Advertisement

Main Ad

மலையக தமிழ் பாடசாலைகளுக்கு இதுவரை நியமனம் பெற்றுள்ள 200க்கும் மேற்பட்ட உதவி ஆசிரியர்கள் விலகி சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது

(க.கிஷாந்தன்)

மலையக தமிழ் பாடசாலைகளுக்கு இதுவரை நியமனம் பெற்றுள்ள 200க்கும் மேற்பட்ட உதவி ஆசிரியர்கள் விலகி சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது. இவ்வாசிரியர்களுக்கான முறையான பயிற்சி மற்றும் கொடுப்பனவுகள் சரியாக அமையாத பட்சத்தில் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. நான் அமைச்சராக இருந்தால் இவ்வாறான நிலைக்கு இவர்களை தள்ளிவிட்டுருக்க மாட்டேன் என நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்.


தலவாக்கலை சென்கிளயார் தமிழ் வித்தியாலயத்தில் இடம்பெற்ற வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி பரிசளிப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்..
    
மலையகத்தின் கல்வி வளர்ச்சிக்கு வித்திட்டவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் ஐயா தான். இது இங்குள்ள பெரியோர்களுக்கு நன்கு தெரியும். கல்வி அபிவிருத்தியில் நாம் ஆரம்ப காலத்தில் எவ்வாறாக இருந்தோம். இப்போது எந்தளவு முன்னேற்றம் அடைந்துள்ளோம் என்பதை பெரியோர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்.
    
இன்றைய கல்வி வளர்ச்சியுடன் எதிர்காலத்தில் நமது சமூகம் மேலோங்கி சென்றிட அதிபர்களும், ஆசிரியர்களும் இன்னும் ஆரோக்கியத்துடன் செயலாற்ற வேண்டும்.

எம்மை பொருத்தவரை மலையகத்தில் தரம் உயர்த்தப்பட்ட பாடசாலை தரம் குறைவான பாடசாலை என்று இல்லை அனைத்து பாடசாலைகளும் ஒன்று தான் வளங்கள் சரியாக அமையும் பட்சத்தில் அங்கு கல்வியும் உயர்வடையும், இதற்கான நடவடிக்கைகள் மத்திய மாகாண அமைச்சர் எம். ரமேஸ்வரன் மூலமாக மேற்கொள்ளப்படும்.

இப்பொழுது மலையக தமிழ் பாடசாலைகளுக்கு இரண்டு ஏக்கர் காணி மேலதிகமாக கொடுக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகின்றது. இந் நிலையில் சென்கிளயார் பாடசாலைக்கும் இக்காணி வழங்குவதில் ஏதேனும் பிரச்சினைகள் இருப்பின் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கும்.
    
அத்தோடு ஆசிரியர்கள், அதிபர்கள் நேரத்துடன் வருகை தந்து மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கையை முன்னெடுக்கும் பட்சத்தில் மலையக தமிழ் மாணவர்கள் கல்வியில் சிறந்த பெறுபேறுகளை அடைய கூடுதலான வாய்ப்புள்ளதாக அவர் தனது உரையில் மேலும் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments