Advertisement

Main Ad

காணிப் பிரச்சினைக்கு தீர்வுகாணும் முயற்சிகள் முறையாக ஒழுங்குபடுத்தப்பட வேண்டும்: மு.கா. தலைவர் ரவூப் ஹக்கீம்


(பிறவ்ஸ் முஹம்மட்)

–––––––––––––––––––––––––––––––––––––––––––––––––––––––––––––––––––––––––––––
யுத்தத்தினாலும், இன விரிசல்களினாலும் பாதிப்புக்குள்ளான மக்களின் உரிமைக்கான எழுச்சிப் பயணம் என்ற தொனிப்பொருளில் மனித எழுச்சி நிறுவனம், காணி உரிமைக்கான அம்பாறை மாவட்ட செயலணி, யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான செயலணி ஆகியவற்றினால் ஏற்பாடு செய்யப்பட்டு ஞாயிற்றுக்கிழமை (19) அக்கரைப்பற்று அதாஉல்லா அரங்கில் நடைபெற்ற விசேட கூட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் ஆற்றிய உரையின் தொகுப்பு.
–––––––––––––––––––––––––––––––––––––––––––––––––––––––––––––––––––––––––––––
Blogger Tips and TricksLatest Tips For BloggersBlogger Tricks

கடந்த 30 வருடகாலமாக நாட்டில் நடைபெற்ற உள்நாட்டு யுத்தத்தினால் ஏற்பட்ட இழப்புகளை ஆவணப்படுத்தும் நடவடிக்கையில் மனித எழுச்சி நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. இழப்பீடுகளை பெறும் நோக்கில் உயிரிழப்புகளை சந்தித்தோர், பலவந்தமாக வெளியேற்றப்பட்டோர், உடமைகளை இழந்தோர், அங்கவீனமுற்றோர் என்று பாதிக்கப்பட்டவர்களின் விபரங்களை ஒன்றுதிரட்டி ஒரு புத்தகமாக தயாரித்து ஒரு மாதத்துக்கு என்னிடம் கையளித்தனர்.

இவ்வாறான ஒரு ஆவணத்தை வெளியிட்டு வைப்பது மாத்திரமின்றி, இதனை நடைமுறைப்படுத்துவதற்கு ஒரு செயற்திட்டம் இருக்கவேண்டும். இதற்காக ஒரு செயலமர்வை நடாத்தவேண்டும். அதன்போது பாதிக்கப்பட்டவர்களில் ஒரு தொகுதியினரை ஒன்றுதிரட்ட வேண்டும் என்ற கோரிக்கையை ஹைருதீன் என்னிடம் முன்வைத்தார். அந்த ஏற்பாட்டின் பிரகாரம்தான் இந்நிகழ்வு அக்கரைப்பற்றில் நடைபெறுகிறது.

நல்லாட்சி அரசாங்கத்தில் இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண்பதற்கு பலவாறான செயற்திட்டங்கள் முடக்கிவிடப்பட்டுள்ள நிலையில், அவற்றில் ஒருவிதமான முடக்கம் தற்போதும் காணப்படுகின்றது. இந்நிலையில் நீண்டகாலமாக தேங்கிக்கிடக்கும் இந்தப் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வுகாணும் தார்மீகப் பொறுப்பு அரசியல் தலைமைகளுக்கு இருக்கிறது. அதேபோன்று சிவில் சமூகத்தின் மத்தியிலும் இப்பிரச்சினைகள் தற்போது அலசி ஆராயப்பட்டு வருகின்றன.

கடந்த ஆட்சியில் யுத்தம் முடிவுற்ற நிலையில், இனப்பிரச்சினைக்கு தீர்வுகாணும் விடயங்களை கிடப்பில் போடமுடியாது என்ற நிலைப்பாட்டில் சர்வதேசம் அதில் தலையிட்டது. இனப்பிரச்சினைக்கான தீர்வு மற்றும் இவற்றுக்கு காரணமான பிரச்சினைகளுக்கான தீர்வு என்பவற்றுக்காக நிலைமாறு கால நீதிக்கான ஒரு பொறிமுறை அமையப்பெறவேண்டும் என்ற நிர்ப்பந்தத்தை ஜெனீவா தீர்மானம் வலியுறுத்துகின்றது. சர்வதேச மனித உரிமைகள் சாசனத்துக்கும், சர்வதேச மனித உரிமையின் நியமங்களுக்கும் ஏற்ப இலங்கை அரசாங்கம் அதற்கு வகைகூறும் வகையில், இப்பிரச்சினைகளுக்கு தீர்வுகாண வலியுறுத்தப்படுகிறது.

