Advertisement

Main Ad

தமிழர்களினதும் முஸ்லிம்களினதும் அந்நியோன்ய உறவை ஆயுதக் கலாசாரமே சீர்குலைத்தது. சிலாவத்துறை நீர்ப்பாசன பொறியியளாலர் அலுவலக திறப்பு விழாவில் அமைச்சர் றிஷாட்.


அமைச்சின் ஊடகப்பிரிவு.  

அந்நியோன்யமாக வாழ்ந்த தமிழர்களினதும் முஸ்லிம்களினதும் உறவையும் நட்பையும் ஆயுததாரிகளே சீர் குலைத்ததாகவும் அதனாலேயே அந்த மக்களுக்கிடையிலான நல்லெண்ணம் பாழாகியதாகவும் அமைச்சர் றிஷாட் பதியுதீன் கூறினார்.

மன்னார் சிலாவத்துறையில் நீர்ப்பாசன, நீர் முகாமைத்துவ அமைச்சின் கீழான பொறியியலாளர் அலுவலகம் திறந்து வைக்கும் நிகழ்வில் அதிதியாக அமைச்சர் பங்கேற்றார். நீர்ப்பாசன நீர் முகாமைத்துவ அமைச்சர் விஜித் விஜிதமுனி சொய்சா பிரதம அதிதியாக கலந்து கொண்டு திறந்து வைத்த இந்த அலுவலகம் அமைச்சர் றிஷாட்டின் பகீரத முயற்சியினால் அமைக்கப்பட்டது.

 இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன், மாகாணசபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன், நீர்ப்பாசன பணிப்பாளர் நாயகம், அமைச்சின் உயர் அதிகாரிகள், விவசாயிகள் மற்றும் சமூக நல விரும்பிகள்

பங்கேற்றனர். அமைச்சர் றிஷாட் பதியுதீன் இங்கு கூறியதாவது:

யுத்தத்தின் காரணமாக மன்னார் மாவட்டத்திலே வாழ்ந்த சகல சமூகங்களும் ஒட்டு மொத்தமாக மோசமாக பாதிக்கப்பட்டிருக்கின்றன. இங்கு வாழ்ந்த முஸ்லிம்கள் விரட்டப்பட்டதால் புத்தளத்துக்கு சென்றனர். தமிழர்களில் ஒரு சாரார் இந்தியாவுக்கும் இன்னும் ஒரு பகுதியினர் முல்லைத்தீவு கிளிநொச்சி போன்ற இடங்களுக்கும் பாதுகாப்புக் கருதி இடம் பெயர்ந்தனர்.

கிறிஸ்தவர்களை அதிகமாகக் கொண்ட மன்னார் மாவட்டத்தில் முஸ்லிம்களும் இந்துக்களும் சகஜமாகவும் சந்தோஷமாகவும் வாழ்ந்ததே வரலாறு.

இடம் பெயர்ந்த தமிழ் மக்கள் யுத்த முடிவின் பின்னர் படிப்படியாக மன்னாரில் குடியேறினர். இறுதி யுத்தத்தின் உச்ச கட்டத்தில் மெனிக்பாமில் தஞ்சமடைந்திருந்த சுமார் மூன்று இலட்சம் தமிழ் மக்களை யுத்தம் முடிவடைந்த பின்னர் தமது சொந்த இடங்களில் குடியேற்ற அரசு முடிவு செய்தது. அப்போது மீள் குடியேற்ற அமைச்சராக நானே பணியாற்றினேன். எனினும் நீண்ட காலமாக அகதி முகாம்களில் வாழ்ந்து வரும் முஸ்லிம்களில் ஒரு குடும்பத்தைக் கூட தமது சொந்த இடங்களில் நாம் குடியேற்றவில்லை. தமிழ் மக்களின் குடியேற்றத்தின் பின்னர் இதனை மேற்கொள்ள முடியும் என்ற அரசின் கொள்கையே அதற்கு காரணமாகும். முஸ்லிம்களை மீள்குடியேற்றும் காலம் கனிந்து வந்த போது நான் இன்னுமொரு அமைச்சை பொறுப்பேற்றிருந்தேன். எனினும் மீள் குடியேற்ற அமைச்சை பொறுப்பேற்றவர்கள் முஸ்லிம்களின் குடியேற்றத்தில் ஆர்வம் காட்டவில்லை.

