மீரியாபெத்தை மண்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடமைப்பு அமைத்துக்கொடுக்க அடிக்கல் நாட்டியவன் நான் ஆனால் இடர் முகாமைத்துவ அமைச்சு வீடுகளை அமைப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் எனது அமைச்சுக்கு அதிகாரம் வழங்கும் பட்சத்தில் நான்கு மாதங்களில் அவர்களுக்கான வீடுகளை நான் அமைத்துக்கொடுப்பேன் என மலையக புதிய கிராம உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் பி.திகாம்பரம் தெரிவித்தார்.
தலவாக்கலை நகரில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பஸ்தரிப்பிட நிலையத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தனது உரையில் தொடர்ந்து தெரிவித்ததாவது,
எனது அமைச்சின் ஊடாக ஒரு வீட்டுக்கு 12 இலட்சம் ரூபாய் செலவு செய்து 400 வீடுகள் அமைத்து புதிய கிராமங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இந்த நல்லாட்சி அரசாங்கத்தில் மலையக மக்களுக்கு பாரிய வேலை திட்டங்கள் முன்னெடுத்து வருகின்ற நிலையில் இப்பொழுது தலவாக்கலை மக்களுக்கு வரப்பிரசாதமாக கிடைக்கப்பட்டு இருக்கின்ற இந்த பஸ் தரிப்பு நிலையத்தை எங்களுடைய பஸ் தரிப்பு நிலையம் என நினைத்து சுத்தம் பேணி பாதுகாக்க ஒவ்வொருவரும் திடசங்கட்பம் கொள்ள வேண்டும் என்றார்