இலங்கை விவகாரம் தொடர்பிலான ஜெனீவா தீர்மானம் கொண்டுவரப்பட்டு, ஒருசில திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. 2009இல் கொண்டுவரப்பட்ட இத்தீர்மானம் சர்வதேச மனித உரிமைகள் பேரவை மாநாட்டில், இம்மாதம் 29 முதல் அடுத்த மாதம் இறுதிவரை விவாதிக்கப்படும் ஒரு பேசுபொருளாக மாறியுள்ளது. 6 மாதங்களுக்கு ஒரு முறை ஜெனீவாவில் கையாளப்படும் இலங்கை விவகாரம், நல்லாட்சி வருகையின் பின்னர் இலங்கைக்கு 2 வருட காலஅவகாசம் வழங்கப்பட்டது. இந்த அவகாசம் 23ஆம் திகதியுடன் முடிவடைகிறது.

ஜெனீவா தீர்மானத்தை கையாள்வதில் இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைளை சர்வதேச சமூகம் மீளாய்வு செய்கின்ற, தொடர்ந்தும் பரிசீலனைக்கு உட்படுத்துகின்ற ஒரு கட்டத்துக்கு இலங்கை ஆளாகியுள்ளது. அவ்வாறானதொரு சூழலில் அக்கரைப்பற்றில் நடைபெறும் இச்சந்திப்பு மிக முக்கியமானது. ஜெனீவா பேரவையில் அரச சார்பற்ற நிறுவனங்கள் பங்குபெறும் அமர்வுகளில், இந்த விவகாரங்கள் கையாளப்படுவதற்கான ஒரு பின்புலத்தை இந்த அமைப்புகள் உருவாக்க வேண்டும்.

ஜெனீவா தீர்மானத்தில் இலங்கை குற்றவாளிக்கூண்டில் நின்றுகொண்டிருப்பதால், இப்படியான பிரச்சினைகளை உங்களது சார்பில் அரசாங்கம் பேசப்போவதில்லை. இப்படியான சூழ்நிலையில், அரசாங்கத்துக்கு எதிரான சாட்சியாளர்களாக உங்களைப் போன்ற அமைப்புகள், அனுபவமுள்ள சர்வதேச வலைப்பின்னலுடன் கூடிய ஏனைய அமைப்புகளுடன் தொடர்பாடல்களை மேற்கொள்ளவேண்டும் என்று ஹைருதீனிடம் நான் ஏற்கனவே சொல்லியிருந்தேன்.

இந்தப் பிரச்சினைகள் சர்வதேச சமூகத்துக்கு முன்னால் பொதுப்படையாக பேசப்படவேண்டும். இவற்றுக்கு தீர்வு காணப்படாமைக்கான காரணிகளுக்கு சர்வதேச அழுத்தம் ஏற்படுத்தப்படுவதற்கான ஒரு பின்புலத்தை நாங்கள் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.

அதேநேரம், அரசாங்கம் இவ்விடயத்தில் சில பொறிமுறைகளை உருவாக்கியிருக்கிறது. காணாமல்போனோருக்கான ஒரு அலுவலகம் மற்றும் அதற்கான சட்டம் உருவாக்கப்பட்டிருக்கிறது. அத்துடன் உயிரிழப்புகள் தொடர்பான சில உள்நாட்டு பொறிமுறைகளை அமைப்பதற்கும் அரசாங்கம் உறுதிமொழி வழங்கியுள்ளது. அது உள்ளக விசாரணையா அல்லது சர்வதேச விசாரணையா என்று ஒரு பக்கமும் ஆட்சியாளர்கள் வெவ்வேறுபட்ட பல முரண்பாட்டு கருத்துகளை தெரிவித்து வருவதினாலும் இவ்விடயம் தொடர்ந்தும் இழுபறி நிலையிலேயே கிடக்கிறது.

