தாய்லாந்தில் குப்பைகளைச் சேகரிக்கும் தொழிலாளியாக பணியாற்றும் பெண் ஒருவரின் மகள் அழகுராணி போட்டியொன்றில் முதலிடம் பெற்றுள்ளார்.
கனிஷ்தா மின்ட் பேஷாங் எனும் இந்த யுவதி அழகுராணியாக முடிசூட்டப்பட்ட பின், குப்பைத் தொட்டிகளுக்கு அருகில் நிற்கும் தனது தாயாரை, அழகுராணி கிரீடத்தை அணிந்த நிலையில் வீழ்ந்து வணங்கிய காட்சி பலரினதும் மனதை நெகிழச் செய்துள்ளது.
தாய்லாந்தில் நடைபெற்ற மிஸ் அன்சென்சர்ட் நியூஸ் தாய்லண்ட்' எனும் அழகுராணி போட்டியில் கனிஸ்தா முதலிடம் பெற்றார்.
17 வயதான கனிஷ்தா பேஷாங், மிக வறுமையான குடும்பத்தைச் சேர்ந்தவர். கனிஷ்தா சிறு குழந்தையாக இருந்தபோதே அவரின் தந்தையும் தாயும் பிரிந்துவிட்டனர்.
வறுமையில் உழன்றபோதிலும் தனது அழகை பேணுவதில் கனிஷ்தா கவனம் செலுத்தினார். கல்வியிலும் அவர் சிறந்து விளங்கினார்.
தனது குடும்பப் பின்னணி குறித்தோ, தனது தாயாரின் தொழில் குறித்தோ அவர் தாழ்வு மனப்பான்மை கொள்ளவில்லை.
குப்பை சேகரிப்பில் தனது தாயாருக்கு உதவுவதுடன் வேறு சில சிறிய வேலைகளிலும் ஈடுபட்டு தனது குடும்பத்தினருக்கு அவர் உதவி வந்துள்ளார்.
தனது நண்பிகளின் ஊக்குவிப்பு காரணமாக 'மிஸ் அன்சென்சர்ட் நியூஸ் தாய்லண்ட் 2015' அழகுராணி போட்டியில் பங்குபற்றுவதற்கு அவர் விண்ணப்பித்தார்.
இந்த அழகுராணிப் போட்டியின் இறுதிச் சுற்று கடந்த மாதம் 25 ஆம் திகதி நடைபெற்றது. இதில் கனிஸ்தா பேஷாங் முதலிடம் பெற்று அழகுராணியாக முடிசூட்டப்பட்டார்.
இவ்வெற்றியின் பின்னர், கனிஷ்தா நேரடியாக தனது வீட்டுக்கு வந்து தனது தாயாரை தேடிச் சென்றார்.
அப்போது வழக்கம் போல் குப்பைத் தொட்டிகளுக்கு அருகில் நின்றுகொண்டிருந்த தாயாரை முழந்தாளிட்டு வணங்கினார் கனிஷ்தா.
இது தொடர்பாக கனிஷ்தா கூறுகையில், 'நான் இன்றைய நிலைக்கு வருவதற்கு எனது தாயார் தான் காரணம்.
நானும் அவரும் நேர்மையான ஒரு தொழிலைச் செய்து வாழ்க்கை நடத்துகிறோம்.
எனவே தான் தாழ்வு மனப்பான்மை கொள்வதற்கு எந்த காரணமும் இல்லை' எனத் தெரிவித்துள்ளார்.
'அழகுராணி போட்டியில் முதலிடம் பெற்றவராக எனது பெயரை நடுவர் அறிவித்தபோது, அது எனக்கு ஒரு கனவு போல் இருந்தது.
என்னைப் போன்ற சாதாரண ஒரு பெண் எப்படி அழகுராணியாக முடியும் என நான் எண்ணியிருந்தேன்.
எனது தாயாரின் கடும் உழைப்பினால் தான் நான் இந்நிலையை அடைந்துள்ளேன்' என்கிறார் மின்ட் கனிஷ்தா.
அழகுராணி போட்டியில் வெற்றி பெற்றதையடுத்து, விளம்பரங்கள், தொலைக்காட்சிகள் மற்றும் திரைப்படங்களில் பணியாற்றுவதற்கு வாய்ப்புகள் கிடைத்துவருவதாக மின்ட் கனிஷ்தா கூறுகிறார்.
இது தனது குடும்பத்தை பொருளாதார நிலையில் உயர்த்தக்கூடும் என்றபோதிலும் தனது தாயார் தொடர்ந்தும் குப்பை சேகரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார் எனவும் மின்;ட் கனிஷ்தா தெரிவித்துள்ளார்....