Advertisement

Main Ad

முஸ்லிம் சமூகத்திற்கெதிராக இடம்பெற்ற அட்டூழியங்களை எல்லாம் மூடிமறைத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு சாமரை வீசியவரே இந்த அஸ்வர்.


            அஸ்ரப் ஏ சமத்

முன்னாள் எம்பி அஸ்வர் தன்னை ஆளாக்கிய ஐக்கிய தேசியக் கட்சிக்கு செய்த பாரிய துரேகங்களைவிட அமீர் அலி எம்பி அப்படியொன்றும் பெரிதாக துரோகம் எதையும் செய்யவில்லையென்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கொள்கை பரப்புச் செலாளரும் கிழக்கு மாகாண சபை பிரதி தவிசாளருமான எம்.எஸ்.சுபைர் அறிக்கையொன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.

அ.இ.ம.கா தலைவர் றிஷாத் பதியுதீன் எம்பி மற்றும் அக்கட்சியின் பிரதித் தலைவர் அமீர் அலி எம்பி ஆகியோர் தொடர்பில் முன்னாள் எம்பி அஸ்வர் தெரிவித்து வரும் கருத்துகள் குறித்து இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது ஐ.தே.கவின் தேசியப் பட்டியலில் மூன்று முறை எம்பியாகியவர் ஏ.எச்.எம்.அஸ்வர். அக்கட்சி எம்பி பதவியை அவருக்கு வழங்கியதோடு மட்டும் நின்றுவிடாமல் அவரை அமைச்சராகவும், பிரதியமைச்சராகவும் நியமித்து அழகுபார்த்தது.

எனினும் நான்காம் முறை தேசியப் பட்டியலில் எம்பி பதவி கிடைக்காத ஒரே ஒரு காரணத்திற்காக உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்து கட்சியிலிருந்து வெளியேறி மஹிந்த அரசுடன் சங்கமித்ததை மக்கள் இன்று மறந்துவிடவில்லை. ரனில் விக்கிரமசிங்கவின் முதுகில் குத்திவிட்டு பதவிக்காக சோரம்போன அஸ்வர் இற்றை வரை முஸ்லிம் சமூகத்திற்கு எதையுமே செய்யவில்லை.

முஸ்லிம் சமூகத்திற்கெதிராக இடம்பெற்ற அட்டூழியங்களை எல்லாம் மூடிமறைத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு சாமரை வீசியவரே இந்த அஸ்வர்.

கொழும்பிலும் நாட்டின் ஏனைய இடங்களிலும் பள்ளிவாசல் தாக்கப்பட்டும், பர்தாக்கள் கழட்டப்பட்டும் முஸ்லிம்களின் புனித தலங்களில் பன்றியிறைச்சி வீசப்பட்டும் அட்டூழியங்கள் நடந்தபோதும் வாய் மூடி மௌனியாக இருந்தவர்தான் இந்த முன்னாள் எம்பி.

முன்னாள் அமைச்சர் றிஷாத்தும் ஏனைய முஸ்லிம் தலைவர்களும் சமூகத்திற்காக கொதித்தெழுந்தபோது அதற்கு நீருற்றி அணைக்க முற்பட்டு பல்வேறு சந்தர்ப்பங்களில் மூக்குடைபட்டவர். பெட்டிப்பாம்பாக அடங்கியிந்த அஸ்வர் சமூகத்தின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு முன்வராமல் அரசாங்கத்தை பாதுகாக்கும் வகையில் பாராளுமன்றத்திலும் ஊடகங்களிலும் துதிபாடியவர். எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் முஸ்லீம்களுக்கு எதிரான இனவாத செயற்பாடுகளை கண்டித்து கொண்டு வந்த கண்டனத்தீர்மானத்தை காட்டுக்கூச்சலிட்டு குழப்பிய பெருமையும் இந்த பெருமகனையே சாரும்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் அதன் தலைவர் றிஷாத் பதியுதீன் அமைச்சுப் பதவியை தூக்கியெறிந்து விட்டு முஸ்லீம் சமூகத்திற்காக எதிரணியில் இணைந்து கொண்டார்.

ஆனால் முன்னாள் எம்பி அஸ்வரோ தனக்கு எம்பி பதவி கிடைக்கவில்லை என்ற அங்கலாய்ப்பில் தான் சார்ந்திருந்த ஐ.தே.கவுக்கு துரோகம் இழைத்துவிட்டு அரசுடன் இணைந்து கொண்டார்.

கிழக்கு மாகாண சபை தேர்தலில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஓட்டமாவடி பள்ளிவாசல் சம்மேளனத்தின் முன்னிலையில் அமீர் அலிக்கு எம்பி பதவி தருவதாக கொடுத்த வாக்குறுதி இவ்வளவு காலமும் இழுத்தடிக்கப்பட்டு இப்போதுதான் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. அது கட்சிக்கு உரித்தான எம்பி பதவியே. தற்போதைய கால சூழ்நிலையில் அரசாங்கத்தில் தொடர்ந்தும் அங்கம் வகிப்பதை முஸ்லீம் சமூகம் விரும்பாத நிலையிலேயே எமது கட்சி வெளியெறியது.

எமது கட்சி சமூகத்தை முன்னிலைப்படுத்தியே இந்த முடிவை எடுத்ததேயொழிய எவருக்கும் துரோகம் செய்வில்லை என்பதை எம்மை விமர்சிப்போர் புரிந்து கொள்ளவேண்டும். இவ்வாறு சுபைர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.