இம்மாதம் 29 முதல் மார்ச் இறுதிவரை ஜெனீவாவில் நடைபெறும் மனித உரிமைகள் பேரவை மாநாட்டில் மேற்படி விடயங்களில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து ஆராயப்படும். இலங்கைக்கு எதிரான பிரேரணையை கொண்டுவந்த அமெரிக்காவில் தற்போது ஆட்சிமாற்றம் நடந்துள்ளது. புதிய ஆட்சியாளர்கள் குறித்தும் தெளிவில்லாத ஒருநிலை காணப்படுவதால், இலங்கை மீதான விசாரணை, இலங்கை வழங்கிய வாக்குறுதிகள் தொடர்பில் சிக்கல்நிலை காணப்படுகின்றது.

இலங்கை வழங்கிய வாக்குறுதிகள் தொடர்பில் ஏற்படும் சர்வதேச அழுத்தத்தை எதிர்கொள்வது தொடர்பாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில், வெளிவிவகார அதிகாரிகளுடன் ஒருசில அமைச்சர்களுடன் கூடி நாங்கள் அடிக்கடி கலந்துரையாடி வருகிறோம். பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு மாற்றமாக புதிய சட்டத்தை கொண்டு வருவதற்கு யோசித்து வருகிறோம். ஆனால், அரசியல் பிரச்சினைகளின் தலையீட்டினால் தற்போது அதுவும் தொங்கு நிலையிலேயே காணப்படுகிறது.

இதுபோன்று பல்வேறு சட்டவாக்கங்களை உருவாக்கவேண்டிய நிர்ப்பந்தத்துக்கு இலங்கை அரசாங்கம் ஆளாகியுள்ளது. பலவந்தமாக கடத்திச் செல்லப்பட்டு காணாமல் போகச் செய்வதை ஒரு குற்றமாக்குவதற்கு அடுத்த வாரமளவில் பாராளுமன்றில் விவாதம் நடைபெறவுள்ளது. இதனை கடந்த அரசாங்கம் தண்டனைக் கோவையில் சேர்ப்பதை தவிர்த்து வந்தது. ஆனால், தற்போதைய அரசாங்கம் ஏற்றுக்கொண்டு அதனை தண்டனைக் கோவையில் உள்வாங்க முன்வந்துள்ளது.

பழைய சம்பவங்களை வைத்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வது என்பது, இலங்கையின் தண்டனைக் கோவையின் பிரகாரம் சாத்தியமான விடயமல்ல. அதற்கென கால எல்லைகள் வரையறுக்கப்பட்டுள்ளன. ஆனால், பலவந்தமாக கடத்திச் செல்லப்பட்டு காணாமல் போகச் செய்வதற்கு எதிராக காலவரையறையின்றி குற்றப்பத்திரம் தாக்கல் செய்யமுடியும் என்பது சர்வதேச நியதி.

நான் நீதியமைச்சராக இருந்த காலத்திலிருந்து இதனை குற்றமாக்கும் முற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தும் கைகூடவில்லை. நல்லாட்சியில்தான் அது நிறைவேறியிருக்கிறது. அதுபோல ஆட்சியுரிமை சட்டத்தில் ஒரு மாற்றத்தை கொண்டுவர பிரயத்தனம் மேற்கொண்டேன். அப்போது அரசாங்கத்திலிருந்த சில தீவிரப்போக்குடைய அமைச்சர்கள் அதனைத் தடுத்த பின்னணியில், பாராளுமன்றம் வந்தும் அந்த திருத்தத்தை நிறைவேற்ற முடியாத நிலை ஏற்பட்டது. அந்த சட்டத் திருத்தத்தை தற்போதைய அரசாங்கத்தில் நிறைவேற்றியிருக்கிறோம்.

