கனடாவிலிருந்து மெக்சிகோவிற்கு சென்ற
விமானமொன்று அமெரிக்காவின் மான்டெனா பகுதியில் இருந்த ஹெலினா பிராந்திய
விமான நிலையத்தில் அவசரமாகத் நேற்று காலை 7.30 மணியளவில் தரையிறக்கம்
செய்யப்பட்டது.
சன்விங் ஏர்லைன்ஸ் என்ற தனியார் விமான நிறுவனத்தின் போயிங் 737 விமானம்
ஒன்று 181 பயணிகளுடன் கனடாவிலிருந்து புறப்பட்டு மெக்சிகோவிற்கு பறந்து
கொண்டிருந்தது.
இதன்போது விமானத்தில் ஆறு ஊழியர்களும் பணியில் இருந்தனர். புறப்பட்ட
சிறிது நேரத்தில் காற்றில் ஏற்பட்ட மாறுபாட்டினால் விமானம் குலுங்கத்
தொடங்கியுள்ளது. இதன்போது பயணிகளின் தேவைகளுக்கு உதவிக் கொண்டிருந்த விமான
ஊழியர் ஒருவர் தலையில் இடித்துக் கொண்டதில் ரத்தக்காயம் அடைந்துள்ளார்.
மற்றொரு பணிப்பெண்ணும் பயணிகளுக்கான சேவையில் ஈடுபட்டிருந்தார். அவரும்
உயரத் தூக்கியடிக்கப்பட்டு கீழே விழுந்துள்ளார்.
இதனால் அந்த விமானம் அமெரிக்காவின் மான்டெனா பகுதியில் இருந்த ஹெலினா
பிராந்திய விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கம் செய்யப்பட்டது. அடிபட்ட
அந்த இரு ஊழியர்களும் மருத்துவ சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.
பயணிகள் அனைவரும் விமானத்திலேயே ஐந்து மணி நேரம் காத்திருந்த பின்னர்
விமான நிலையத்தின் பாதுகாக்கப்பட்ட பகுதியில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர்
நேற்று மாலை மற்றொரு விமானத்தில் அவர்கள் அனைவரும் மெக்சிகோவின் புவர்டோ
வல்லர்டாவிற்கு அனுப்பிவைக்கப்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள்
தெரிவித்தனர்.
விமானிகளும், பயணிகளும் தங்களுடைய சீட் பெல்டுகளை அணிந்திருந்ததால்
எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்று சன்விங் நிறுவனத்தின் தகவல்
தொடர்பாளரான ஜெனைன் சாப்மென் தெரிவித்துள்ளார்.
0 Comments