தலவாக்கலை நகரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பஸ் தரிப்பு நிலையம் 31.10.2015 அன்று பொது மக்களின் பாவனைக்கு அங்குராப்பணம் செய்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, மலையக புதிய கிராம உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் பி.திகாம்பரம், பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவீன் திஸாநாயக்க, மத்திய மாகாண சபை உறுப்பினர்களான ஆர்.இராஜாராம், சோ.ஸ்ரீதரன், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.பியதாஸ, முன்னால் நகர பிதா அசோக சேபால, தலவாக்கலை லிந்துலை நகரசபையின் செயலாளர் அஜித் புஸ்பகுமார மற்றும் பல முக்கியஸதர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியினூடாக சுமார் 7 கோடியே 65 இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள பஸ் தரிப்பு நிலையம் தலவாக்கலை பிரதேசத்திற்கு நவீன முறையில் அமைக்கப்பட்டுள்ள இரண்டு மாடி பஸ் தரிப்பு நிலையமாகும்.
இதில் மேல் மாடியில் கடை தொகுதியும் சிற்றூண்டிசாலைகளும் அமைக்கப்பட்டுள்ளதுடன் கீழ் தொகுதியில் தகவல் பரிமாறும் நிலையம் மற்றும் கடைகள், காரியாலயங்கள் என அமைக்கப்பட்டுள்ளன.
சுமார் 1 வருட காலத்திற்கு மேலான காலப்பகுதியில் பஸ் தரிப்பு நிலைய வேலைகள் பூர்த்தியடைந்தும் மக்களின் பாவனைக்கு வழங்க தாமதங்கள் ஏற்பட்டு வந்தன.
போக்குவரத்து அமைச்சு தலவாக்கலை லிந்துலை நகர சபைக்கு அங்கீகாரத்தை வழங்காத பட்சத்தில் இதுவரை காலமும் திறக்கப்படாமல் இருந்த இவ் பஸ் தரிப்பு நிலையம் 31.10.2015 அன்று வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடதக்கது.