தமிழ் மக்கள் யுத்த காலத்தில் பட்ட அவஸ்தைகளை நான் அறிவேன். அப்போது வடக்கிலே நானும் அமைச்சர் டக்ளசுமே அந்த மக்களுக்கு உதவினோம். வேறெந்த அரசியல்வாதியும் இங்கிருக்கவில்லை.
மன்னாரில் உள்ள கட்டுக்கரைக் குளத்தை நான் அப்போது புனரமைக்க நடவடிக்கை எடுத்த போதும் அதனை முழுமையாக சீர் செய்ய முடியவில்லை. அந்த சமயத்தில் மக்களில் பெரும்பாலானோர்;

இங்கு குடியேறியிருக்கவுமில்லை. இங்குள்ள அதிகாரி சில்வாவுக்கு நாம் இந்த விடயங்களில் எவ்வளவு இதய சுத்தியாக பணியாற்றினோம் என்பது நன்கு தெரியும். கட்டுக்கரைக் குளத்தையும் மல்வத்து ஓயாத் திட்டத்தையும் புனரமைத்து பூர்த்தி செய்து தருமாறு இந்த சந்தர்ப்பத்தில் நான் அமைச்சரிடம் வேண்டுகோள் விடுக்கின்றேன். அகத்திமுறிப்புக் குளத்தையும் வியாயடிக் குளத்தையும் நாம் புனரமைக்க நடவடிக்கை எடுக்கும் போது சிலர் இனவாத கண்ணோட்டத்துடன் சேறு பூசுகின்றனர். குளங்களை அபிவிருத்தி செய்தால் அது எல்லா இன மக்களுக்குமே பயனளிக்கும். அதே போன்று நீர்ப்பாசன திணைக்களத்தின் பணிப்பாளர் அலுவலகத்தையும் பொறியியலாளர் அலுவலகத்தையும் முசலி, முருங்கன் பிரதேசத்தில் நாம் அமைக்க முயற்சிகள் எடுத்த போது எம்மை வேற்றுக் கண்ணோட்டத்துடன் தூஷித்தனர். அதிகாரிகளில் சிலர் எமது அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க மறுக்கின்றனர். பல்வேறு பிரயத்தனங்களின் மத்;தியிலேயே நாம் இந்த முயற்சிகளை மேற்கொடு வருகின்றாம்.

குளங்களை ஒழுங்கான முறையில் பரிபாலித்து உச்ச பயனை பெறுவதற்கே அலுவலகங்கள் அமைக்கப்பட்டன. இதன் மூலமே விவசாய நடவடிக்கைகளை மேலும் ஊக்குவிக்க முடியும். எனினும் இதனை பிழையான அர்த்தத்தில் சிலர் பார்க்கின்றனர். குறுகிய அரசியல் இலாபங்களுக்காக நான் இதனைச் செய்யவில்லை. சமூகத்தின் நன்மை கருதியே இதனை மேற்கொண்டேன்.

இங்குள்ள அதிகாரிகள் சிலர் சில்லறைத்தனமான சின்னத்தனமான செயல்களில் ஈடுபடுவதை இனிமேலாவது தவிர்த்துக் கொள்ள வேண்டும். மூன்று தசாப்தகால யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு அனைத்தையும் இழந்த இந்த மக்களின் மனோ நிலையை அவர்கள் அறிந்து செயற்பட வேண்டும். விவசாயிகளோ மீன்பிடித் தொழிலாளர்களோ அவர்கள் எவராக இருந்தாலும் நாகரிகமாக கதைப்பார்கள் என அதிகாரிகள் எதிர்பார்க்க முடியாது.

வறுமையில் வாடும் அவர்களின் வார்த்தைப் பிரயோகங்களில் சில தவறுகள் ஏற்படலாம். அதனைத் தூக்கிப்பிடித்து அவர்களைப் பழிவாங்கத் துடிப்பது அதிகாரிகளுக்கு அழகல்ல. அரசியல்வாதிகளாயினும் சரி அதிகாரிகளாயினும் சரி அவர்கள் மக்களின் பணத்திலேயே சம்பளம் பெறுபவர்கள். நாமெல்லாம் வானத்தில் இருந்து வந்து குதித்தவர்களும் அல்லர். என்னைப் போன்று அமைச்சர் விஜிதமுனி சொய்சாவும் அடிமட்டத்தில் இருந்து அரசியலுக்கு வந்தவரே. அதனால்தான் அவர் நம்மை இன்று தேடி வந்து நமக்கு உதவியளிக்கின்றார்.

16 வருட அரசியல் வாழ்வில் எனக்கு இன்று மிகவும் சந்தோஷமான நாள். அதே வேளை அதிகாரிகள் சின்னத்தனமாக நடந்து கொள்வதையிட்டு நான் வேதனையுடன் கூறிக்கொள்ளும் நாளாகவும் இதனை நான் இன்று பதிவு செய்ய விரும்புகின்றேன் என்று அமைச்சர் கூறினார்.  

Post a Comment

0 Comments