இது ஓர்
ஊரின் கதை.
ஊரின் கதை.
இலங்கையில்
இஸ்லாம் வளர்த்த
வேரின் கதை.
சரித்திர ஆரம்பம்
சாதாரணமாகத் தெரியும்.
ஆதாரமாகத் தெரியாது.
கஹ்தான் குடிகளின்
வரத்து
அது
காத்தான் குடியானது
என்ற கருத்து
பொதுவா இங்கே உண்டு.
ஆனால்
அதுவா உண்மை என்று
ஆன்றோர்கள் பலரும் கூடி
சான்றுகள் தரணும் தேடி.
ஒன்றரை நூற்றாண்டு
சரித்திரங்கள்.
ஓரளவு உண்டு
பத்திரங்களில்.
நாவல் ஆசிரியர்
ஜுனைதா ஷெரீப்
ஆவலுடன் எழுதிய
கதைகள்
பாவலர் அப்துல் காதிர்
பாடிய கவிதை வரிகள்
இன்னும் பலரும் எழுதிய
இனிய அரிய நூற்கள்
ஆரம்ப கால ஊரை
அழகாய்ச் சொல்லும் சீராய்.
ஓலைக் குடிசைகளும்
ஒன்றிரண்டு வீடுகளும்
ஊர் வீதிப் பக்கம்
சீராக இருக்கும்.
கடற்கரையில் இருந்து
காட்டு வீதி வரைக்கும்
அடர்ந்த காடு
படர்ந்து கிடக்கும்.
ஒழுங்காய் அமையா
ஒழுங்கைகள்தான் வீதி.
மாலை மங்கினால்
மனதுக்குள் பீதி.
பல்வேறு பெயர்களில்
கொல்கின்ற பேய்கள்
இருட்டான பின்னே
மிரட்டுமாம் வந்து.
(இன்ஷா அல்லாஹ் ஊர் தொடர்ந்து ஊரும்…..)