Advertisement

Main Ad

நிந்தவூரில் மார்பகப் புற்று நோய்க்கான மருத்துவப் பரிசோதனையும் விளிப்புணர்வுக் கருத்தரங்கும்.


நிந்தவூர் பிரதேசத்திலுள்ள பெண்களிடத்தில் மார்பகப் புற்றுநோய் இருப்பதைக் கண்டறியும் நோக்கிலும்  இப்புற்று நோய் தொடர்பாக மக்களை விழிப்படையச் செய்யும் நோக்கிலுமான மருத்துவப் பரிசோதனையும்  விழிப்புணர்வுக் கருத்தரங்கும் நேற்று நிந்தவூர் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் இடம் பெற்றது.



பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் திருமதி.பறூஸா நக்பர் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வுகளில் சுகாதார  சுதேச மருத்துவ, ஊட்டச்சத்து பிரதியமைச்சர் எம்.சீ.பைசால் காசீம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

பிரதியமைச்சரின் இணைப்புச் செயலாளர் எம்.பாயிஸ்  மெடிறெஸ்ட் நிறுவனத் தலைவர் ஏ.எம்.ஜாபீர்  பிரமுகர்.எஸ்.அன்வர்டீன் உள்ளிட்ட பிரமுகர்கள் பலரும் இதில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இதே வேளை “50 வீதமான பெண்கள் இப்புற்று நோய் உண்டாகி  காலதாமதமான பிறகே வைத்தியத்தை நாடுகின்றனர். இதனால் அதிகமானோர் மரணத்தைத் தழுவுகின்றனர். எனவே  நோய் உண்டாக ஆரம்பிக்கும் போது அல்லது  அதற்கு முன்னர் மருத்துவம் செய்வது நன்மை தரும்” என சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர்.பறூஸா நக்பர் தெரிவித்தார். 

சுகாதார பிரதியமைச்சர் பைசால் காசீம் இங்கு கருத்துத் தெரிவிக்கையில்:- “புற்றுநோய் ஒரு கொடிய நோயாகும். இது அதிகமாகப் பெண்களின் மார்பகத்தையும், அவர்களின் கருப்பையையும் தாக்குகின்றது. இதிலிருந்து பெண்களைப் பாதுகாக்கவே இப்பரிசோதனைகளைச் செய்கின்றோம். இன்று அரசாங்கமானது ஒரு புற்று நோயாளிக்கு சுமார் 90 இலட்சம் ரூபாவைச் செலவிடுகின்றது. இவ்வளவு காலமும் இலங்கையில் ஒரே ஒரு புற்று நோய் வைத்தியசாலை மட்டுமே இருந்தது. அது மகரகமையில். தற்போது நாம்; இரண்டாவது வைத்தியசாலையாக மட்டக்களப்பில் ஒன்றைத் திறந்து வைத்துள்ளோம்” எனத் தெரிவித்தார்.



அதிகமான பெண்கள் இப்பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதோடு, பெண்கள் தமது மார்பைத் தாமே பரிசோதிப்பதற்கான சிறியரக இயந்திரமொன்றும் அறிமுகப்படுத்தப்பட்டது. இறுதியில் இவ்வுபகரணங்களில் சில பிரதியமைச்சரினால் வைத்திய அதிகாரி பறூசாவிடம் ஒப்படைக்கப்பட்டன.