( ஏ.ஆர்.அபி அஹமட் )
இன்று நாட்டிலுள்ள அனேகமான வைத்தியசாலைகளின் வைத்தியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டிருந்த போதிலும் அம்பாரை மாவட்டத்திலுள்ள நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் வழமைபோன்று வைத்தியசேவைகள் யாவும் சிறப்பாக இடம் பெற்றன என்று எமது பிராந்திய செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
இவ்வைத்தியசாலையில் வெளிநோயாளர் பிரிவு மாத்திரமன்றி, அதிதீவிர சிகிச்சைப் பிரிவு உள்ளிட்ட அனைத்துப் பிரிவுகளிலும் வைத்திய சேவைகள் இடம்பெற்றன.
நோன்பு மாதம் என்பதால் நோயாளர்களின் வருகை வழமையாகவே குறைந்தே காணப்படும். ஆனால், இன்று காலையில் சுமார் 170க்கு மேற்பட்ட நோயாளர்கள் சிகிச்சை பெறவந்தனர் என்றும், மாலை வரையும் சற்றுக் குறைவாக இருந்தாலும் நோயாளர்கள் வந்த வண்ணமே உள்ளனர் என்றும் எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.
வைத்தியசாலை அத்தியேட்சகர் திருமதி.பேபி சஹிலா இஸ்ஸதீன் காலையில் கடமையில் இருந்தாலும் அவருடன் தொடர்பு கொண்டு, கருத்துக்களை அறிய முடியவில்லை.
கடமையில் இருந்த வைத்தியர் திருமதி. ஜெஸ்மி சலீமிடம் கருத்துக் கேட்ட போது:- 'நாங்கள் பதிவு வைத்திய அதிகாரிகளாகையால், பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நாம் ஆதரவில்லை. அதே வேளை எம்மைக் கடவுளுக்கு அடுத்தபடியாக நம்பி வரும் பாமர மக்களுக்குச் சேவை செய்வதன் முக்கியத்துவத்தை உணர்ந்து, மனச்சாட்சியோடு இன்று காலையில் இருந்து வைத்திய சேவையில் ஈடுபட்டுள்ளோம்' எனத் தெரிவித்தார்.
இதே வேளை நோயாளர் ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில்:- ' நாட்டிலுள்ள வைத்தியசாலைகளின் வைத்தியர்கள் இன்று வேலை நிறுத்தத்தில் குதித்திருக்கும் வேளையில் எமது நிந்தவூர் வைத்தியசாலை வைத்தியர்கள் தியாக உணர்வோடு வைத்தியம் செய்வதைப் பாராட்ட வேண்டும். இதனை ஏனைய வைத்தியர்களும் பின்பற்றினால் நாடு முன்னேறும்' எனத் தெரிவித்தார்.
0 Comments