நுவரெலியா கிரகரி வாவியிலுள்ள நீர் வெறியேற்றப்பட்டமை வேறுயாருடைய தனிப்பட்ட தேவைக்கும் அல்ல என்று நுவரெலியா மாநகர சபை மேயர் மஹிந்த தொடம்பே கமகே தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் வெளிவரும் அனைத்து வதந்திகளையும் அவர் முற்றாக நிராகரித்துள்ளார்.
நுவரெலியா நகரில் நிர்மாணிக்கப்பட்டு வரும் முழுமையான கட்டமைப்பைக்கொண்ட வர்த்தகத் தொகுதியை மையப்படுத்தி சில ஊடகங்கள் பொய்யான பிரசாரங்களை மேற்கொண்டு வருவதாக மேயர் குற்றம் சுமத்தியுள்ளார்.
நுவரெலியா கிரகரி வாவியில் ஏற்படுகின்ற நீர்க்கசிவு தொடர்பாக மாநகர சபையின் தீர்மானத்திற்கமைய 18 இலட்சம் ரூபா செலவில் 146 வருடங்களுக்குப் பின்னர் இந்த புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
புனரமைக்கப்படாத காரணத்தினால் வாவியின் கதவுகளும், அணைக்கட்டுகளும் சிதைவடைந்து வரும் நிலை காணப்படுவதாகவும் தெரிவித்துள்ள மாநகர சபை மேயர், நீர்ப்பாசன மற்றும் நீர்வழங்கல் திணைக்களத்தின் ஊடாக இந்த புனரமைப்பு பணிகள் முடக்கிவிடப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
மேலும் வாவியில் காணப்படுகின்ற பிளாஸ்டிக் போன்ற கழிவுகள் அகற்றப்பட்டு, இம்மாத இறுதிக்குள் புனரமைப்பு பணிகள் நிறைவுறுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை வாவியிலுள்ள நீர் வெளியேற்றப்பட்டதால் அங்கு வரும் பெருந்திரளான சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்புவதாகவும், இதனால் தங்களது வியாபாரங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கிரகரி வாவிக்கு அருகிலுள்ள வர்த்தகர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
இந்த வாவியின் அணைக்கட்டுக்கள் புனரமைக்கப்பட்டு, வாவியிலுள்ள பிளாஸ்டிக் போன்ற கழிவுகள் அகற்றப்பட்டு சுத்தப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் அவர்கள் விடுத்துள்ளனர்.