ஆட்சியுரிமை சட்டம் தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினால் சில செயலமர்வுகளை நடாத்தியிருந்தோம். யுத்தகாலத்தில் தங்களது காணிகளை பலவந்தமாக விற்பதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டவர்கள், குறைந்த விலையில் காணிகளை விற்பதற்கு தூண்டப்பட்டவர்கள், சுயமாக காணிகளை விட்டு வெளியேறியவர்கள், பலவந்தமாக வெளியேற்றப்பட்டவர்கள் போன்றவர்களின் காணிகளில் வேறு இனத்தவர்கள் கைப்பற்றி அனுபவித்து வரும்நிலையில், சொந்தக் காணிகளை மீளப்பெறுவதற்கு ஆட்சியுரிமை சட்டம் தடையாக இருந்தது. இதனால், இலங்கையில் வன்முறை நடைமுறையிலிருந்த குறித்த காலத்துக்கு ஆட்சியுரிமை சட்டம் செல்லுபடியாகாது என்ற சட்டத் திருத்தத்தை கொண்டுவந்தோம்.

இந்த சட்டமூலம் நடைமுறைக்கு வந்து இரு வருடங்களுக்குள் காணிகளின் உரிமையாளர்கள் முறைப்பாடு செய்யவேண்டும். சட்டம் அமுல்படுத்தப்பட்டு தற்போது 6 மாதங்கள் கடந்துள்ள நிலையில், எஞ்சிய ஒன்றரை வருட காலத்துக்குள் காணிகளை இழந்தவர்கள் அதனை மீளப்பெறுவதற்காக விண்ணப்பிக்க வேண்டும். 2 வருடங்களுக்குள் இந்த சட்டமூலத்தை பாவிக்காவிட்டால், நாங்கள் மீண்டும் நஷ்டவாளிகளாக மாறிவிடுவோம். அதற்காகவே மக்களை விழிப்புணர்வூட்டும் வகையில் நாங்கள் பல செயலமர்வுகளை நடத்தியிருக்கிறோம்.

கடந்த காலங்களில் நடைபெற்ற யுத்தங்கள் மற்றும் வன்முறைகளால் உயிரிழந்தோர், அங்கவீனமுற்றோர், காணாமல்போனோர் விடயங்களை நாம் தனியான முறையில் அணுகவேண்டும். அவற்றை கையாள்வது குறித்து நாங்கள் பின்னர் ஆராய்வோம். தற்போது காணிகளை இழந்தவர்கள் பற்றிப் பார்ப்போம். அத்துடன், இழந்த காணிகளை மீளப்பெறுவதற்கு மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆராய்வோம்.

காணியிலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்டோர், இடையிடையே பயிர்செய்து திரும்பவும் போகமுடியமால் உள்ள காணி சொந்தக்காரர்கள் விடயத்தில் முக்கியமாக 3 அரச திணைக்களங்கள் தடையாக உள்ளன. வனபரிபாலன திணைக்களம், வன ஜீவராசிகள் திணைக்களம், தொல் பொருளியல் திணைக்களம் என்பனவே அவையாகும். ஜெனீவா தீர்மானத்தில் சொல்லப்படும் 2002ஆம் ஆண்டின் பின்னர், வர்த்தமானி அறிவித்தலின் மூலம் இந்தக் காணிகளை மக்கள் பயன்படுத்தாதவாறு மேற்படி 3 திணைக்களங்களும் வேண்டுமென்றே தங்களது ஆளுகைக்கு உட்படுத்தியுள்ளன.

இந்த 3 திணைக்களங்களின் மேலதிகாரிகள், அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர், அம்பாறை மாவட்ட செயலாளர், பிரதேச செயாளர்கள், மாகாண காணி ஆணையாளர், மாவட்ட காணி அதிகாரிகள் ஆகியோரை எதிர்வரும் 23ஆம் திகதி பாராளுமன்றத்துக்கு அழைத்து காணிப் பிரச்சினைகள் தொடர்பில் மக்களின் நியாயங்களை தெளிவுபடுத்தவுள்ளோம். எல்லோரையும் ஒரே மேசைக்கு அழைத்து, பிரச்சினைக்கு விரைவாக தீர்வுகாண்பதற்கான வழிவகைகள் குறித்து பேசவுள்ளோம்.

