(நேர்காணல்- எஸ்.அஷ்ரப்கான்)
கேள்வி: உங்களைப் பற்றி சுருக்கமாக அறிமுகம் செய்யமுடியுமா?
பதில்: என்னுடைய பெயர் உதுமான் கண்டு நாபீர் நான் சாய்ந்தமருதுவைப் பிறப்பிடமாகக் கொண்டவன். தற்போது திருமணம் முடித்து சம்மாந்துறையை நிரந்தர வசிப்பிடமாகக் கொண்டவன். நான் கட்டட நிர்மாணத்துறையில் சர்வதேச அங்கிகாரம் பெற்ற பல்கலைக் கழகத்தில் முதுமாணி பட்டத்தனையும் நிறைவு செய்துள்ளேன். எனது தொழில் நிமிர்த்தம் காரணமாக கட்டார் நாட்டிலே பிரபல நிறுவனமொன்றில் பணியாற்றி வருகின்றேன்.
கேள்வி: நாபீர் பவுண்டேஷனை அமைத்து அதனூடாக பல்வேறு சமூகப் பணிகளை செய்து வருகின்றீர்கள் அதுதொடர்பில் குறிப்பிட முடியுமா?
பதில்: நான் நாபீர் பவுண்டேஷனை 1989 ஆம் ஆண்டு காலப்பகுதியில் கா.பொ.த சாதாரண தரம் படிக்கின்ற காலப்பகுதியில் ஆரம்பித்தேன்;. எனது பாடசாலை காலங்களில் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்கு பொருளாதார ரீதியாக மிகவும் கஷ்டப்பட்டேன.; அப்போது தொழில்துறையில் அதிக ஈடுபாடுகொண்டு எனது கற்றல் நடவடிக்கைக்கான பணங்களையும் சம்பாதித்துக்கொள்வேன். அக்காலப்பகுதியில் பல துன்பங்களையும் எதிர்கொண்டேன். நான் பட்ட கஷ்டங்களை எமது சமூகம் எதிர்நோக்கக்கூடாது என்பதற்காகவும் ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவ வேண்டும் என்பதற்காகவுமே இவ்வமைப்பை ஆரம்பித்தேன்
காலப்போக்கில் எனது அமைப்பு வளர்ச்சியடைந்து இன்று கிழக்கு மாகாணம் பூராகவும் அதன் பணியை விஸ்தரித்துக்கொண்டு செல்லுகின்றது. இதனூடாக கல்வி, கலாச்சார, விளையாட்டு மற்றும் சமூக சேவைகள் போன்ற துறைகளில் மறைமுகமாகவும், நேரடியாகவும் தங்குதடையின்றி எனது பணியை முன்னெடுத்துச் செல்லுகின்றேன். இவற்றுக்கான நிதியினை எனது சொந்த வருமானத்திலிருந்து 30 வீதமான நிதிகளை ஒதுக்கி வருகின்றேன் இது எனது மறுமை வாழ்வுக்கு பிரயோசனமாக இருக்கவேண்டும் எனும் நோக்கத்திலே எனது பணியை தொடர்கின்றேன்.
கேள்வி: எதிர்காலத்தில் நீங்கள் அரசியலுக்குள் நுழையப்போவதாக கூறப்படுகிறது அதில் ஏதும் உண்மையுண்டா?
பதில்: நான் அன்று நாபீர் பவுண்டேஷனை உருவாக்கியது அரசியலுக்குள் வரவேண்டும் என்பதற்கல்ல. நான் பல வருடகாலமாக சமூகப்பணிகளை மேற்கொண்டுவருவதனால் மக்கள் மத்தியில் ஒரு எதிர்பார்ப்பு இருந்தது அரசியலுக்குள் நுழைய வேண்டும் என் பணி தொடர வேண்டும் என்கின்ற அவா பலரிடத்திலும் காணப்பட்டது. அதுமாத்திரமல்ல கடந்த பொதுத் தேர்தலிலும் போட்டியிடுமாறு எனக்கு பல கட்சி மட்டங்களிலிருந்தும் அழைப்புக்கள் வந்தது. என்னையும் எனது ஆதரவாளர்கள் தேர்தலில் குதிக்குமாறும் பணித்தார்கள் இதுதான் உண்மை. இருந்தாலும் இந்த மாவட்டத்திலுள்ள மக்களுக்கு நல்ல பல பணிகளைச் செய்ய வேண்டும் என்கின்ற எண்ணம் எனக்குள் இருக்கின்றது. எதிர்காலத்தில் எனது ஆதரவாளர்கள் கோரினால் அரசியலில் களமிறங்குவது பற்றி யோசிக்கலாம்.
