நுவரெலியா மாவட்டத்தில் 10 நகரங்கள் இந்த புதிய அரசாங்கத்தால் அபிவிருத்திகள் செய்யப்பட்டு சுற்றுலா நகரங்களாக மாற்றியமைக்கப்படும் என பெருந்தோட்ட கைத்தொழில் துறை அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்தார்.
தலவாக்கலை நகரில் அமைக்கப்பட்டுள்ள புதிய பஸ் தரிப்பு நிலைய அங்குராப்பண வைபவத்தின் அதிதியாக கலந்து கொண்டு உரை நிகழ்த்துகையில் அமைச்சர் இவர் தெரிவித்தார்.
அவர் தனது உரையில் மேலும் தெரிவித்ததாவது,
இந்த நல்லாட்சி அரசாங்கம் நாட்டு மக்களுக்கு அபிவிருத்தி பணிகளை செய்வதில் முனைப்புடன் செயற்படுகின்றது. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, ஜக்கிய தேசிய கட்சி என வேறுபாடு இன்றி மக்களின் எதிர்ப்பார்ப்புகளை பூர்த்தி செய்வதே எமது இலக்காகும். 2011ம் ஆண்டு இந்த இடத்தில் சாதாரண பஸ் தரிப்பு நிலையமாக இருந்த இந்த இடம் இன்று சொர்க பூமியாக மாற்றம் பெற்று 7 கோடி ரூபா பஸ் தரிப்பு நிலையமாக 15 வருடங்களின் பின் மாற்றம் கண்டுள்ளது.
தலவாக்கலை நகரம் ஒரு சுற்றுலா நகரமாக இதனூடாக காணப்படுவதற்கு உழைத்த நகர பிதா அசோக சேபால மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சி.பி.ரத்நாயக்க ஆகியோருக்கு இந்த வேளையில் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். அதே வேளை மேல் கொத்மலை திட்டம் இன்னும் பூர்த்தி ஆகாத நிலையிலும் தலவாக்கலை நகரம் அனைவராலும் விரும்பக்கூடிய நகரமாக மாறிவருகின்றது. அதே போன்று கினிகத்ஹேன, கொட்டகலை, அட்டன் பொகவந்தலாவ போன்ற இன்னும் 10 நகரங்கள் இப் புதிய அரசாங்கத்தால் அபிவிருத்தி செய்யப்படும்.
அதே வேளை நுவரெலியா மாநகரத்தை முழுமையாக மாற்றியமைக்க அபிவிருத்தி பணிகளை முன்னெடுக்க பிரதமருடன் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இங்கே கட்சி பேதம் இன பேதம் காட்டுவதற்கு ஒரு காலமும் இடம் கொடுக்கப்போதில்லை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா எனது தந்தையின் நண்பராவார். அவரை சிறு வயது முதல் எனக்கு நன்கு தெரியும் இன வேறுபாடு இன்றி செயல்படுபவர் இவரின் ஊடாக மலையக இளைஞர்களுக்கு போக்குவரத்து அமைச்சின் மூலம் தொழில் வாய்ப்புகளை பெற்றுக்கொடுக்க வழியுறுத்தியுள்ளேன்.
இதேபோன்று அமைச்சர் திகாம்பரம் நுவரெலியா மாவட்டத்தில் அதிகப்படியான வாக்குகளை பெற்றவர் அவரின் ஊடாக தோட்ட மக்களுக்கும் கிராம மக்களுக்கும் அவரின் அமைச்சினூடாக செய்யப்படும் அபிவிருத்தி திட்டங்களுக்கு நான் எனது அமைச்சின் ஊடாக பல்வேறு உதவிகளை செய்வேன் என தெரிவித்தார்.
அத்தோடு நிமல் சிறிபால டி சில்வா கடந்த அரசாங்க கட்சியில் மீண்டும் துருபிடித்த அரசியலை செய்யாமல் புதிய அரசாங்கத்தில் அமைச்சுப்பெற்று எம் மக்களின் சேவைக்கு துணையாக நிற்பதை நான் வரவேற்கின்றேன்.
மலையகத்தில் தோட்டப்பகுதி, நகர்ப்பகுதி, கிராமப்பகுதி என வேறுபாடு பாக்காமல் இன்று தலைவிரித்தாடும் இளைஞர்களின் தொழில் பிரச்சினைக்கு தனியார் நிறுவனங்களை அமைத்தும் அமைச்சினூடாகவும் கூடிய விரைவில் தொழில் வாய்ப்புக்களை பெற்றுத்தர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றேன் என்றார்.