Advertisement

Main Ad

கல்முனையில் இருந்தது பெருமானார் நபி (ஸல்) அன்னவர்களின் புனிதம் நிறைந்த திரு முடிதானா விமர்சிப்போருக்கு தகுந்த பதில்..

-யு.எல்.முஹம்மது மனாஸ். யாழ் பல்கலைக்கழகம்-

கல்முனையில் கடந்த  13,14 ஆம் திகதிகளில் கல்முனை ஸுன்னத் வல் ஜமாஅத் உலமா சபையின் ஏற்பாட்டில் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களின் புனிதம் நிறைந்த திரு முடி மக்கள் தரிசனத்துக்காக வைக்கப்பட்டு பல்லாயிரக்கனக்கானோர் பெருமானாரின் திரு முடி கண்டு ஆனந்தம் பெற்ற நிகழ்வை இன்று சிலரால் சமூக வலைத்தளங்களிலும் இணையதளங்களிலும் விமர்சிக்கப்பட்டுவருகின்றது.
பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களின் திரு முடியில் பரக்கத் உண்டா? அந்த முடி பாதுகாக்கப்பட்டு வருவதாக சொல்லப்படுவதற்கு ஆதாரம் உண்டா  என்ற கேள்விகளுக்கு இக்கட்டுரை விடையாய் அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.


பெருமானார் ஸல்லல்லாஹு அலஹிவஸல்லம் அன்னவர்களின் திரு முடி அவர்களாளேயே ஸஹாபாப்பெருமக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டிருக்கிறது என்பதற்கு பின்வரும் செய்திகள் சான்றாக அமைந்திருக்கின்றன.

ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களுக்கு நாவிதர் முடி வெட்டிக்கொண்டிருந்த சமையம் அந்த முடிகள் கீழே சிந்திவிடாமல் தங்கள் கைகளில் கிடைக்க வேண்டும் என்பதில் ஸஹாபாக்கள் சிரத்தை எடுத்துக்கொண்டிருந்ததை நான் கண்ணுற்றேன் என்பதாக அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அன்னவர்கள் சொன்ன செய்தி முஸ்லிம் கிரந்தத்திலே பதிவாகியுள்ளது.

ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (ஹஜ்ஜின் போது) மினாவில் கல்லெறிந்து விட்டு தம் இருப்பிடம் வந்து ஒட்டகை அறுத்த பின்னர், நாவிதரை அழைத்து தமது சிரசின் வலப்பக்கத்து முடியினை சிரைத்தெடுக்கச் கூறினார்கள்.

அபூதல்ஹா அன்சாரி ரழியல்லாஹு அன்ஹு என்ற தோழரை அழைத்து சிரைத்த அம்முடியைக் கொடுத்தனர். பின் இடது பக்கத்தையும் மழித்து அந்த முடியையும் அபூதல்ஹா ரழியல்லாஹு அன்ஹு அவர்களிடம் கொடுத்து மக்களுக்கு அவற்றைப் பங்கிட்டுக் கொடுக்குமாறு சொன்னார்கள்
அறிவிப்பாளர்: அனஸ் ரலியல்லாஹு அன்ஹு
(நூல்: புகாரி, முஸ்லிம்)

மேற்படி செய்திகள் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் தனது முடியை ஸஹாபாக்களுக்கு பங்கிட்டார்கள் என்பதை மிகத் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றது.

நாயகத்தினுடைய முடி நம்முடைய முடியை போன்று சாதாரணமான அற்பமான ஒன்றாக இருந்தால் ஏன் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் தங்கள் முடிகளை பங்கிட வேண்டும்? ஏன் ஸஹாபாக்கள் அந்த முடிகளை பெறுவதற்காக முண்டியடிக்க வேண்டும்?

எனவே நபிகளார் தன்னுடைய முடியின் மூலம் மக்கள் நன்மையடைய வேண்டும் என்ற நோக்கில்தால் தன்னுடைய புனிதமிக்க முடிகளை பகிர்ந்தளித்திருக்கிறார்கள் என்பது சிந்திப்போருக்கு மறைவான ஒன்றல்ல.
மேலும் நபிகளாருடைய திரு முடிகளை ஸஹாபாக்கள் எவ்வாறு பாதுகாத்தார்கள்,எவ்வாறு கண்ணியப்படுத்தினார்கள்,எவ்வாறு அதன் மூலம் நன்மை பெற்றார்கள் என்பதை அடுத்து நோக்குவோம்.

நான் அபீதாவிடம் சொன்னேன், எங்களிடம் அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மூலமாகவோ, அவர்களது குடும்பத்தினர் மூலமாகவோ பெற்ற அண்ணலாரின் திருமுடி ஒன்று உள்ளது. உலகில் உள்ள அனைத்துப் பொருளையும் விட இத்திருமுடி என்னிடம் இருப்பது மேலானது' என்று இப்னு ஸிரீன் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(நூல்: புகாரி)

 உம்முஸல்மா ரலியல்லாஹுஅன்ஹா அவர்களிடம் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் திருமுடியொன்று இருந்தது. மக்கள் அதன் மூலம் நோயிலிருந்து சுகம் பெறுகின்றனர். சில நேரங்களில் தண்ணீர் பாத்திரத்தில் அத்திருமுடியை முக்கி எடுத்து அந்நீரைப் பருகுவர்.
(புகாரி)

