாக கூற முடியாது.இலங்கை முஸ்லிம்களும் இலங்கை குடியரசின் பிரஜைகளே.இன்று பொது பல சேனாவின் போக்கு இலங்கை முஸ்லிம்கள் இலங்கை பிரஜைகள் அல்ல என்ற பாங்கிலேயே அமைந்துள்ளது.இந்த நிலை தொடர்ந்தால் இறுதியில் இலங்கை முஸ்லிம்கள் இதற்கு தீர்வு கிடைக்காதென விரக்தியுற்று மனிதர்கள் என்ற வகையில் கடும் போக்கு பாணியை கடைப்பிடிக்க நிர்ப்பந்திக்கப்படலாம்.
பொது பல சேனாவின் அளுத்கமை கலவரத்தில் முஸ்லிம்களின் உயிர்களும் உடமைகளும் சேதமாக்கப்பட்டன.அது போன்று அவர்கள் இன்னுமொரு சம்பவத்தை நிகழ்த்தி காட்டுவோம் என்ற சவாலை மஹியங்கனையில் வைத்து கூறியுமிருந்தனர்.அண்மையில் அவர்கள்கண்டி,மட்டக்களப்பில் நடாத்திய ஆர்ப்பாட்டங்கள் இன்னுமொரு கலவரத்தை தூண்டும் பாணியிலும் அமைந்திருந்தன.ஒருவர் எம்மை எதுவித காரணமுமின்றி அநியாயமாக தாக்க வரும் போது நாம் கை கட்டி பார்த்துக்கொண்டிருக்காமல் அவரை எதிர்த்து தற்காப்பிற்காக தாக்க வேண்டும்.இன்று பாடசாலைகளில் தற்காப்பு பயிற்சிகள் போதிக்கப்படுகின்றன.அதிலும் குறிப்பாக பெண்களுக்கு.இதனை யாரும் தவறாக கூற முடியாது மாறாக அவசியமானது என்றே கூறுவார்கள்.இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் கூறிய விடயத்தை இந்த அடிப்படையில் நோக்கும் போது அது சிறிதும் தவறாக வாய்ப்பில்லை.முஸ்லிம்களுக்கு இலங்கையில் வாழ முடியாத நிலை தோன்றும் போது அவர்கள் தங்களை தாங்களே பாதுகாத்துக்கொள்ள ஆயுதம் ஏந்துவதை தவிர்க்க முடியாது.
இன்று அனைவரும் முஸ்லிம்களை தீவிரவாதிகளாகத் தான் பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.இதன் காரணமாகத் தான் இது விமர்சனப் பொருளாக மாறியிருந்தது.இதே கூற்றை வேற்று மதத்தை சேர்ந்த ஒருவர் கூறியிருந்தால் “சும்மா ஜோக் பண்ணாம் போங்க” என்ற நகைச்சுவை பாணியில் நோக்கியிருப்பார்கள்.உலகின் பல நாடுகளில் இஸ்லாமியர்கள் ஆயுதம் ஏந்தி பலரை கிலி கொள்ளச் செய்துள்ளனர்.அமெரிக்க போன்ற உலகின் ஆதிக்கை தன்னகத்தே கொண்டுள்ள நாடுகளையே ஆட்டம் காணச் செய்துள்ளது.இப்படி இருக்கையில் இலங்கை போன்ற நாடுகளிலும் முஸ்லிம்கள் ஆயுதம் தூக்கினால் அதனை இலங்கை போன்ற நாடுகள் சமாளிப்பது அவ்வளவு இலகுவானதல்ல.இந்த கோணத்தில் இவர்கள் நோக்குவதன் காரணமாகத் தான் இஸ்லாமியர்கள் ஆயுதம் தூக்குவார்கள் என்ற வார்த்தையை பெரிதாக தூக்கிப்பிடிக்கின்றனர்.இதனை பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ் பாராளுமன்றத்திற்கு வெளியில் வைத்து கூறியிருந்தால் அவர் தீவிரவாதத்தை ஊக்குவிக்கின்றார் என்ற குற்றச் சாட்டில் கைது செய்யப்பட்டிருக்கலாம்.
பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ் தனது பாராளுமன்ற உரையில் முஸ்லிம்கள் ஆயுதம் தூக்க தயாராகிவிட்டனர் எனக் கூறவில்லை.இனவாதம் தொடர்ச்சியாக தலைவிரித்தாடும் போது ஆயுதம் தூக்க நிர்ப்பந்திக்கப்டலாம் என்றே கூறுகின்றார் இலங்கை அரசும் பேரின மக்களும் இந்த கூற்றுக்கு அஞ்சுவார்களாக இருந்தால் அவர்களுக்கு இலங்கையில் தலைவிரித்தாடும் இனவாதத்தை கட்டுப்படுத்தும் எண்ணம் இல்லை என்பதே அது கூறும் செய்தி.பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ் முஸ்லிம் இளைஞர்கள் ஆயுதம் தூக்கலாம் எனக் கூறியது ஒரு எதிர்வு கூறலாக இருந்தாலும் இலங்கை மக்கள் வரலாறுகளில் இருந்து பெற்றுக்கொண்ட படிப்பினையாகும்.தமிழ் மக்கள் ஆயுதம் ஏந்தி போராட்டம் செய்ததற்கு இலங்கையை ஆண்ட அரசுகளின் செயற்பாடுகளும் பிரதான காரணமாகும்.ஹிஸ்புல்லாஹ் தனதுரையை இலங்கை முஸ்லிம்கள் இலங்கை நாட்டின் மீது பற்றுள்ளவர்கள் என்ற வகையில் தனது பேச்சை அமைத்தும் இலங்கை பௌத்த நாடு எனக் கூறியும் இனவாதிகளுக்கு தனது பேச்சின் காரத் தன்மையை குறைத்திருந்தார்.
இவரது உரை தவறானதாக இல்லாது இருந்தாலும் தவறான வகையில் அதனை மக்களிடம் கொண்டு சேர்க்க அதிகம் வாய்ப்புள்ளது.இவரது பேச்சின் காரத் தன்மையை குறைக்க அமைச்சர் றிஷாத்,பராளுமன்ற உறுப்பினர் அலி சாகிர் மௌலான ஆகியோர் முஸ்லிம்கள் ஆயுதக் காலாச்சாரத்தின் மீது நம்பிக்கையற்றவர்கள் என்ற வகையில் பேசி இருந்தனர்.இவர்களது உரைகள் ஹிஸ்புல்லாவின் உரை மூலம் பேரினவாதிகளிடம் ஏற்பட்ட சல சலப்புக்களை சற்று குறைக்க காரணமாகவிருந்திருக்கும் என்பதில் ஐயமில்லை.முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இவ்வாறு ஒற்றுமையாக செயற்பட முன் வர வேண்டும்.எதிர்வரும் காலங்களில் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் ஆயுதம் ஏந்துவார்கள் போன்ற வாசகங்களை நேரடியாக கூறாது அதற்கு பகரமாக தவறான பாதைக்கு சென்று விடுவார்கள் போன்ற மறைமுக வசனங்களை பாவிப்பது மிகவும் சிறந்தது.
இலங்கை பௌத்த நாடா?
பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ் தனதுரையில் இலங்கை பௌத்த நாடு என்பதை அழுத்தம் திருத்தமாக கூறியுள்ளார்.இதுவும் விமர்சனம் தோன்றிய இன்னுமொரு பகுதியாகும்.இலங்கையின் அரசியலமைப்பில் இலங்கை பௌத்த நாடு என்ற நேரடியான வார்த்தைகள் எங்குமில்லை.எனினும் இலங்கையின் அரசியலமைப்பு பௌத்த மதத்திற்கே முதன்மை தானம் வழங்குகிறது.இதனடிப்படையில் இலங்கை பௌத்த நாடு என்ற மறைமுக பொருளை வழங்குகிறது.இருந்தாலும் இலங்கையில் பல்லின மக்கள் வாழ்வதை இலங்கை அரசியலமைப்பு ஏற்றுக்கொண்டுள்ளது.இதனடிப்படையில் நோக்கும் போது இலங்கையை ஒரு பல்லின நாடாகவும் கூறலாம்.இலங்கை நாட்டில் கால் பங்கினருக்கும் அதிகமாக வேறு இன மக்கள் வாழ்வதாலும் வேறு சில நியாயமான காரணங்களின் அடிப்படையில் இலங்கையை ஒரு பல்லின நாடாக கூறுவதே மிகவும் பொருத்தமானது.