வனபரிபாலனத் திணைக்களம் தொடர்பில் வர்த்தமானி அறிவித்தல் வெளிவந்த பின்னர், அது செல்லுபடியாவதற்கு ஒரு மாதத்துக்கு முன்னர் பாராளுமன்றத்தில் இதற்கு அனுமதி பெறவேண்டும். அவ்வாறன அனுமதி பெறப்பட்டதா என்பதில் சந்தேகம் நிலவுகின்றது. அப்படி அனுமதி பெறப்படாவிட்டால், வர்த்தமானி அறிவித்தல் வறிதாகிவிடும். இவ்வாறானதொரு நிலையில், காணிப்பிரச்சினை தொடர்பில் அம்பாறை மாவட்டத்தின் நிர்வாக இயந்திரம் ஒரு அலட்சியப் போக்குடன் கையாள்வது எல்லோருக்கும் தெரிந்த விடயம்.

இந்த அலட்சியப்போக்கு குறிக்கு நாங்கள் பல தடவைகள் நேரடியாக சுட்டிக்காட்டியிருக்கிறோம். அதற்கவர்கள் பலவாறான காரணங்களை காட்டி இழுத்தடிப்பு செய்கின்ற, தள்ளிப்போடுகின்ற விடயங்கள்தான் தொடர்ந்தும் நடந்துகொண்டிருக்கின்றன. இதனால்தான் இவர்கள் எல்லோரையும் ஒரே மேசைக்கு கூட்டிவந்து, காணிப்பிரச்சினை தொடர்பில் அவர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்த அவர்களது வாயாலேயே சொல்லவைக்கவேண்டும்.

பிரச்சினைகள் தொடர்பில் அரச அதிகாரிகளுக்கு தனித்தனியாக கடிதம் எழுதுவதால் அவை தீர்க்கப்படுவதில் சிரத்தை காட்டப்படுவதில்லை. இவ்வாறான கடிதங்களில் பெரும்பாலானவை கிடப்பிலேயே போடப்படுகின்றன. இதனை கருத்திற்கொண்டு பிரச்சினைகளை தீர்ப்பதற்கான மாற்றுவழியை நாங்கள் கையாளவேண்டும். அதற்காகத்தான் நாங்கள் பாராளுமன்றத்தில் இவ்வாறானதொரு சந்திப்பை ஏற்பாடு செய்துள்ளோம். மக்களின் காணி தொடர்பான அனைத்து ஆதாரங்களையும் ஒன்றுதிரட்டி இங்கு சமர்ப்பிக்கப்படும். அதன்பின்னர் இப்பிரச்சினைக்கான தீர்வு என்னவென்பதை சம்பந்தப்பட்ட மேலதிகாரிகள் கூறவேண்டும்.

காணிப்பிரச்சினைக்கு தீர்வு வழங்குவதில் நிர்வாக இயந்திரம் அலட்சியப் போக்குடன் செயற்படுமாக இருந்தால் அரசியல் ரீதியில் அழுத்தம் கொடுப்போம். மறுபுறம் சட்டத்தரணிகளை அமர்த்தி நீதிமன்றங்கள் ஊடாக தீர்வினை பெற்றுக்கொடுப்போம். நீதிமன்றம் செல்வதற்கு வழியிருந்தும், வசதியில்லாமல் நிறையப் பேர் இருக்கின்றனர். அவர்களுக்கு சட்டத்தரணிகளை அமர்த்தி தீர்வினை பெற்றுக்கொடுப்போம். அதற்கு அடுத்தபடியாக இருப்பது உள்நாட்டு பொறிமுறை.

