விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கவும், அவர்களின் திறமைகளை வெளிக்காட்டுவதற்கு சிறந்த மைதானனங்களே களமாக அமைகின்றது. ஆனால் மலையக பகுதிகளில் காணப்படும் மைதானங்கள் எந்தளவுக்கு விளையாட்டு வீரர்களுக்கு உகந்ததாக அமைந்துள்ளது என்பது கேள்விக்குறியதே!
ஏனைய மாவட்டங்களில் விளையாட்டு மைதானங்கள் உட்பட தேவையான விளையாட்டு உபகரணங்கள் போன்றவைகள் கிடைக்கபெறுகின்றன. மலையக விளையாட்டு வீரர்களை மலையக அரசியல்வாதிகள் தேர்தல் காலத்தில் மாத்திரமே அவர்களை அழைத்து மிகவும் தரம் குறைந்த மட்டைகள், பந்துகள் வழங்குகின்றனர்.
அந்தவகையில் டிக்கோயா சலங்கந்தை நோனாதோட்டத்தில் காணப்படும் மைதானம் ஓரளவு பரப்பளவை கொண்டதாகும். கடந்த பல வருடங்களாக மைதானம் பராமரிப்பு அற்ற நிலையில் புற்கள் வளர்ந்து மேடு பள்ளமாகவும் குன்றும் குழியுமாக காணப்படுகின்றது. கடந்த வருடம் அமைச்சர் திகாம்பரத்தின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் மேற்படி மைதானம் புணரமைப்பு செய்வதற்கு பணிகள் ஆரம்பிக்கப்பட்ட போதிலும் முழுமையாக புணரமைக்கப்படாமல் கைவிடப்பட்ட நிலையில் தற்போது காணப்படுகின்றது.
எனினும் இது தொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டால் சாக்குபோக்கு கூறுவதாக இப்பகுதி விளையாட்டு வீரர்கள் தெரிவிக்கின்றனர்.
அரசியல்வாதிகள் மைதான அபிவிருத்தி வேலைகளை முன்னெடுப்பதில் அக்கரைக்காட்டுவதில்லை. அத்தோடு மைதானத்தைப்பற்றி சிந்திப்பதும் இல்லை.
நீர் மைதானம் முழுவதும் நிரம்பி சேறும் சகதியுமாக காணப்படுகின்றது. இதனால் மைதானத்தில் சில பகுதிகள் மண்ணரிப்பு ஏற்பட்டு மைதானத்தின் பரப்பளவு குறைந்து வருகின்றமை சுட்டிக்காட்ட வேண்டிய விடயமாகும்.
இப்பிரதேச விளையாட்டு வீரர்களின் நலன் கருதி நுவரெலியா மாவட்டத்தில் இருக்கின்ற அரசியல் தலைவர்கள் உடனடியாக மைதானத்தினை மேற்பார்வை செய்து மைதான புணரமைப்பை செய்து தருமாறு பிரதேச மக்கள் கோரிக்கைவிடுக்கின்றனர்.