Advertisement

Main Ad

மஸ்கெலியா கவரவில பாக்ரோ பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத கட்டிடங்களை உடன் அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் பணிப்புரை வழங்கியுள்ளார்.

மஸ்கெலியா கவரவில பாக்ரோ பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத கட்டிடங்களை உடன் அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு நுவரெலியா மாவட்ட செயலாளருக்கு கல்வி இராஜங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் பணிப்புரை வழங்கியுள்ளார்.



மஸ்கெலியா கவரவில மற்றும் பாக்ரோ ஆகிய பகுதிகளில் 24.10.2015 அன்று மாலை ஏற்பட்ட வெள்ளதால் பாதிக்கப்பட்ட மக்களை  25.10.2015 அன்று கல்வி இராஜங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் விஜயம் செய்து நிலைமைகளை பார்வையிட்டார். இதன்போது கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்..

கடந்த சில மாதங்களாக நாடு பூராகவும் சீரற்ற காலநிலை நிலவுகின்றது. இதன் காரணமாக மலையகத்தில் பல்வேறு பகுதிகளிலும் அனர்த்தங்கள் ஏற்பட்டுள்ளது. நான் 25.10.2015 அன்று நேரடியாக சில இடங்களுக்கு விஜயம் செய்து பார்த்த பொழுது முறையான வடிகால் அமைப்பு வசதி இல்லாத காரணத்தினாலேயே சில இடங்களில் வெள்ளபெருக்கு இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பாக அங்கு உரியவர்களிடம் கலந்துரையாடிய பொழுது அவர்கள் என்னிடம் தெரிவித்த கருத்து சட்ட விரோத கட்டிடங்கள் வடிகாண்கள் ஊடாக அமைக்கப்பட்டிருப்பதன் காரணமாகவே தாங்கள் கடந்த பல வருடங்களாக இந்த பாதிப்புக்குள்ளாகுவதாகவும் இது தொடர்பாக அதிகாரிகள் உரிய நடவடிக்கைகள் எடுப்பதில்லை எனவும் சுட்டிக்காட்டினர்.

குறித்த விடயம் தொடர்பான நான் நுவரெலியா மாவட்ட செயலாளரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு குறித்த பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத கட்டிடங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பதோடு வடிகால் அமைப்பை சீராக்குவதற்கு பணிப்புரை விடுத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அத்தோடு பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகள் அமைப்பதில் தொடர்பில் அமைச்சர் திகாம்பரம் நாடு திரும்பியதும் அவருடன் கலந்துரையாடி நடவடிக்கை எடுப்பதாகவும் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு தேவையான பாடபுத்தகங்களையும், உபகரணங்களையும் வழங்குவதற்கான நடவடிக்கைகள மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.