லங்கா ஈ நியூஸ் ஊடகவியலாளர் பிரகீத் எக்நெலிகொட காணாமல் போன சம்பவம் தொடர்பில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ கைது செய்யப்படக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எக்நெலிகொட காணாமல் போன விவகாரம் தொடர்பில் விசாரணைகள் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
இராணுவப் புலனாய்வுப் பிரிவின் உயர் அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் இந்த சம்பவம் தொடர்பில் ஏற்கனவே கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
எக்நெலிகொடவை கைது செய்யுமாறு உத்தரவிட்ட கடந்த அரசாங்கத்தின் உயர் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் மட்டுமே கைது செய்யப்படாமல் எஞ்சியிருப்பதாக கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.
இந்த கொழும்பு ஊடகம் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸவையே குறித்து நிற்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
எக்நெலிகொடவை கடத்தி அச்சுறுத்தியமை தொடர்பில் கேணல் சம்மி குமாரரட்னவிற்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் அளவிற்கு ஆதாரங்கள் திரட்டப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கேணல் சம்மிக்கு யார் உத்தரவிட்டார்கள் என்பது குறித்த விபரங்கள் வெளியிடப்பட்டால் அதன் அடிப்படையில் கோதபாய ராஜபக்ஸ கைது செய்யப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.
0 Comments