கொழும்பு – கதிர்காமம் பிரதான வீதியில்
கதிர்காமம் நகருக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் இறந்த ஐந்து பேரின்
சடலங்கள் இன்று சொந்த இடமான கண்டி,அம்பதென்ன முல்லேகம பிரதேசத்திற்கு
கொண்டுவரப்பட்டுள்ளன. இதனால் இப்பகுதி பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளதாக
தெரிவிக்கும் எமது செய்தியாளர், நாளை இறுதி கிரியைகள் இடம்பெறவுள்ளதாகவும்
தெரிவித்தார்.
சித்திரை புத்தாண்டுக்காக கதிர்காமத்திற்கு சென்றிருந்த தந்தை தாய் இரு
மகள்கள் தாயின் தந்தை மற்றும் உறவினரின் குழந்தை ஒன்று உற்பட ஆறு
பேர் பயணித்த வேன் ஒன்று, நேற்று அதிகாலை 5 மணியளவில் கதிர்காமம்
நகருக்கு அருகில் உள்ள தெட்டுகம வாவியில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது.
இவ் விபத்தின் போது ஐவர் உயிரிழந்துள்ளதுடன் எட்டு வயதுடைய ஒரு குழந்தை மாத்திரம் உயிர் தப்பியுள்ளது.
இவ் விபத்தில் உயிரிழந்தவர்கள் லலித் கிரிஷாந்த பண்டார (45) யொவ்வனிகா
சிரோஷனி தாபரே (38) ஏஷனி பண்டார (11) சரத் தாபரே (70) இந்துனி
ஆதித்யா பண்டார (14) ஆகிய ஐந்து பேர்களுமாவர். இவ் விபத்தில் ஜனக சாமிகர
தாபரே என்ற எட்டு வயது குழந்தை மாத்திரம்; உயிர் தப்பியுள்ளது.
உயிரிழந்தவர்களது சடலங்கள் அவர்கள் வாழ்ந்த வீட்டுக்கு
எடுத்துவரப்பட்டுள்ளதோடு நாளை இறுதி கிரியைகளும் இடம்பெற உள்ளன.
