பாதுகாப்பு காரணங்களைக் காட்டி உலக இருபது 20 கிரிக்கெட் போட்டிகளில் பாகிஸ்தான் பங்குபற்றத் தவறினால் அந் நாட்டு கிரிக்கெட் சபைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐ.சி.சி.) எச்சரித்திருப்பதாக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டிருப்பது அர்த்தமற்றது என பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் நிறைவேற்றுக் குழுத் தலைவர் நஜாம் சேதி தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கு பயணிப்பதற்காக பாகிஸ்தான் அரசின் அனுமதியைப் பெறும்பொருட்டு பாகிஸ்தான் கிரிக்கெட் சபை எழுத்துமூலம் கோரிக்கை விடுத்துள்ளதாக நாங்கள் அவர்களுக்கு (ஐ.சி.சி) அறிவித்துள்ளோம்.
இவ் விடயத்தில் அரசாங்கத்தின் அனுமதிக்கான பதிலுக்காக காத்திருக்கின்றோம்’’ என பாகிஸ்தான் ஊடகம் ஒன்றுக்கு சேதி தெரிவித்துள்ளார்.
‘‘இவ் விடயத்தில் வேறொன்றும் இல்லை. இவ் விடயம் தொடர்பாக சர்வதேச கிரிக்கெட் பேரவை எம்மிடம் எதனையும் கேட்கவுமில்லை, நாங்கள் அது பற்றி அவர்களிடம் தொடர்பு கொள்ளவும் இல்லை’’ என அவர் மேலும் கூறினார்.
‘‘இந்தியாவில் வரும் மார்ச் மாதம் நடத்தப்படவுள்ள உலக இருபது 20 கிரிக்கெட் போட்டிகள் தொடர்பாக பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் சபை கவலைப்படுவது அடிப்படையற்றது.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு குறித்து (ஐ.சி.சி.) திருப்தி அடைந்துள்ளது’’ என ஊடகமொன்றில் வெளியான செய்தி ஒன்றில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அந்த செய்தி அறிக்கையில், ‘‘பெருமளவிலான பாகிஸ்தான் போட்டியாளர்கள் இந்தியாவுக்கு பயணித்து தெற்காசிய விளையாட்டு விழாவில் கலந்துகொள்ள முடியுமாக இருந்தால், சர்வதேச கிரிக்கெட் பேரவையின் முக்கிய போட்டியில் 20 பாகிஸ்தானியர்களை பங்குபற்றச் செய்வதற்கு அனுமதிக்க முடியாததற்கு காரணம் எதுவும் இல்லை’’ எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் அணி இந்தியா விஜயம் செய்வதற்கு அரசாங்கம் அனுமதிக்காத பட்சத்தில் தங்களது உலக இருபது 20 கிரிக்கெட் போட்டிகளை நடுநிலையான மைதானத்தில் நடத்துமாறு சர்வதேச கிரிக்கெட் பேரவையிடம் பாகிஸ் தான் கிரிக்கெட் சபைத் தலைவர் ஷஹாரியார் கான் கடந்த 9 ஆம் திகதி கோரிக்கை விடுத்திருந்தார்.
சர்வதேச கிரிக்கெட் பேரவை உலக இருபது 20 கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவில் மார்ச் 8 ஆம் திகதி முதல் ஏப்ரல் 3ஆம் திகதிவரை நடைபெறவுள்ளன.
பாகிஸ்தான் அணிக்கு இந்தியாவில் குறிப்பிடத்தக்க அச்சுறுத்தல் இருப்பதால் தமது இந்திய விஜயம் அரசாங்கத்தின் அனுமதியிலேயே தங்கியிருப்பதாக கான் கூறியிருந்தார்.
பாகிஸ்தானுக்கு குறிப்பிடத்தக்க அளவு அச்சுறுத்தல் இருப்பது அண்மைய சம்பவங்கள் எடுத்துக்காட்டுவதாக கான் தெரிவித்தார்.
‘‘பங்களாதேஷில் அவுஸ்திரேலியாவுக்கு இருந்தது போன்ற சாதாரண அச்சுறுத்தல்கள் அல்ல அவை. எனி னும் 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கட் போட்டிகளுக்கு அவுஸ்திரேலியா தனது அணியை அனுப்பவில்லை’’ என்பதை கான் சுட்டிக்காட்டினார்.
பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக இளையோர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளிலிருந்து அவஸ்திரேலியா வாபஸ் பெற்றிருந்தது.

0 Comments