 உமர் இப்னு அப்துல் அஜீஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் அண்ணலாரின் இரு காலுறைகள், ஒரு கம்பு, ஒரு வாளுறை இருந்தன. அவற்றை அவர்கள் மிகக் கண்ணியத்தோடு பாதுகாத்து அவற்றை தினமும் பார்வையிடவும் செய்வார்கள்.
சிறப்பு விருந்தினர்கள் யாராவது வருகை தரும் போது 'யார் மூலம் உங்களை கண்ணியப்படுத்தினானோ அவரின் அனந்தப் பொருட்கள் இவை'என்று கூறுவார்கள்.
(றூஹுல் ஈமான்)

மேற்படி ஹதீதுகள்.செய்திகளில் இருந்து நன்மக்கள் நாயகத்தினுடைய திருமுடியை எந்த அளவுக்கு கண்ணியப்படுத்தியிருக்கிறார்கள் என்பதையும் எவ்வாறு அந்த முடிகளின் மூலம் நன்மைகளை பெற்றிருக்கின்றனர் என்பதையும் நாம் புரிந்துகொள்ள முடியும்.

இன்று ஒரு சிலர் நாயகத்தின் திரு முடியில் பரக்கத் இல்லை என்றும் இன்னும் சிலர் இது றஸூலுல்லாஹ்வினுடைய முடி என்பதற்கு ஆதாரம் இல்லை என்றும் தனது அறியாமையை வெளிப்படுத்திவருகின்றனர்.

நபிகளார் தன்னுடைய திரு முடியை மக்கள் மத்தியில் பங்கிட்டார்கள் என்பதையும் ஸஹபாக்களும் தாபியீன்களும் அந்த முடிகளை எவ்வாறு கண்ணியப்படுத்தி அதன் மூலம் பிரயோசனம் பெற்றனர் என்பதையும் மேலே சொல்லப்பட்ட பல ஆதாரங்கள் உறுதிப்படுத்துகின்றன.

இன்று சிலர் இது நபிகளாரின் முடி என்று காபன் சோதனை செய்து உறுதிப்படுத்துமாறு கோஷம் எழுப்புகின்றனர். ஆனால் இந்த கோஷம் இஸ்லாமிய அடிப்படையில் ஏற்கத்தக்க ஒன்றல்ல.எதையும் கண்டு பரிசோதித்துத்தான் ஈமான் கொள்ள வேண்டும் என்கின்ற போக்கு இஸ்லாத்துக்கு வெளியில் நம்மை தள்ளிவிடும்.இஸ்லாமிய மார்க்கம் மறைமுக நம்பிக்கையில்தான் தனது அஸ்திவாரத்தை அமைத்திருக்கின்றது. 

நபிகளார் நொடிப்பொழுதில் மிஃராஜ் பயணம் சென்று திரும்பிய செய்தியை அவர்கள் வெளிப்படுத்தியவுடன் அபூபக்கர் ரழியல்லாஹு அன்ஹு அன்னவர்கள் தனது அறிவுக்கு வேலை கொடுக்காமல் ஏற்றுக்கொண்டார்கள்.  அதனால்தான் அவர்கள் சித்தீக் என்ற பெயரால் இன்றுவரை போற்றப்படுகிறார்கள்.ஆனால் அறிவுக்கு வேலை கொடுத்தோர் நாயகத்தின் மிஃராஜை பொய்ப்பித்து இஸ்லாமிய வட்டத்தைவிட்டு வெளியேறி நரகின் எரிகொள்ளியாயினர்.

மேலும் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களுடைய திருமுடிகளை இன்று பாதுகாத்துவருவோர் அதற்குரிய ஸனதையும் கொண்டிருக்கின்றனர் என்ற தகவலையும் நாம் கவனத்திற்கொள்ள வேண்டும்.

நாயகத்தினுடைய திருமுடி பிற்காலங்களில் பாதுகாக்கப்பட்டு வந்ததற்கான ஏராளமான வரலாற்று சான்றுகளை பல வரலாற்றுத்தொகுப்புக்கள் நமக்கு உறுதிசெய்கின்றன.

நாயகத்தினுடைய திருமுடிக்கு பரக்கத் உண்டென்ற செய்தியை ஆதாரபூர்வமான செய்திகளில் இருந்து புரிந்து கொண்ட நாம்,முஸ்லிம்களால் நாயகத்தினுடைய திருமுடி காண்பிக்கப்படுபோது அதனை தரிசித்து கண்ணியப்படுத்துவதனால் அல்லாஹ் ஒருபோதும் நம்மை குறைபிடிக்கமாட்டான்.

எனவே இதனை உணர்ந்தவர்களாக நாயகத்தினிடைய திரு முடியை முடியுமானவரை கண்ணியத்துடனும் மரியாதையுடனும் தரிசிப்போம்.இது நாயகத்தினுடைய முடிதானா என சந்தேகம் கொள்வோர் குறைந்தபட்சம் அருவெறுக்கத்தக்க விமர்சனங்களையாவது தவிர்த்துக்கொள்வது நல்லது.உங்களது ஊகங்களை தாண்டி உண்மையில் அது நாயகத்தினுடைய முடிதான் என்றிருக்குமானால் உங்கள் நிலையை சிந்தனை செய்து பாருங்கள்! நாளை மறுமையில் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களை எந்த முகத்தோடு நோக்கப்போகிறோம் என்பதனையும் ஒரு கணம் சிந்தித்து ஈமானோடு நடந்துகொள்வதே ஏற்றமாகும்.

U.L.Mohamed Manas  98,KKP Road, Kalmunai03 0754282088

Post a Comment

0 Comments