சமூக உரிமைக்காகவும் தேசிய ஐக்கியத்திற்காகவும் அயராது உழைத்த மசூர் மௌலானா; கல்முனை முதல்வர் அனுதாபம்!
தமிழ் பேசும் மக்களின் உரிமைகளுக்காகவும் தேசிய ஐக்கியத்திற்காகவும் அயராது உழைத்து வந்த செனட்டர் மசூர் மௌலானா அவர்களின் மறைவு முஸ்லிம் சமூகத்திற்கு மட்டுமல்லாமல் முழு நாட்டுக்கும் பேரிழப்பாகும் என கல்முனை மாநகர முதல்வரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதிச் செயலாளர் நாயகமுமான சட்ட முதுமாணி எம்.நிஸாம் காரியப்பர் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது;
செனட்டர் மசூர் மௌலானா அவர்கள் எனது தந்தையின் மிக நெருங்கிய நண்பர் என்ற ரீதியில் எனது மாணவப் பருவத்தில் இருந்தே நான் அவர்களை நன்கறிந்திருப்பதுடன் நீண்ட கால உறவையும் பேணி வந்துள்ளேன்.
அக்காலப் பகுதியில் இருந்து அவரது மேடைப் பேச்சுகளால் கவரப்பட்டு மிகவும் ரசித்து வந்துள்ளேன். அவரது அறிவு, ஆற்றல், அனுபவங்கள் கண்டு எப்போதும் நான் வியந்து பாராட்டியுள்ளேன்.
கடைசியாக இடம்பெற்ற எமது கட்சியின் பேராளர் மாநாட்டுக்கு முன்னதான அதியுயர் பீடக் கூட்டத்தில் நடப்பாட்டுக்கான நிர்வாகத் தெரிவின்போது மசூர் மௌலானா அவர்கள் மரணப்படுக்கையில் இருந்த போதிலும் அவரை தொடர்ந்தும் அதியுயர் பீட உறுப்பினராக நியமிக்க வேண்டும் என நான் பிரேரித்ததுடன் அது ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தது.
செனட்டர் மசூர் மௌலானா அவர்கள் மறைந்த பெரும் தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களின் மிகுந்த விருப்பத்திற்குரியவராக இருந்தார். அதனால் கட்சியில் அவருக்கு முக்கிய பொறுப்புகளையும் அரசியல் உயர் பதவிகளையும் வழங்கி கௌரவித்திருந்தார்.
அத்துடன் 1997 ஆம் ஆண்டு மசூர் மௌலானாவின் 50 வருட அரசிய நிறைவு பொன் விழாவை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் ஏற்பாட்டில் தலைநகர் கொழும்பில் தனது தலைமையில் பெரும் விழா எடுத்து கொண்டாடி, அஷ்ரப் அவர்கள் கௌரவத்திருந்தார்.
பொதுவாக மசூர் மௌலானா அவர்கள் எல்லோராலும் விரும்பி நேசிக்கின்ற வசீகரத்தை கொண்ட மாமனிதராகத் திகழ்ந்ததுடன் இலங்கை வாழ் மூவின மக்களினாலும் நன்கறியப்பட்ட ஒரு தேசிய அரசியல்வாதியாக பிரகாசித்திருந்தார்.
அவரது அரசியல் வாழ்வில் பல உயர் பதவிகளை அவர் அலங்கரித்து இறுதிக் காலப் பகுதியில் எமது கல்முனை மாநகர சபையின் முதல்வராக பதவி வகித்து சிறப்பாக பணியாற்றியிருந்தார். குறிப்பாக மாநகர சபைக்கு நிதி மூலங்களைக் கண்டறிந்து கொண்டு வருவதிலும் நிர்வாகக் கட்டமைப்பை மேம்படுத்துவதிலும் அவர் அர்ப்பணிப்புடன் செயற்பட்டிருந்தார்.
மசூர் மௌலானா அவர்களது மறைவு எம் எல்லோரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது மறைவினால் துயருற்றிருக்கும் மனைவி, பிள்ளைகள் மற்றும் உறவினர்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வதுடன் அவருக்கு ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவர்க்கம் கிடைக்க எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.