தற்போது இலங்கை நாட்டு முஸ்லிம்கள் வார்த்தையில் பிழை பிடிக்கும் நிலையில் இல்லை.பிச்சை வேண்டாம் நாயை பிடி என்ற நிலையிலேயே உள்ளனர்.இலங்கை நாட்டை யார் எப்படி வேண்டுமென்றாலும் அழைத்து கொள்ளட்டும்.முஸ்லிம்கள் இலங்கையில் வாழ்வதற்கான சுதந்திரத்தை வழங்கினால் மாத்திரமே போதுமாகும்.குறித்த தினம் பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ் மிகவும் காரசாமாக பேசியிருந்ததால் அதன் மூலம் ஏற்படக் கூடிய இனவாத சிந்தனைகளை ஈடு செய்து முஸ்லிம்களின் நிலைப்பாட்டை புரிந்துகொள்ள இவ்வாறான விடயங்கள் அவசியமானவை.இதன் மூலம் முஸ்லிம்கள் இலங்கை நாட்டில் அடிப்படை தேவைகளை தான் கோரிகின்றனர் என்பது தெளிவாகும்.
விஜயதாச ராஜபக்ஸவின் குறுக்கீடு
ஹிஸ்புல்லாஹ்வின் காரசாரமான உரையின் போது குறுக்கிட்ட விஜயதாச ராஜபக்ஸ முஸ்லிம் அமைச்சர்களும் உறுப்பினர்களும் அளுத்கமை கலவரம் ஏற்பட்ட போது வாய் மூடி இருந்ததாகவும் அவரும் லக்ஸ்மன் கிரியல்லையுமே முஸ்லிம்களுக்கு சார்பாக கதைத்ததாகவும் கூறியிருந்தார்.இதன் மூலம் இலங்கை நாட்டின் ஆட்சியாளர்கள் முஸ்லிம் தலைமைகளை பதவிக்கும் பணத்திற்கும் சோரம் போனவர்களாக கருதுகின்றமை புலனாகின்றது.இனவாதத்தை அடக்க கோரிக்கை விடுத்ததால் வேறு விடயங்களை கூறி முஸ்லிம்களை அடக்க நினைப்பது ஒரு நீதி அமைச்சருக்கு அழகல்ல.அவர் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் கூறியதை பிழையாக கருதியிருப்பின் அதற்கான நியாயங்களை எடுத்துரைத்திருக்கலாம்.அளுத்கமை கலவரத்தின் பின்பு முஸ்லிம் உறுப்பினர்கள் மிகவும் காரசாரமான பேச்சுக்களை பேசியிருந்தனர்.முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாறூக் பாராளுமன்றத்தில் வைத்து முஸ்லிம்கள் தங்களை தாங்களே பாதுகாக்க ஆயுதம் தாருங்கள் என கேட்டிருந்தார்.இது போன்று அமைச்சர் றிஷாத் அமைச்சரவை கூட்டத்தை விட்டு காரசாரமாக விவாதித்து எழுந்து சென்ற போது அவரை பிடித்து ஆசுவாசப்படுத்தியிருன்தனர்.அமைச்சர் ஹக்கீமின் உரையும் மிகவும் பலமாக இருந்தது.எனவே,அந் நேரம் அவர்கள் வாய் மூடி இருந்ததாக கூற முடியாது.இருந்தாலும் பதவி பட்டங்களோடு சுகபோகமாக இருந்தார்கள்.
