கல்முனை மாநகர சபையின் சுகாதாரத் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு அங்கிகள் மற்றும் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று புதன்கிழமை காலை மாநகர சபை வளாகத்தில் நடைபெற்றது.
மாநகர சபையின் பிரதம சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.சி.எம்.மாஹிர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாநகர முதல்வர் சட்டத்தரணி எம்.நிஸாம் காரியப்பர் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்தார்.
இதன்போது அறுபதுக்கு மேற்பட்ட சுகாதாரத் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு அங்கிகள் மற்றும் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன. இதற்கு ஆசிய மன்றம் நிதி அனுசரணை வழங்கியிருந்தது.
இந்நிகழ்வில் மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி, மாநகர சபையின் எதிர்க் கட்சித் தலைவர் ஏ.அமிர்தலிங்கம், ஆசிய மன்றத்தின் நிகழ்ச்சித் திட்ட அதிகாரி எம்.ஐ.எம்.வலீத் உள்ளிட்ட பிரமுகர்களும் சுகாதார மேற்பார்வையாளர்களும் கலந்து கொண்டனர்.
இங்கு உரையாற்றிய மாநகர முதல்வர் நிஸாம் காரியப்பர்; மாநகர சபையின் சுகாதாரத் துறையை மேம்படுத்துவதற்காக பிரதம சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.சி.எம்.மாஹிர் மேற்கொண்டு வருகின்ற அர்ப்பணிப்புடன் கூடிய சேவைகளைப் பாராட்டுவதாகவும் தமது மாநகர சபையின் அனைத்து விடயங்களுக்கும் ஒத்துழைப்பு வழங்கி வருகின்ற ஆசிய மன்றத்திற்கும் அதன் நிகழ்ச்சித் திட்ட அதிகாரி எம்.ஐ.எம்.வலீதிற்கும் நன்றி தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டார்.
