Advertisement

Main Ad

மட்டு-வெல்லாவெளி -பக்கியெல்ல உப அஞ்சல் அலுவலகத்தில் பாரிய கொள்ளைச் சம்பவம்- 275 கிராம் தங்கமும்,இரண்டாயிரம் ரூபாய் பணமும் திருட்டு-படங்கள்



மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பக்கியெல்ல பிரதேசத்தில் பிரதான வீதியில் அமைந்துள்ள பக்கியெல்ல உப அஞ்சல் அலுவலகத்தில் பாரிய கொள்ளைச் சம்பவம் ஒன்று நேற்று 30 புதன்கிழமை மாலை சுமார் 4.30 –மணியில் இருந்து 5.00 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் உப அஞ்சல் அலுவலகம் திறந்து இருந்த நேரத்தில் இடம்பெற்றுள்ளதாக வெல்லாவெளி பொலிசார் தெரிவித்தனர்.

இக் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்ற நேரத்தில் உப அஞ்சல் அலுவலக (லொக்கர்) பாதுகாப்பு பெட்டி திறந்து இருந்ததாகவும்,தான் ஒரு வெளி வேலை காரணமாக வெளியில் சென்ற நேரத்தில் எனது மகளை உப அஞ்சல் அலுவலகத்தை பார்த்துக் கொள்ளுமாறு கூறிச் சென்றதாகவும் பக்கியெல்ல உப அஞ்சல் அலுவலக அதிபர் எம்.சித்திரவேல் தெரிவித்தார்.

இப் பாரிய கொள்ளைச் சம்பவவத்தில் உப அஞ்சல் அலுவலக (லொக்கர்) பாதுகாப்பு பெட்டியில் இருந்த கோயில் போரதீவு ஸ்ரீ கண்ணகி அம்மன் கோயிலுக்கு சொந்தமான 12 இலட்சத்து 25 ஐயாயிரம் ரூபாய் பெறுமதியான 275 கிராம் தங்கமும்,இரண்டாயிரம் ரூபாய் பணமும் திருடப்பட்டுள்ளதாக வெல்லாவெளி பொலிஸ் நிலையத்தின் பதில் பொலிஸ் பரிசோதகர் ஐ.பி.நிமால் தெரிவித்தார்.

குறித்த கொள்ளைச் சம்பவத்தில் சுமார் 3 பேர் வந்ததாகவும், அவர்களை தனக்கு அடையாளம் காட்ட முடியும் எனவும் பக்கியெல்ல உப அஞ்சல் அலுவலக அதிபர் எம்.சித்திரவேலின் மகள் தெரிவித்துள்ளார்.

மேற்படி கொள்ளைச் சம்பவம் தொடர்பில் பரிசோதனை செய்ய அவ் விடத்திற்கு வருகைதந்த மட்டக்களப்பு மாவட்ட   (சொகோ ) குற்ற நிகழ்வு இடப் பரிசோதனை பிரிவினால் அதன் பொறுப்பதிகாரி  பொலிஸ் பரிசோதகர் கே.ரவீந்திரன் தலைமையிலான குழு பரிசோதனையை மேற்கொண்டது.

மேலும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸ் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.