Advertisement

Main Ad

சதிகாரர்களின் எதிர்பார்ப்புக்களை தகர்த்தெறிந்த முஸ்லிம் காங்கிரசின் நேற்றய அதியுயர்பீட கூட்டம்.


முகம்மத் இக்பால் 
சாய்ந்தமருது 

திட்டமிட்ட சதிகாரர்களது பலத்த எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் முஸ்லிம் காங்கிரசின் அதியுயர்பீட கூட்டம் நேற்று இரவு கட்சியின் தலைவர் ரவுப் ஹக்கீம் தலைமையில் நடைபெற்றது. இது ஒரு ஜனநாயக கட்சி என்றவகையில் எந்தவொரு தீர்மானங்களும் மஷூரா அடிப்படையிலேயே மேற்கொள்ளப்படுவது வழமை.  
 
இந்த அதியுயர்பீட கூட்டத்தின் மூலம் முஸ்லிம் காங்கிரசில் ஹசனலி தலைமையில் பாரிய பிளவு ஒன்று ஏற்படும் என்றும் அப்படி ஏற்பட்டு தனித்துவம் இழந்து கட்சி சின்னாபின்னமாகும் போது ரவுப் ஹக்கீமை அகற்றிவிடலாம் என்றும் பாரிய எதிர்பார்ப்புடன் காத்திருந்தார்கள்.

கடந்த பேராளர் மாநாட்டில் செயலாளர் தெரிவுசெய்யப்பட்டதனை ஆட்சேபித்து ஹசனலி அவர்கள் தேர்தல்கள் ஆணையாளரிடம் முறைப்பாடு செய்திருந்தார். பேராளர் மாநாட்டில் தீர்மானமோ அல்லது யாப்பில் மாற்றமோ மேற்கொள்ளப்பட்டால் இன்னுமொரு பேராளர் மாநாட்டின் மூலமே அதனை திருத்தம் செய்ய முடியும். ஒரு பேராளர் மாநாடு முடிந்து இன்னுமொன்று நடாத்துவதென்றால் பதினெட்டு மாதங்கள் செல்ல வேண்டும் என்பதெல்லாம் ஹசனலிக்கு தெரியாத விடயமல்ல.

தேர்தல் ஆணையாளருடன் தொடர்புகளை பேண புதிய செயலாளர் ஒருவர் நியமிக்கப்பட்டது சரியா அல்லது பிழையா என்று விவாதிப்பதைவிட, இந்த யாப்பு திருத்தத்துக்கு எந்தவித ஆட்சேபனைகளையும் கட்டாய அதியுயர்பீட கூட்டத்தில் ஹசனலியினால் தெரிவிக்கபடவில்லை. அதாவது ஹசனலியின் சம்மதத்துடனையே யாப்பில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.

அவ்வாறு நடைபெற்று பல மாதங்கள் கடந்தபின்புதான் அவர் தேர்தல்கள் ஆணையாளரிடம் முறையிட்டுள்ளார். அதாவது எம்.எஸ்.தௌபீக் அவர்களுக்கு தேசியப்பட்டியல் வழங்கப்பட்டதன் பின்பே இந்த முறைப்பாடு செய்யப்பட்டது. அத்துடன் இந்த பிரச்சினையை சாட்டாக வைத்து, முஸ்லிம் காங்கிரசினை அழிக்க நினைக்கும் சக்தி ஒன்று ஹசனலி அவர்களை வழிநடாத்துகின்றது என்பதனை புரிந்துக்கொள்ள கூடியதாக இருக்கின்றது.
 
ஹசனலியினால் தேர்தல்கள் ஆணையாளரிடம் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய கடந்த 16.11.2௦16 ஆம் திகதி தேர்தல்கள் செயலகத்திலிருந்து விளக்கம் கோரி முஸ்லிம் காங்கிரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டது. அந்த கடிதத்துக்கு கடந்த 3௦.11.2௦16 ஆம் திகதி பதில் அனுப்பி வைக்கப்பட்டது.