கேள்வி: சமூகப் பணிகளை செய்துவந்த நீங்கள் அரசியலை விரும்பக் காரணம் என்ன?
பதில்: நான் யாருடைய பணத்தையும் சுரண்டாமல் சமூகப்பணி செய்துவருகின்றவன். என்னுடைய மனதிலுள்ள மிகக்கவலையான விடயம் என்னவென்றால் தேர்தல் வருகின்றபோது போட்டியிடுகின்றவர்களை மக்கள் மலையாய் நம்பி ஏமாறுகின்ற விடயமே. இதில் குறிப்பாக இளைஞர்களே ஏமாற்றப்படுகின்றார்கள். எமது பிரதேச மக்களுக்கு பயனுள்ள விடயங்களை செய்கின்றபோது நான் பூரண ஒத்துழைப்புக்களை வழங்குகின்றவன். சமூகத்தினை ஏமாற்றுகின்றவர்களை வெளிப்படையாக எதிர்க்கின்றவன.; ஆனால் மக்கள் நம்பி வாக்களித்தவர்களும் அவர்களுடைய குடும்பங்களும் மாத்திரம் சுகபோகங்களை அனுபவிப்பதனை என்னால் ஏற்றுக்கொள்ளவும் முடியாது, பார்த்துக்கொண்டிருக்கவும் முடியாது. எனவே எதிர்காலத்தில் அரசியல் அதிகாரத்தினூடாக எனது பணியை மேலும் திறம்படச் செய்யலாம் என்ற நிலை வருமானால் அதனால் நமது சமூகம் நன்மையடையும் நிலை ஏற்படுமாக இருந்தால் நிச்சயமாக அரசியலில் குதிப்பேன்.
கேள்வி: உங்களது அரசியல் பயணம் எதிர்காலத்தில் எவ்வாறு அமையும்?
பதில்: நான் கடந்த தேர்தலில் ஏதாவது ஒரு அரசியல் கட்சியில் இணைந்து போட்டியிட்டு இருந்தால் எமது முஸ்லிம் சமூகத்தினுடைய அரசியல் பலம் பாதிப்படைந்திருக்கக்கூடும் என்பதற்காக நான் மௌனம் காத்தேன். ஆனால் நான் எந்தக் கட்சியையும் சார்ந்தவனல்ல. மிகவிரைவில் நடக்கப்போகின்ற உள்ளுராட்சி சபை தேர்தலில் நாபீர் பவுண்டேஷன் சில வேளை கிழக்கு மாகாணம் எங்கும் களமிறங்கலாம். இது சாத்தியமானால் எதிர்வரும் காலங்களில் பிரதான அரசியல் கட்சிகளுடனும் பேசவுள்ளேன். அதில் எங்களுக்கு சாதகமான முடிவுகள் எட்டப்படுமாக இருந்தால் இணைந்தும் செயற்படுவேன்.
கேள்வி: பிரதான அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடாத்தப் போவதாக கூறுகின்றீர்கள் குறிப்பாக எந்தக்கட்சியுடன் பேசப்போகின்றீர்கள்?
பதில்: எனக்கு பல அரசியல் கட்சிகளும் கடந்த தேர்தலில் காலப்பகுதியில் அழைப்பு விடுத்தது. இருந்தாலும் இந்த நாட்டில் மீண்டும் முக்கியமான தேர்தல் மிக விரைவில் நடைபெறப்போகிறது மீண்டும் பிரதான கட்சிகள் எங்கள் மீது கவனம் செலுத்தும் என நினைக்கின்றேன்.
