சென்னை,
சென்னையில் ‘வர்தா’ கரையை கடக்க தொடங்கியது. பிற்பகல் 1 மணிக்கு மேல் பொதுமக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என சென்னை மாநகராட்சி அறிவித்து உள்ளது.
தென்கிழக்கு வங்க கடலில் கடந்த 7-ந்தேதி உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று தாழ்வு மண்டலமாக மாறியது. பின்னர் அது புயலாகவும் உருவானது. ‘வார்தா’ என்று பெயரிடப்பட்ட இந்த புயல் மேலும் வலுப்பெற்று அதிதீவிர புயலாக மாறியது.
வார்தா புயல் சென்னைக்கு கிழக்கே 20 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டு உள்ளது. சென்னையை நோக்கி மிக வேகமாக நகர்ந்து வரும் புயல் கரையை கடக்க தொடங்கிவிட்டது. சென்னை அருகே வர்தா புயல் கரையை கடக்க தொடங்கிவிட்டதாக செயற்கைக்கோள் புகைப்படத் தகவல் தெரிவிக்கிறது. கரையை நோக்கி நகர்ந்து வருவதால் சென்னையை புயல் தாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சென்னை, திருவள்ளூர் காஞ்சீபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்யும், தமிழகத்தின் வடமாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது.
வர்தா புயல் பிற்பகல் 2 மணி முதல் 5 மணிக்குள் கரையை கடக்கும். புயல் கரையை கடக்கும் போது காற்றின் வேகம் குறைந்து காணப்படும். புயல் கரையை கடக்கும் போது 100 முதல் 130 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. உள்மாவட்டங்களில் 50 முதல் 60 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. சென்னையில் 80 கி.மீ. வேகத்தில் காற்று வீசத் தொடங்கிவிட்டது. புயல் கரையை கடக்கும் போது 120 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என்று எச்சரிக்கப்பட்டு உள்ளது.
திருவள்ளூர் பழவேற்காடு சுற்றியுள்ள பகுதியில் உள்ள மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். அங்கு பலத்த காற்று வீசிவருகிறது. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர். பலத்த காற்று வீசுவதால் மின்கம்பங்கள் மரங்கள் சாய்ந்து உள்ளன.
பழவேற்காடு உப்பு நீர் ஏரிக்கு அருகில் உள்ள 5 கிராமங்களில் சாலைகள் துண்டித்து உள்ளது.

0 Comments