கலாபூஷணம் எம்.எம். மன்ஸூர், மாவனெல்ல.
கலை, இலக்கிய சமூக சஞ்சிகையான பூங்காவனம் இதுவரை மூத்த படைப்பாளிகள், இலக்கியவாதிகளான பெண் எழுத்தாளர்களை நேர்காணல் செய்து அவர்களது புகைப்படத்தை அட்டைப் படத்தில் பிரசுரித்து அவர்கள் பற்றிய தகவல்ளையும் பிரசுரித்து வந்தது. 26 ஆவது இதழில் பன்முகப் படைப்பாளியாக விளங்கும் இளம் தலைமுறை எழுத்தாளரான தியத்தலாவ எச்.எப். ரிஸ்னாவின் அழகிய புகைப்படம் முன் அட்டையை அலங்கரிக்கின்றது. வழமை போன்று சிறுகதை, கவிதை, கட்டுரை, நூல் மதிப்பீடு, வாசகர் கடிதம், நூலகப் பூங்கா என பல்வேறுபட்ட அம்சங்கள் இதழில் இடம்பெற்றுள்ளன.
யுனெஸ்கோ 1965 ஆம் ஆண்டு பிரகடனப்படுத்திய எழுத்தறிவு தினம் செப்டம்பர் 8 ஆம் திகதி என்பதை ஆசிரியர் வாசகர்களுக்கு நினைவுபடுத்தி எழுத்தறிவின் முக்கியத்துவத்தைப் பற்றியும் இலக்கியத்தின் அவசியம் பற்றியும் வலியுறுத்தியிருக்கிறார்.
அட்டைப்படத்தை அலங்கரிக்கும் எச்.எப். ரிஸ்னாவைப் பற்றி இலக்கிய உலகம் நன்கு அறிந்திருந்தாலும் இதழிலுள்ள குறிப்புக்கள் அவர் பற்றி மேலும் அறிந்துகொள்வதற்கு உறுதுணையாக இருக்கின்றன. மலையகத்தின் பதுளை மாவட்டத்தில் தியத்தலாவையைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் ஜனாப். கே.எம். ஹலால்தீன் - பீ.யூ. நஸீஹா தம்பதியரின் புதல்வியாவார். தாயார் ஓய்வு பெற்ற ஆசிரியர். இதனால் இவரது கல்வியில் அதிக கவனம் எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. எச்.எப். ரிஸ்னா கஹகொல்லை அல் பத்ரியா மு.ம.வி, வெலிமடை மு.ம.வி, பண்டாரவளை சேர் ராசிக் பரீட் மு.ம.வி ஆகியவற்றில் கல்வி கற்றுள்ளதுடன் தனியார் நிறுவனங்களில் கணினிப் பயிற்சிப் பாடநெறிகளை பூர்த்தி செய்து, கொழும்பு பல்கலைக்கழகத்தில் இதழியல்துறை பாடநெறியையும் மேற்கொண்டுள்ளார். தற்பொழுது கல்வி வெளியீட்டுத்த திணைக்களத்தில் பணியாற்றி வருகின்றார்.
பாடசாலைக் காலத்திலேயே கவிதைத் துறையில் அதிக ஆர்வம் கொண்டிருந்ததால் பாடசாலை மட்டப் போட்டிகளில் பங்குபற்றி பரிசில்களைத் தட்டிக்கொண்டுள்ளார். காத்திருப்பு என்ற கவிதையை 2004 இல் எழுதியதைத் தொடர்ந்து இலக்கியத் துறையில் நுழைந்து இதுவரை ஒன்பது நூல்களை வெளியிட்டிருக்கின்றார். கவிதை, சிறுகதை, நூல் விமர்சனம், சிறுவர் இலக்கியம், மெல்லிசைப் பாடல்கள் ஆகிய துறைகளில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றார். இவரது பாடல்கள் நேத்ரா அலைவரிசையில் ஒலி, ஒளிபரப்பப்பட்டுள்ளதுடன் பாடகர் கலைக்கமல் அவர்களால் வெளியிடப்பட்ட ''மண் வாசனையில் மகரந்தப் பூக்கள்'' இறுவட்டிலும் வெளிவந்திருப்பது இவரது திறமைக்கு எடுத்துக்காட்டாகும்.
இவர் அகில இலங்கை மட்டப் போட்டிகளிலும் பங்குபற்றி பரிசில்களைப் பெற்றுள்ளதோடு சிறந்த பாடலாசிரியர், சிறந்த சிறுகதை எழுத்தாளர், காவிய பிரதீப, எழுசுடர் ஆகிய பட்டங்களையும் விருதுகளையும் பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த இதழில் நாட்காட்டிகளோடு நாம், வாழ்க்கைச் சங்கிலி, புலப்பெயர்வு, செறிவோம் தமிழ்மொழி, சுயநலம், தடம் மாறிய மனிதம், தண்ணீரும் கண்ணீரும், விடை கேட்கிறேன், நினைவுகள் ஆகிய தலைப்புகளில் கவிதைகள் இடம்பிடித்துள்ளன. இவற்றை முறையே பதுளை பாஹிரா, பி.ரி. அஸீஸ், திக்வல்லை கமால், மருதூர் ஜமால்தீன், எம்.எஸ்.எம். சப்ரி, மிஹிந்தலை பாரிஸ், என். சந்திரசேகரன், ஆ. முல்லைதிவ்யன், காத்தான்குடி றுஷ்தா ஆகியோர் எழுதியியுள்ளனர்.
பயண அனுபவம், மனித மனங்கள், நல்ல உம்மா, மாற்றங்கள், உண்மை பேசும் இதயங்கள் என்ற தலைப்புகளில் சிறுகதைகள் இடம்பிடித்துள்ளன. இவற்றை முறையே சூசை எட்வேட், ஏ.சீ. ஜரீனா முஸ்தபா, கலாபூஷணம் எம்.எம். அலி அக்பர், ச.முருகானந்தன், எஸ்.ஆர். பாலசந்திரன் ஆகியோர் எழுதியுள்ளனர்., இலக்கிய அனுபவ அலசலை கவிஞர் ஏ. இக்பாலும், கவிதைகளுடனான கைகுலுக்கல் நூல் பற்றிய மதிப்பீட்டை பதுளை பாஹிராவும், எழுத்தாளர் முத்துமீரான் பற்றிய குறிப்புகளை ரிம்ஸா முஹம்மதும் எழுதியுள்ளனர்.
நூலகப் பூங்காவில் 16 நூல்கள் பற்றிய குறிப்புகள் இடம்பெற்றுள்ளதுடன் வாசகர் கடிதமும் இடம்பெற்றிருக்கின்றமை இதழில் காத்திரத்துக்கு வலு சேர்க்கின்றது. மொத்தத்தில் பூங்காவனம் இதழ் பல்சுவைக் களஞ்சியமாக இருக்கிறது என்பதில் மிக்க மகிழ்ச்சி!!!
கலாபூஷணம் எம்.எம். மன்ஸூர், மாவனெல்ல.
0 Comments