இக்கிராமத்தில் வாசிக்கின்ற ஒவ்வொருவரும் இங்கு கடமையாற்றும் வைத்தியரையும், மருந்தகத்தையும் பாதுகாக்கவேண்டும். இது இங்குள்ளவர்களின் மீதுள்ள பொறுப்பும் கடமைகளாகும் என கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் கூறினார்.
ஆலம்குளம் ஆரம்ப வைத்திய பராமரிப்பு பிரிவு மருந்தகத்க்கு மிக அத்தியவசியமாக தேவைப்படுகின்ற வைத்திய உபகரணங்களை கையளிக்கும் வைபவம் நேற்று மாலை (07) வைத்தியர் எம்.ஏ.பரஹானா தலைமையில் இடம்பெற்றபோது அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு தொர்ந்தும் உரையாற்றுகையில்,
அட்டாளைச்சேனை பிரதேசத்தில் அரசியல் அதிகாரம் தொடர்ந்து இருந்துகொண்டு வருகின்ற காரணத்தினால் இப்பிரதேசத்திலுள்ள மக்களுக்கு எந்த குறைபாடுகளும் வராமல் பாதுகாக்கப்பட்டு வருகின்றீர்கள் என்பதை நீங்கள் ஒவ்வொருவரும் உணர்ந்துகொண்டு செயலாற்றவேண்டும். இதே மாதிரியான பல கிராமங்கள் இன்னும் அபிவிருத்திகளை காணாமலும் இதுபோன்ற மத்திய மருந்தகமும் இல்லாமலும் பல கஷ்டங்களை எதிர்கொண்டு வருகின்றார்கள். இது உங்களுக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய வரப்பிரசாதம் என்றுதான் நான் கூறுவேன்.
அதுமாத்திரமல்லாமல் இக்கிராம மக்களுக்காக ஆயுள்வேத வைத்தியசாலை ஒன்றும் இங்கு அமைக்கப்பட்டு ஆயுள்வேத வைத்திய சிகிச்சைகளும் இடம்பெற்று வருகின்றன. அந்தளவு இங்கு வைத்திய சிகிச்சைகள் இடம்பெற்று வருகின்றது. இங்கு கடமையாற்ற வருகின்ற வைத்தியர்களையும், மருந்தகத்தையும் பாதுகாத்துக்கொள்ளவேண்டிய கட்டாயக் கடமையுள்ளவர்களாக இக்கிராம மக்கள் ஒவ்வொருவரும் முன்வந்து செயலாற்றவேண்டும். இது உங்களுக்கான சொத்து, இதை பாதுகாக்க தவறினால் நீங்கள் நஷ்டவாளிகள் என்றுதான் நான் கூறுவேன் என்றார்.
ஆலம்குளம் ஆரம்ப வைத்திய பராமரிப்பு பிரிவு மருந்தகத்தின் குறைபாடுகளை நிவர்த்தி செய்யக்கோரியும், அங்குள்ள நிலைமைகளை நேரில்வந்து பார்வையிடவேண்டும் என்ற கோரிக்கையை ஆலம்குளம் பிரதேச வாசிகள் விடுத்த வேண்டுகோளுக்கமைவாகவே இந்த விஜயம் இடம்பெற்றது.
இந்த விஜயத்தில், சுகாதார அமைச்சரின் மக்கள் தொடர்பாடல் அதிகாரி எம்.ஐ.எம்.நயீம், இணைப்பாளர் ஜெமில் காரியப்பர், கல்முனை பிராந்திய பணிப்பாளர் டாக்டர் ஏ.எல்.அலாவுதீன், கல்முனை பிராந்திய ஆயுள்வேத வைத்திய சங்கத்தின் தலைவர் டாக்டர் எம்.ஏ.நபீல், அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனிபா உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டனர்.