தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு விடயத்தில் சரியான தீர்வு ஒன்றினை காண்பதற்காக தமிழ் முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் அமைச்சர் மனோ கணேசன், பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்த குமார் ஆகியோருடன் தீர்க்கமான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதனடிப்படையில் கூடிய விரைவில் சம்பள உயர்வு தொழிலாளர்களுக்கு பெற்றுத்தரப்படும் என மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு வசதிகள், மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.
மனிதவள அபிவிருத்தி பொறுப்பு நிதியத்தின் கீழ் இருந்த ஒரு தொகை கூரை தகடுகள் நுவரெலியா மாவட்டத்திலுள்ள குறித்த 7 தோட்டங்களில் (தலவாக்கலை, ஸ்டர்ஸ்பி, கவரவில, இன்வெரி, லொயினோல், டெரிக்கிளயார், கரோலினா) வாழும் மக்களின் பாவனைக்காக 40 இலட்சம் ரூபா பெறுமதியான கூரை தகடுகள் 01.12.2015 அன்று பொது மக்களுக்கு கையளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் அமைச்சர் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்..
இன்று நமது மக்கள் மத்தியில் ஒற்றுமை பிறக்க வேண்டும். கட்சி வேறுபாடு இன்றி செயல்பட்டால் வெற்றி நிச்சயம் என்பதை மக்கள் உணர வேண்டும். நான் எந்தவித வேறுபாடும் இன்றி மக்களுக்கு சேவை செய்வதை இலக்காக கொண்டுள்ளேன். எனவே எதிர்வரும் காலங்களில் தோட்ட தொழிலாளர்களின் உணர்விற்கு மதிப்பளித்து எனது சேவையை முன்னேடுப்பேன்.
நோர்வூட் நகரத்தில் அமைந்துள்ள பொது விளையாட்டு மைதானம் கடந்த காலங்களில் அராஜக நடவடிக்கைகளின் ஊடாக முன்னெடுக்கப்பட்டது. இனிமேல் அவ்வாறான செயற்பாட்டிற்கு நான் ஒருபோதும் இடமளிக்கமாட்டேன்.
இன்றைய வேளையில் கட்சிகள் பாராபட்சமற்ற அபிவிருத்திகளை முன்னெடுப்பதற்காக அனைத்து தொழிலாளர்களும் சமம் என்ற ரீதியில் கூரை தகடுகள் வழங்கப்படுகிறது. இதனூடாக இயற்கையில் பாதிக்கப்படும் தொழிலாளர்கள் அணைவரும் இதனை எந்த வேறுபாடுமின்றி பாவிக்க வேண்டும் என நான் பொது மக்களுக்கு வழியுறுத்துகிறேன்.
நல்லாட்சி அரசாங்கம் தோட்ட தொழிலாளர்கள் மீது கரீசனை காட்டுவதற்கு பலத்தை அளித்தவர்கள் தோட்ட தொழிலாளர்களே. இதனை அடிப்படையாக கொண்டு அபிவிருத்தி வேலைகளை முன்னெடுத்து ஏனைய இனத்தவருடன் உரிமை பெற்ற சமூகமாக வாழ்வதற்கு நீங்கள் உங்கள் குறைகளை தெரிவிக்க அதிகப்பட்ச வாக்குகளின் மூலம் என்னை பாராளுமன்றம் அனுப்பியுள்ளீர்கள்.
இதனூடாக மக்களுடைய எதிர்கால முன்னேற்றத்தை கருத்திற்கொண்டு செய்ய வேண்டிய அனைத்து அபிவிருத்தி வேலைகளையும் நான் செய்வேன் என்பதில் அச்சம் தேவையில்லை என்றார்.