கல்முனை மாநகரின் தற்போதைய முதல்வர் சட்டத்தரணி எம்.நிஸாம் காரியப்பரின் புகைப்படம் தாங்கிய பதாதை மாகர எல்லையின் முக்கிய இடங்களில் காட்சிப்படுத்தப்பட வேண்டும் என மாநகர சபை அமர்வில் வலியுறுத்தப்பட்டிருக்கிறது.
நேற்று முன்தினம் இடம்பெற்ற கல்முனை மாநகர சபை அமர்வின்போது மாநகர சபையின் ஆளும் மு.கா. உறுப்பினர் ஏ.எம்.பறக்கத்துள்ளாஹ் இது குறித்து பிரஸ்தாபித்ததைத் தொடர்ந்து உறுப்பினர்கள் அனைவரும் அதற்கு ஆதரவு தெரிவித்து அங்கீகாரம் வழங்கியுள்ளனர்.
முன்னர் அகற்றப்பட்ட ஜனாதிபதியுடனான முன்னாள் முதல்வரின் புகைப்படம் தாங்கிய பதாதைகள் அமைந்திருந்த இடங்களில் தற்போதைய முதல்வர் ஜனாதிபதியிடம் சத்தியப்பிரமாணம் செய்து கொள்ளும் புகைப்படம் காட்சிப்படுத்தப்பட வேண்டும் என உறுப்பினர் பரக்கத்துல்லா இதன்போது கோரிக்கை விடுத்தார்.
அண்மையில் கல்முனை மாநகர சபை எல்லைக்குள் காட்சிப்படுத்தப்பட்டுரிந்த “எமது முதல்வர்” என தலைப்பிட்டு ஜனாதிபதியிடம் முன்னாள்) முதல்வர் சத்தியப்பிரமானம் எடுத்துக் கொள்ளும் போது எடுக்கப்பட்டுட்ட புகைப்படம் தாங்கிய பதாதாதைகளை மாநகரசபை அகற்றி இருந்தது.
இது தொடர்பில் ஜனாதிபதியின் புகைப்படத்தினை அகற்றியுள்ளதாக (முன்னாள்) முதல்வர் பொலிஸில் முறைப்பாடு செய்து அது தொடர்பாக பொலிஸார் விசாரணையில் ஈடுபட்டுபட்டிருக்கும் இவ்வேளையில் அப்பதாதைய மீண்டும் பொருத்தும் பட்சத்தில் பொலிஸ் கெடுபிடிகள் இல்லாமல் போய்விட வாய்ப்புக்கள் உள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் எமது முதல்வர் என பதாதையில் பொறிக்கப்பட்டிருக்கும் (முன்னாள்) முதல்வரின் புகைப்படத்தினை தொடர்ச்சியாக காட்சிப்படுத்துவதில் சாதாரண மக்கள் மத்தியில் பாரிய குழப்ப நிலை ஏற்பட்டு வந்ததை அவதானித்தே அப்பதாதைகள் அகற்றப்பட்டன என்பதை மக்களுக்கு நாம் தெளிவுபடுத்த வேண்டும்.
அகற்றப்பட்ட குறித்த நாங்கு இடங்களிலும் “எமது முதல்வர்” என்ற வாசகம் பொறிக்கப்பட்டு தற்போதைய முதல்வர் ஜனாதிபதியிடமிருந்து சத்தியப்பிரமானம் எடுத்துக் கொள்ளும் புகைப்படத்தினை மீண்டும் மிகத் துரிதமாக பொருத்துவதற்கு இச்சபையின் அங்கிகாரத்தைக் கேட்டுக் கொள்கின்றேன் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
இங்கு இது பற்றி குறிப்பிட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர் பெஸ்டர் ரியாஸ்;
“பழைய முதல்வரின் புகைப்படம் அகற்றப்பட்டு புதிய முதல்வரின் புகைப்படம் காட்சிப்படுத்தப்பட வேண்டும் என்று தற்போதைய முதல்வர் பதவியேற்றது தொடக்கம் நான் வலியுறுத்தி வந்துள்ளேன். நான்கு மாதம் கடந்த நிலையில் சென்ற மாதக் கூட்டத்திலும் இந்த சபையில் இது பற்றிப் பேசினேன்.
இதனைத் தொடர்ந்து சில தினங்களுக்கு முன்னர் பழைய முதல்வரின் புகைப்படம் அகற்றப்பட்டுள்ளது. ஆனால் புதிய முதல்வரின் புகைப்படம் இன்னும் அந்த இடங்களில் காட்சிப்படுத்தப்படவில்லை. ஏன் இந்த தாமதம்? இது விடயத்தில் முதல்வர் எமது கோரிக்கையையும் மக்களின் விருப்பத்தையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
இல்லாவிட்டால் அந்த இடங்களில் எனது புகைப்படத்தை காட்சிப்படுத்த நேரிடும் என்பதை சொல்லிக் கொள்கின்றேன்” என்று குறிப்பிட்டார்.
மாநகர சபையின் ஆளும் மு.கா. உறுப்பினர் ஏ.ஏ.பஷீர் இது விடயமாக உரையாற்றுகையில்;
“முன்னாள் முதல்வரின் புகைப்படம் அகற்றப்பட்டது தொடர்பில் சிராஸ் மீராசாஹிப் பொலிஸில் முறைப்பாடு செய்திருப்பதானது நாகரீகமற்ற நடவடிக்கையாகும்.
தான் முதல்வர் பதவியில் இல்லாத நிலையிலும் “நமது முதல்வர்” என்ற வாசகத்துடன் தனது புகைப்படம் தொடர்ந்தும் இருக்க வேண்டும் என விரும்புவது கேவலமான எண்ணமாகும். இவரது கீழ்த்தரமான நடவடிக்கையை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். அவரது நாகரீகேமற்ற செயற்பாட்டுக்காக இந்த சபையில் நானும் ஓர் உறுப்பினர் என்ற வகையில் வெட்கப்படுகின்றேன்.
முதல்வராக இருக்கும் போது போடப்பட்ட புகைப்படம் அப்பதவியை இழக்கும் பட்சத்தில் அகற்றப்படும் என்பது எல்லோரும் அறிந்ததே.
முதல்வர் நிஸாம் காரியப்பர் குறுக்கீடு: இப்படி எனது புகைப்படமும் அகற்றப்படும் என்பதால் தான் நான் எனது புகைப்படத்தை காட்சிப்படுத்த விருப்பவில்லை.
உறுப்பினர் ஏ.ஏ.பஷீர்: “இல்லை நீங்கள் பதவியில் இருக்கும் போது உங்கள் புகைப்படத்தை போடத்தான் வேண்டும். இன்று அவர் பதவியிலும் இல்லை எமது கட்சியிலும் இல்லை. இந்நிலையில் தனது புகைப்படம் மட்டும் இந்த மண்ணில் பெருமையுடன் திகழ வேண்டும் என்று சிராஸ் நினைப்பதும் பொலிஸ் முறைப்பாடு செய்திருப்பதும் நாகரீகமற்ற- மோசமான நடவடிக்கை என்று நான் மீண்டும் கண்டனம் தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார்.
இதனைத் தொடர்ந்து உறுப்பினர்களின் கோரிக்கையை முதல்வர் ஏற்றுக் கொண்டதுடன் ஜனாதிபதியுடனான தனது புகைப்படத்தை காட்சிப்படுத்துவதற்கான அனுமதியையும் வழங்கினார்.