கேள்வி: அமைச்சர் றிசாட் பதியுதீனுடைய கட்சியின் அம்பாரை வியாபகம் தொடர்பாக குறிப்பிட முடியுமா? இதில் நீங்கள் இணையும் வாய்ப்புள்ளதா ?
பதில்: அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியானது கடந்த பாராளுமன்ற தேர்தலில் அம்பாரை மாவட்டத்தில் தனித்து களமிறங்கியது அம்பாரை மாவட்டத்திற்கு தேசியப் பட்டியல் வழங்கப்படும் என்ற கோசத்துடன் தேர்தல் பிரச்சாரத்தினை முன்னெடுத்த அக்கட்சி சுமார் முப்பத்து மூவாயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்று சிறிதளவு வாக்குகளினால் ஆசனம் நலுவிப்போனது இறுதியில் நம்பிக்கையோடு வாக்களித்த அம்மாவட்டத்திற்கே அக்கட்சியின் தலைமை துரோகமிழைத்தது. இவ்வாறு இந்த மாவட்டத்தையே ஏமாற்றிய கட்சியோடு இணைந்தும் பலனில்லை இந்தக்கட்சி மீது அம்பாரை மாவட்ட மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர் எனவே இவ்வாறான கட்சியோடு நான் ஒருபோதும் இணைந்து செயற்படமாட்டேன்.
கேள்வி: இப்போது பேசுபொருளாக மாறியுள்ள வடக்கு கிழக்கு இணைப்பு தொடர்பில் உமது கருத்தென்ன ?
பதில்: உண்மையில் தனிப்பெரும் பூர்வீகத்தை கொண்டுள்ள முஸ்லிம்களும் இந்நாட்டு தேசிய இனமே என்பதை ஏனையோர் மறுக்க முடியாது. அந்தவகையில் முஸ்லிம்களின் வாழ்விடத்தில் அவர்களை தனிமைப்படுத்துவது அல்லது தனித்துவத்தை இழக்கச் செய்வது பிரிதொரு இனத்திற்கு ஆரோக்யமானதல்ல. இதனால் வடக்கும் கிழக்கும் பிரிந்திருந்து அதற்கும் தமிழ் முஸ்லிம் உறவுகள் பலப்படுத்தப்பட்ட வாழ்கையை வாழ்வதே சிறந்த முடிவாகும். இதற்காக தமிழ் தரப்பினர் தங்களது விடாப்பிடியான நடவடிக்கைகளை நிறுத்திக்கொண்டு செயற்படுவதே சிறந்தது. இதுவே மக்கள் எதிர்பார்ப்பாகவும் உள்ளது என்பதனால் விட்டுக் கொடுப்புடன் தமிழினம் செயலாற்ற முன்வர வேண்டும்.
கேள்வி: எதிர்காலத்தில் உங்களுடைய அமைப்பினால் எவ்வாறான பணிகளைச் செய்ய உத்தேசித்துள்ளீர்கள்?
பதில்: எதிர்காலத்தில் நல்ல பல திட்டங்களை செய்வதற்கு திட்டமிட்டுள்ளேன் குறிப்பாக எனது தொழில் நிறுவனத்தினூடாக கிழக்கு மாகாணத்தில் சுமார் 2000 பேருக்கு தொழில் வாய்ப்பினை வழங்க திட்டமிட்டுள்ளேன.; விசேடமாக வறிய பிள்ளைகளின் கல்வி விடயத்தில் கவனம் செலுத்தி அவர்களுக்கு தேவையான உதவிகளைச் செய்யவுள்ளேன.; வறிய மக்களுக்கும் பல்வேறுபட்ட உதவிகளைச் செய்யவுள்ளேன். அதிகாரங்கள் மேலும் கைகூடுகின்றபோது இதனை பன்மடங்காக விஸ்தரித்து செயலாற்ற முடியும் என்ற நம்பிக்கை எனக்குண்டு.
0 Comments