அரிசி இறக்குமதிக்காக தனியார் பிரிவிற்கு சந்தர்ப்பம் வழங்கப்படாமையால், பண்டிகைக்காலங்களில் அரிசியின் விலையில் அதிகரிப்பு ஏற்படும் என அத்தியாவசிய உணவுப்பொருட்கள் இறக்குமதியாளர்கள் மற்றும் வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்திய போதிலும், சதொசவிற்கு மாத்திரமே அரிசி இறக்குமதிக்கு அரசாங்கம் அனுமதி வழங்கியதாக சங்கத்தின் ஏற்பாட்டாளர் ஹேமக பெர்னாண்டோ குறிப்பிட்டார்.
இந்தியாவிலிருந்து ஒரு மெட்ரிக் தொன் அரிசியை 425 அமெரிக்க டொலருக்கு இறக்குமதி செய்ய முடியும் என அவர் நியூஸ்பெஸ்ட்டிற்கு சுட்டிக்காட்டினார்.
எவ்வாறாயினும், இந்தியாவிலிருந்து அரிசியை இறக்குமதி செய்யும் நடவடிக்கைகள் அடுத்த வாரமளவில் ஆரம்பிக்கப்படும் என கிராமிய பொருளாதார அமைச்சர் பீ.ஹரிசன் தெரிவித்தார்.
இதனால் பண்டிகைக்காலத்தில் அரிசியின் விலை குறைவடையும் என அமைச்சர் நியூஸ்பெஸ்ட்டுக்கு சுட்டிக்காட்டினார்.
எனினும், அரசாங்கம் இதுவரை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்வதற்கான கேள்வி மனுவை விடுக்கவில்லை என அத்தியாவசிய உணவுப்பொருட்கள் இறக்குமதியாளர்கள் மற்றும் வியாபாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டாளர் ஹேமக பெர்னாண்டோ கூறினார்.
இதனால் அரசாங்கம் குறிப்பிடும் வகையில், ஒரு வாரத்திற்குள் அரிசியை இறக்குமதி செய்ய முடியாது எனவும் ஹேமக பெர்னாண்டோ தெரிவித்தார்.
நாட்டில் அரிசி விலை அதிகரிக்கின்றமையால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அரிசி விலை அதிகரிப்பு தொடர்பில் பாராளுமன்றத்தில் அண்மையில் ஆளுங்கட்சியினரும் எதிர்க்கட்சியினரும் வாதப்பிரதிவாதங்களில் ஈடுபட்டனர்.
விலை அதிகரிப்பைத் தவிர்ப்பதற்கு அரிசியை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு இதன்போது சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 Comments