மலேசிய தலைநகர் கோலாலம்பூரிலிருந்து
இந்திய பெங்களூர் நகரை நோக்கி 166 பேருடன் பயணித்த மலேசிய எயார்லைன்ஸ்
விமானமொன்றின் தரையிறங்குவதற்கான சக்கரங்களிலொன்று கோளாறுக்குள்ளானமை
அவதானிக்கப்பட்டதையடுத்து அது அவசர கால நிலைமையின் கீழ் பெரும்
பரபரப்புக்கு மத்தியில் தரையிறக்கப்பட்டது.
மலேசியாவிலிருந்து இந்தியாவுக்கு 90 நிமிட பயணத்தை மேற்கொண்டு சென்ற இந்த
'எம்எச் 192' விமானம் மேற்படி கோளாறு காரணமாக 4 மணி நேரமாக கோலாலம்பூர்
விமான நிலையத்துக்கு மேலாக வட்டமிட்டுள்ளது.
இந்த விமானம் கோலாலம்பூர் விமான நிலையத்திலிருந்து மேலெழுந்த வேளையிலேயே குறிப்பிட்ட சக்கரம் இயங்க மறுத்துள்ளது.
இதனையடுத்து அந்த விமானத்திலுள்ள அனைவரையும் எவ்வாறு பாதுகாப்பாக தரையிறக்குவது என்பது குறித்து பெரும் பதற்றம் ஏற்பட்டது.
இந்நிலையில் விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டதும் விமானத்திலிருந்த பயணிகள் ஆனந்த மேலீட்டால் கண்ணீர் சிந்தினர்.
இது தொடர்பில் மேலேசிய செயற்பாட்டு போக்குவரத்து அமைச்சர் ஹிஷாமுதீன்
ஹூசைன் 'டுவிட்டர்' இணையத்தளத்தில் விடுத்த செய்தியில் 'கடவுளுக்கு நன்றி'
அவர்கள் (விமானத்தில் பயணித்தவர்கள்) பாதுகாப்பாக உள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே, கடந்த மாதம் மலேசிய கோலாலம்பூரிலிருந்து பிஜிங் நகருக்கு பயணித்த
வேளை மலேசிய எம்.எச்.370 விமானம் காணாமல் போன மர்மம் இன்னும்
துலக்கப்படாமல் உள்ள நிலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளமை
குறிப்பிடத்தக்கது.
