கடந்த திங்கட்கிழமை மும்பையிலிருந்து புதுடில்லிக்குச் செல்வதற்காக இண்டிகோ நிறுவனத்தின் விமானமொன்றில் இப்பெண் பயணம் செய்யவிருந்தார்.
ஆனால், அவர் குட்டையான ஆடை அணிந்திருந்தமையால் அவ்விமானத்திற்குள் ஏற அனுமதிக்கப்படவில்லை என இண்டியன் எக்ஸ்பிரஸை மேற்கோள்காட்டி ஏ.எவ்.பி. செய்தி வெளியிட்டது.
குறித்த பெண், இண்டிகோ விமான சேவை நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் என அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
தனது சகோதரி இந்நிறுவனத்தில் பணியாற்றுவதால் அவர் விசேட டிக்கெட் ஒன்றைப் பெற்று கடந்த திங்களன்று பயணம் செய்யவிருந்தார்.
ஆனால், மேற்படி பெண்ணின் ஆடை முழங்காலுக்கு மேல் இருந்தது எனவும் இது மேற்படி விமான சேவை நிறுவனத்தின் தனது ஊழியர்களுக்கான ஆடை விதிகளுக்கு முரணானது எனவும் தம்மை இனங்காட்ட விரும்பாத மேற்படி அதிகாரி தெரிவித்துள்ளார்.
“இந்நிறுவனத்தின் ஊழியர்களும் அவர்களால் பரிந்துரை செய்யப்படும் குடும்ப அங்கத்தவர்களும் விசேட ஆடை விதிகளை பின்பற்ற வேண்டும்” எனவும் அவர் தெரிவித்தார்.
குறித்த பயணி பின்னர் தனது ஆடையை மாற்றிக்கொண்டு வேறொரு விமானத்தில் பயணம் செய்தார் எனவும் சாதாரண பயணிகளுக்கு ஆடை விதிகள் எதுவும் இல்லை எனவும் மேற்படி அதிகாரி கூறினார்.