வாழைச்சேனையிலிருந்து ஆழ்கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற படகில் 22.04.2014 செவ்வாய்க்கிழமை இரவு 07.00 மணியளவில் சமயல் எரிவாயு வெடித்ததில் படகிற்கு சிறு சேதம் ஏற்பட்டுள்ளதுடன், படகில் சென்ற நான்கு பேர் காயமடைந்துள்ளதாக வாழைச்சேனைப் பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த சனிக்கிழம ஆழ்கடலுக்கு மீன் பிடிப்பதற்காக நான்கு பேர் படகில் சென்றுள்ளனர். ஒரு வாரத்திற்கு தங்கி மீன் பிடிப்பதற்குரிய ஆயத்தத்தில் சென்ற படகில், செவ்வாய்க்கிழமை இரவு 07.00 மணியளவில் சமையல் வாயுக் கசிவின் வாசம் ஏற்படவும் அவ்விடத்திற்கு என்ன நடந்துள்ளது என்று பார்க்கச் சென்ற போது, சமையல் எரிவாயு வெடித்ததாக வாழைச்சேனை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இப்படகிற்கு அருகாமையில் நின்ற படகின் உதவியுடன் 23.04.2014 புதன்கிழமை காலை படகையும் காயமடைந்தவர்களையும் கரைக்கு கொண்டு வந்து வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில். ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். இருவர் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒருவர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதாக கோறளைப்பற்று மத்தி கடற்றொழில் பரிசோதகர் எஸ்.ஐ.எம்.இம்தியாஸ் தெரிவித்தார்.
இச்சம்பவத்தில், படகின் மேல் கூரைப்பகுதி சேதமடைந்துள்ளதாகவும் மொத்த சேத விபரங்கள் பெறப்படவில்லை என்றும் கோறளைப்பற்று மத்தி கடற்றொழில் பரிசோதகர் எஸ்.ஐ.எம்.இம்தியாஸ் மேலும் தெரிவித்தார்.