அதேநேரம், படையினர் கையகப்படுத்தியுள்ள காணிகளை விடுவிப்பதற்கான முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். சிலாவத்துறை முழு நகரத்தையும் கடற்படை முகாம் ஆக்கிரமித்து வைத்திருக்கிறது. இதனை அகற்றுவதற்காக 2 வருடங்களாக பேசிவருகின்றோம். பிரதமர் தலைமையில் இரு தடவைகள் பேச்சுவார்த்தை நடத்தியும் அதற்கு இன்னும் தீர்வுகள் எட்டபடவில்லை. இவ்வாறான பிரச்சினைகள் புல்மோட்டை தொடக்கம் பொத்துவில் வரை நீண்டு கிடக்கின்றன. அண்மையில் புல்மோட்டையில் ஆக்கிரமிப்புக்குள்ளான சிறிய நிலப்பகுதியை மீட்டுக் கொடுத்தோம்.

இராணுவ முகாம் காரணமாக வௌ்ளைமணல் பிரதேசத்தில் மீனவர்கள் கடலுக்கு செல்வதில் இருந்த தடை சிறிது காலம் நீக்கப்பட்டு மீண்டும் நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த தடையை முழுமையாக நீக்கித்தருமாறு இன்னும் போராட்டம் நடந்துகொண்டுதான் இருக்கிறது. அதுபோல, ஆலிம்சேனை பிரச்சினை இன்னுமொரு தீராத பிரச்சினையாக இருந்துகொண்டிருக்கிறது. தற்போது அங்கு மரம்நடும் ஒரு படலம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதனுடைய உள்நோக்கம் தெளிவாக விளங்குகின்றது. ஏதோவொரு வகையில் நடக்கவிருக்கின்ற நீதியை இல்லாமல் செய்வதற்கு இப்படியான நடவடிக்கைகளை முடுக்கிவிடுகின்ற பலர் நிர்வாக இயந்திரத்தில் இருந்துகொண்டிருக்கின்றனர்.

வில்பத்து விவகாரத்தில் நாங்கள் மிகவும் தெளிவானதொரு அறிக்கையை தயாரித்துள்ளோம். இவ்விடயத்தில் என்ன நடந்தது, என்ன நடக்கவேண்டும் என்பது தொடர்பில் நாங்கள் செயலமர்வொன்றை அடுத்த இரு வாரங்களுக்குள் நடாத்தவுள்ளோம். வில்பத்து சரணாலயத்தின் பாதுகாப்பு வலயத்துக்குள் அப்பால் இருக்கின்ற மக்கள் குடியிருப்புகளை இல்லாமல் செய்வதற்கு வேண்டுமென்று சதிமுயற்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன.

ஒருசில தவறுகள் நடந்ததுக்காக, திரித்துக்கூறப்பட்ட கதைகளுடன் வில்பத்து விவகாரத்தை பூதாகரமாக சித்தரித்துக்கொண்டிருக்கின்றனர். இதை முடிவுக்கு கொண்டு வருவதாக இருந்தால், அதைப்பற்றி விமர்சிப்பவர்களையும் பாதிக்கப்பட்டவர்களையும் ஒரு மேடையில் அமர்த்தி, அவர்களுக்கு முன்னால் இந்த விடயங்களின் உண்மைத்தன்மை பேசப்பட வேண்டும். அதைவிடுத்து, தன்பக்க நியாயங்களை ஊடகவியலாளர்கள் மாநாடு மூலம் அறிவிப்பதன்மூலம் எதுவும் நடக்கப்போவதில்லை.

காணிப் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் முயற்சிகள் முறையாக ஒழுங்குபடுத்தப்படவேண்டும். இதற்கான நாங்கள் முதலில் நிர்வாக ரீதியாக தீர்வுகாணும் முயற்சிகளை ஏற்பாடு செய்துள்ளோம். அதில் முன்னேற்றம் இல்லையென்றால், அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பித்து, தனியான செயலணியை அமைத்து தீர்வுகாண்பதற்கான அடுத்தகட்ட முயற்சியை மேற்கொள்வோம்.

அண்மையில் பொத்தானை பிரச்சினைக்கு சென்றபோது தொல்பொருளியில் திணைக்களம் பெயர்ப்பலகை இட்டிருந்தது. இந்தப் பிரச்சினைக்கு தீர்வுகாண எமது பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை தொல்பொருளியல் திணைக்கள பணிப்பாளரிடம் அனுப்பினேன். அவருடன் பேசியபின்னர் ஒரு தொலைபேசி அழைப்பில் அந்தப் பெயர்ப்பலகையை நீக்குமாறு உத்தரவிட்டார்.

