-மருதமுனை மருதூர்கனி பொது நூலகத்தில் வழிகாட்டல் செயலமர்வு-
( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )
உள்ளுராட்சி மாகாண சபைகள் அனுசரனையுடனும், அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் நிதியுதவியுடனும் ஆசிய மன்றம் உள்ளுராட்சி மன்றங்களில் நடைமுறைப்படுத்தி வரும் “உள்ளுர் பொருளாதார ஆட்சி செயற்திட்டத்திற்கு” அமைவாக கல்முனை மாநகரசபையின் நிதிப்பிரிவு உத்தியோகத்தர்களுக்கு ‘வருமான முகாமைத்துவம் தொடர்பான’ கருத்தரங்கும், செயலமர்வும் நேற்று மருதமுனை மருதூர்கனி பொது நூலக சமூக வள நிலையத்தில் இடம் பெற்றது.
ஆசியா மன்றத்தின் கிழக்கு மாகாண நிகழ்ச்சித் திட்ட அதிகாரி எம்.ஐ.எம்.வலீத் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுகளில் கல்முனை மாநகர சபை ஆணையாளர் ஜே.லியாகத் அலி, பிரதான கணக்காளர் எச்.எம்.எம்.றசீட், பொறியியலாளர் எஸ்.சரவாணந்தம் உள்ளிட்ட உயரதிகாரிகள், நிதிப்பிரிவு பொறுப்பு உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு, பயன்பெற்றனர்.
கல்முனை மாநகர சபையினது வருமானத்தை எவ்வாறு அதிகரிப்பது? பொது மக்களது எதிர்ப்பைச் சம்பாதித்துக் கொள்ளாது சோலை வரிகளை எவ்வாறு அறவிடுவது? இறைச்சிக்கடை, பொதுச் சந்தையிலுள்ள கடைகளின் வருமானங்களை எவ்வாறு அதிகரிக்கச் செய்தல்? அதன் மூலம் எவ்வாறு மாநகர சபைக்கான மாதாந்த வாடகைகளைச் சிறப்பாக அறவீடு செய்து, சபையின் வருமானத்தைக் கடந்த காலங்களை விடஅதிகரிக்கலாம் போன்ற பயனுள்ள விடயங்கள் விலாவாரியாக ஆராயப்பட்டன.
இறுதியில் ஆசிய மன்றத்தின் வழிகாட்டலில் கல்முனை மாநகர சபையில் 2016 ஜனவரி முதல், முதன் முறையாக ஏற்படுத்தப்பட்டுள்ள “உள்ளக கணக்காய்வுப் பிரிவின்” செயற்பாடுகளை மேம்படுத்துவதற்காக கணனி உபகரணங்கள் சிலவும் ஆசியா மன்றத்தின் கிழக்கு மாகாண நிகழ்ச்சித் திட்ட அதிகாரி எம்.ஐ.எம்.வலீத்தினால் கல்முனை மாநகர சபை ஆணையாளர் லியாகத் அலியிடம் வழங்கி வைக்கப் பட்டது.


0 Comments