அன்று விஜயதாஸ ராஜபக்ஸ முஸ்லிம்களுக்கு சார்பாக இருந்தவர் என்றால் தற்போது அவரிடம் நீதி அமைச்சு உள்ளது.அன்று நடந்த அளுத்கமை நிகழ்விற்கு நீதி பெற்றுக்கொடுப்பாரா? குறைந்தது விசாரணையாவது முன்னெடுப்பாரா? குறித்த விஜயதாஸ பக்ஸவின் வினாவிற்கு பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ் சிறப்பான பதிலை அளித்திருந்தார்.அந்த ஆட்சி முஸ்லிம்களுக்கு தீர்வை தராது என்பதால் தான் நாங்கள் இந்த ஆட்சியை நிறுவினோம் எனக் கூறியிருந்தார்.இருந்தாலும் ஹிஸ்புல்லாஹ் இந்த பதிலை கூற தகுதியற்றவர்.இந்த ஆட்சியை நிறுவ அவர் சிறிதும் முயலவில்லை.
ஹிஸ்புல்லாஹ்வின் பேச்சின் பின்புலம்
.இத்தனை காலமும் மௌனமாக இருந்த இவருக்கு திடீரென சமூகப்பற்று வந்ததன் காரணமென்ன என்ற வினாக்கள் அலைமோதுகின்றன.இராஜாங்கஅமைச்சர் ஹிஸ்புல்லாஹ் அபிவிருத்தி அரசியலில் நாட்டம் கொண்டவர்.அவர் காரசாரமான உரைகளை நிகழ்த்தும் போது அபிவிருத்தி போன்ற செயற்பாடுகளை செய்ய முடியாது போய் விடும்.அவர் இதுவரை காலமும் காரசாரமான உரைகளை நிகழ்த்தாமைக்கு இதுவும் ஒரு காரணமாகும்.அப்படி என்றால் தற்போது அவருக்கு தேசியப்பட்டியலும் வழங்கி இராஜாங்க அமைச்சும் வழங்கி கௌரவித்துள்ளார்களே என கேட்கலாம்.அன்று ஹிஸ்புல்லாஹ் மஹிந்த ராஜ பக்ஸவைகொண்டு காத்தான்குடிய அழகிய ஊராக மாற்றியமைத்தார்.தற்போது மஹிந்த காலத்தில் அவர் செய்தது போன்று சேவைகளை செய்ய முடியவில்லை.அதற்காக இது மாத்திரம் தான் காரணம் என கூறவில்லை.இனவாதிகளின் பார்வை காத்தான்குடியின் மீது விழுந்துள்ளது.தற்போது அவர்கள் மட்டக்களப்பையும் அண்மித்துவிட்டனர்.இதன் பிறகும் மௌனித்திருப்பது மிகவும் ஆபத்தானதென இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் கருதியிருக்கலாம்.அவர் இழந்த மதிப்பை மீட்டுக்கொள்ளும் காலமும் இது தான்.
ஹிஸ்புல்லாஹ்வை பாராளுமன்றத்தில் பேச ஊக்குவிப்போம்
நாம் அவர் இவ்வளவு நாளும் ஏன் கதைக்கவில்லை? அவர் அதனால் தான் கதைக்கின்றார்.இதனால் தான் கதைக்கின்றார் என விவாதிக்காமல் அவரை பாராட்டுவதன் மூலம் இன்னும் இன்னும் அவரது குரல்கள் பாராளுமன்றத்தில் ஒலிக்க ஆர்வமூட்ட வேண்டும்.இன்று அவரை தவறாக காட்டி இன்னுமொருவரை புகளுமளவு அரசியல் வாதிகள் யாருமில்லை.அவரது உரையில் தவறுகள் ஏதேனும் இருப்பின் அதனை அவர் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் அழகிய முறையில் சுட்டிக்காட்ட வேண்டும்.இன்று வெளிவரும் சில விமர்சனங்கள் அவரது பேச்சுக்களை முடக்கிவிடலாம்.அரசியலுக்காக நாம் செய்யும் சில விடயங்கள் பாரிய விளைவுகளை கொண்டு வரும்.ஹிஸ்புல்லாஹ்வின் உரைக்கு வாழ்த்துக்களே குவிந்தன.முஸ்லிம் சமூகத்தின்ஹிஸ்புல்லாவிற்கான ஆர்வமூட்டல்களும்,வாழ்த்துக்களும் தங்களது அரசியல் வாழ்வில் மண்ணை அள்ளி போட்டு விடுமென ஏனைய அரசியல் வாதிகளை இருக்க விடக்கூடாது.
துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறை.
0 Comments