இப்படி பல விடயங்கள் மேலிடத்துக்கு தெரியாமல் கீழ்மட்டத்திலேயே அப்பட்டமான இனவாதத்தின் அடிப்படையின் இவ்வாறான செயற்பாடுகள் நடைபெறுகின்றன. இவ்விடயங்கள் தொடர்பில் மேலதிகாரிகளுக்கு தெளிவுபடுத்துவும், இதற்கான தடைகளை நீக்குவதற்காகவும் நாங்கள் எல்லோரும் ஒற்றுமையாக செயற்படும்போதும் அதற்கான தீர்வுகளை இலகுவாக பெற்றுக்கொள்ள முடியும்.

பொத்தானை பிரச்சினை உருவானதற்கு பிரதான காரணம் வட்டமடு பிரச்சினையாகும். வட்டமடு விவகாரம் என்பது திருக்கோவில் தமிழ் மக்கள் மற்றும் முஸ்லிம் மக்களிடையே உள்ள முக்கிய பிரச்சினையாகும். இப்பிரச்சினை தொடர்பில் நாங்கள் பல மட்டங்களில் பேசியிருக்கின்றோம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையுடன் இருந்தும் பேசியிருக்கிறோம். அவர்களுக்கு இருக்கின்ற மேய்ச்சல்தரை, அதில் இருக்கும் நியாயப்பாடு, மாற்றுக்காணி என்பது தொடர்பிலும் பேசியிருக்கிறோம்.

வனபரிலான திணைக்களம் ஜனாதிபதியின் அமைச்சின் கீழ் வருவதால் வட்டமடு விவசாயிகளின் பிரச்சினைகள் பற்றி பேசுவதற்கு, ஜனாதிபதியிடம் நேரம் ஒதுக்கித் தருமாறு கேட்டிருக்கிறோம். வனபரிபாலன திணைக்களப் பணிப்பாளர் நேரில் வந்து பார்த்தால் போதும், அதிலிருக்கும் நியாயத்தின்மை தெளிவாக விளங்கும். அங்கு காடுகள் இல்லை என்பதும், வருடக்கணக்கில் பயிர் செய்ததும் அவருக்கு தெளிவாகத் தோன்றும்.

மேய்ச்சல்தரை சம்பந்தமான வர்த்தமானி அறிவித்தலும், அதன்பின்னர் வந்த சர்ச்சைகளும் 2014ஆம் ஆண்டிலிருந்து விவசாயம் செய்வதற்கான அனுமதித்து பின்னர் மறுக்கப்பட்ட நிலவரங்களும் தமிழ்பேசும் இரு சமூகங்களினால் பேசித் தீர்க்கமுடியாது என்றால் வட, கிழக்கு பிரச்சினைக்கு தீர்வே வரமுடியாது. இரு தலைமைகளும் நேர்மையாக இருந்து தீர்க்கக்கூடியது இந்த வட்டமடுப் பிரச்சினை என்பதில் நான் இன்னும் நம்பிக்கையுடன் இருக்கிறேன்.

தமிழ்பேசும் சமூகங்களில் மத்தியில் இருக்கின்ற பிரச்சினைக்கு வேறு சமூகங்கள் வந்து, குரங்கு அப்பம் பிரித்த கதை போன்று இடம்கொடுக்கவேண்டிய அவசியம் இல்லை. இவை எல்லாவற்றையும் மனதிற்கொண்டு இப்பிரச்சினைகளுக்கான நிரந்தரத் தீர்வை காண்பதற்கு நேர்மையுடனும், பக்குவத்துடனும், நிதானத்துடன் நிர்வாக ரீதியாகவும், அரசியல் அதிகார ரீதியாகவும் இல்லாவிடின் சர்வதேச நியதிகள் ஊடாகவும் பங்காற்றுவோம்.

Post a Comment

0 Comments