இதற்கிடையில் தேர்தல்கள் ஆணையாளரிடமிருந்து கடிதம் கிடைப்பதற்கு முன்பே வடமேல் மாகாணசபை உறுப்பினர் நியாஸ் அவர்களிடம் பாராளுமன்ற வளாகத்தில்  வைத்து முஸ்லிம் அமைச்சர் ஒருவர் இப்படி ஒரு கடிதம் வர இருப்பதாகவும், உங்களது கட்சியின் சின்னம் பறிப்பட இருப்பதாகவும் முன்கூட்டியே கூறிய விடயத்தினை நேற்றய அதியுயர் பீட கூட்டத்தில் விபரமாக நியாஸ் அவர்கள் விபரித்திருந்தார். இதன்பின்புதான் இந்த கட்சியை ஹசனலி மூலமாக அழிக்கும் சதிவலையில் குறிப்பிட்ட அமைச்சர் கடும் பிரயத்தனத்துடன் செயல்படுகின்றார் அன்பது ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.  

இங்கே தேர்தல்கள் ஆணையாளரிடமிருந்து கடிதம் வந்தது முதல் அதற்கு பதில் கடிதம் அனுப்பியது வரைக்குமான அனைத்து விடயங்களும் முகவும் இரகசியமாகவே பேணப்பட்டு வந்தது. இதனை அறியாத ஹசனலி அவர்கள் தேர்தல்கள் ஆணையாளரிடம் நேரடியாக சென்றுள்ளார். ஆனால் தேர்தல் ஆணையாளர் நடந்த விடயத்தினை கூறியதுடன் அனுப்பப்பட்ட கடிதத்தின் பிரதி ஒன்றினையும் ஹசனலியிடம் வழங்கியுள்ளார்.

அதன்பின்புதான் பாரிய சர்ச்சை ஒன்று ஏற்ப்பட்டதுபோல் ஊடகங்களில் செய்தி வந்தது. அதில் 15.12.2௦16 ஆம் திகதிக்கு முன்பு யார் செயலாளர் என்று கூறும்படியும், இல்லாதுவிட்டால் கட்சியின் சின்னம் பறிக்கப்பட்டு கட்சி முடக்கப்பட்டுவிடும் என்றும் தேர்தல்கள் ஆணையாளர் அறிவித்ததாக மக்களை குழப்பும் வகையில் ஊடகங்களில் செய்தி பரப்பப்பட்டது.    

இந்த பிரச்சினையை சுமூகமாக தீர்த்துவைக்கும் நோக்கில் நாளை 16. 12. 2௦16 ஆம் திகதி தேர்தல்கள் ஆணையாளரை சந்திக்கும்படி விடுக்கப்பட்ட அழைப்புக்கு செல்ல முன்பு, ஹசனலி அவர்களுடன் ஓர் இணக்கப்பாட்டுக்கு வர வேண்டும் என்றும், அதற்காக இன்று தலைவரும், ஹசனலி அவர்களும் நேரடியாக சந்திக்க வேண்டும் என்றும், உடன்பாடு காணப்பட்டால் தலைவருடன் ஹசனலியும், மன்சூர் ஏ காதர் அவர்களும் ஆணையாளரை சந்திக்க செல்வது.  உடன்பாடு கானத்தவறினால் தலைவருடன் மன்சூர் ஏ காதர் அவர்கள் மட்டுமே தேர்தல்கள் ஆணையாளரை சந்திப்பார்கள் என்றும் நேற்றைய அதியுயர் பீட கூட்டத்தில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

அதியுயர்பீட கூட்டத்தில் எதுவும் பேசாது நல்லபிள்ளை போன்று அமைதியாக இருந்த பசீர் சேகுதாவூத் அவர்கள் இந்த தலைவர் - ஹசனலி உடன்பாட்டுக்கு சம்மதிப்பாரா என்பதுதான் கேள்வியாகும். ஏனென்றால் முன்பு ஒருமுறை ஹசனலி தலைவரை சந்தித்து உடன்பாடு கண்டதன் பின்பு மீண்டும் தலைவரிடம் பல நிபந்தனைகளை விதித்திருந்தார்.

எது எப்படி இருப்பினும் இப்படி ஒரு சுமூகமான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது வெளி சக்திகளுக்கு பலத்த ஏமாற்றத்தினையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இத்துடன் முஸ்லிம் காங்கிரஸ் அழிந்துவிட்டது என்றே எதிர்பார்த்தார்கள். ஆனாலும் முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ஒரு சட்ட முதுமாணி என்பது சட்டம் படியாத அரசியல்வாதிகளுக்கு அடிக்கடி மறந்துபோவதுதான் கவலையான விடயமாகும்.
  

Post a Comment

0 Comments