Advertisement

Main Ad

எட்டு இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மனிதனின் காலடித் தடம் கண்டுபிடிப்பு



எட்டு இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மனிதனின் காலடித் தடம் கண்டுபிடிப்புஎட்டு இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த நம் மூதாதையர்களின் காலடித் தடம் இங்கிலாந்தின் நார்போக்கில் உள்ள ஹப்பிஸ் பர்க் கடல் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வடக்கு ஐரோப்பிய பகுதியில் வாழ்ந்த பழங்குடிகளின் காலடித் தடம் இவை. இதுவரை இந்தப் பகுதியில் விலங்குகளின் எலும்புகளும் கல் ஆயுதங்களும்தான் அகழ்வாராய்ச்சியில் கிடைத்துள்ளன. முதன்முறையாக மனிதர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரம் தற்போது தான் கிடைத்துள்ளது.
இப்போது இருக்கும் இங்கிலாந்து பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ஐரோப்பிய கண்டத்துடன் நிலப்பரப்பில் இணைந்து இருந்துள்ளது. அதன்பிறகே கடல் இடையில் புகுந்து இங்கிலாந்தை ஐரோப்பாவில் இருந்து துண்டாக்கி விட்டது. இங்கிலாந்தில் வாழ்ந்த பூர்வகுடிகள், முகத்துவாரமாக இருந்த இந்தப் பகுதி வழியாக ஐரோப்பிய கண்டத்துக்கு குடி பெயர்ந்திருக்கலாம் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
மொத்தம் 50 காலடித் தடங்கள். 2 ஆண்கள், 2 பெண்கள், 3 அல்லது 4 குழந்தைகளின் காலடித் தடங்கள் அவை. கடல் நீர் பின்வாங்கியதால், இந்தக் காலடித் தடங்கள் வெளியே தெரிய வந்துள்ளன. இவற்றை பிரிட்டன் அருங்காட்சியக ஆய்வ ளர்கள் முப்பரிமாண (3D) படங்களாக ஆவணப்படுத்தி உள்ளனர்.
‘ஹோமோ அன்டஸர்’ குரங்கில் இருந்து மனிதன் உருவானபோது, வாழ்ந்த இனம் இது. ஏறக்குறைய 12 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு இவர்கள் வாழ்ந்திருக்கிறார்கள். உயரம் 5.5 அடி முதல் 6 அடி வரை. எடை 90 கிலோ வரை. இதெல்லாம் நம்மை போன்றுதான். ஆனால் மூளைதான் சற்று சிறியதாக இருந்திருக்கிறது. நமக்கு சராசரியாக 1,350 கியூபிக் செ.மீ. ஆனால் ஹோமோ அன்டஸர் மக்களுக்கு 1000 முதல் 1150 கியூபிக் செ.மீ. வரைதான் இருந்திருக்கிறது.
நம்மை போலவே வலதுகை பழக்கம். இதுதான் மனிதக் குரங்கில் இருந்து இவர்களை வித்தியாசப்படுத்தி காட்டியிருக்கிறது. சைகை மொழியை பயன்படுத்தியிருக்கிறார்கள். ஐரோப்பாவில் 6 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஹோமோ ஹெய்டல் பெர்ஜென்சிஸ் இனத்தவரும் இவர்களும் ஒன்றுதான் என்கிறார்கள் சில ஆராய்ச்சியாளர்கள்.
நதிக்கரையோரம் காட்டுப் பகுதிகளில் விலங்கோடு விலங்காக ஹோமோ அன்டஸர் இனம் வாழ்ந்திருக்கிறது. குதிரை, யானை, மான், காட்டெருமை, நீர்யானை, காண்டா மிருகம், எலி மற்றும் சில வித்தியாசமான விலங்குகளுடன் வாழ்ந்திருக்கிறான் ஆதி மனிதன். அகழ்வாராய்ச்சியில் கிடைத்துள்ள ஆதாரங்கள் மூலம் இது தெரிய வந்துள்ளது.
மம்மத் எனப்படும் மெகாசைஸ் யானைகள், குதிரைகளின் எலும்புகள் இங்கு கிடைத்துள்ளன. கல் ஆயுதங்கள் மற்றும் கூர்மையான மரக் குச்சிகள் மூலம் விலங்குகளை வேட்டையாடி பசியை போக்கி வாழ்ந்திருக்கிறார்கள். மரம், செடி, கொடிகளின் மிச்சங்கள், கிழங்குகள், காய், கனிகள் போன்ற தாவர உணவுப் பழக்கம் இருந்ததை காட்டுகிறது.
காலடித் தடத்தை வைத்தே உயரத்தை கணக்கிட்டு விடலாம் என்கிறார்கள் காலடி ஆய்வாளர்கள். பொதுவாக காலடித் தடம் என்பது மனிதனின் உயரத்தில் 15 சதவீதமாக இருக்கும். அதன்படி பார்த்தால், தற்போது கிடைத்துள்ள காலடித் தடங்களின்படி, 3 அடி முதல் 5 அடி 7 அங்குலம் உயரம் கொண்ட ஒரு குடும்பமாக இருக்கலாம் என்கிறார் லிவர்பூல் ஜான்மூர் பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் காலடித் தடம் சென்ற வழியை பார்க்கும்போது, அவர்கள் ஐரோப்பிய கண்டத்தை நோக்கி சென்றிருக்கலாம் என்கிறார் அவர்.
தன்ஸானியாவின் லாட்டோலி என்ற இடத்தில் கிடைத்த காலடித் தடங்கள் 35 இலட்சம் ஆண்டுகள் பழமையானவை.
கென்யாவில் கூபி போராவில் கிடைத்தவை 15 இலட்சம் ஆண்டு பழமையானவை. களிமண் பூமியாக இருந்து பாறையாக மாறிய பகுதி இது. இதனால் மனித காலடித் தடங்கள் தெளிவாக உள்ளன. மெக்ஸிகோவின் வடகிழக்கு பகுதியில் கடந்த ஆண்டு ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்த காலடிகள், 10,500 ஆண்டுகள் பழமையானவை. ஆனால் ஆபிரிக்காவுக்கு வெளியே, கண்டறியப்பட்ட காலடித் தடங்களில் இங்கிலாந்தில் இப்போது கண்டுபிடிக்கப்பட்ட இந்த தடங்கள்தான் மிகவும் பழமையானவை.

Post a Comment

0 Comments