Advertisement

Main Ad

ஹஜ் கடமையின் முதல் நாள் இன்று : ஹாஜிகள் மினா செல்கின்றனர்..


“யவ்முத் தர்வியா” என்று அழைக்கப்படும் துல் ஹஜ் மாதத்தின் எட்டாம் நாளான இன்று ஹஜ் யாத்திரிகர்கள் தமது ஹஜ் கடமைகளை ஆரம்பிக்கும் நோக்கில் மினாவை நோக்கி செல்வதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
2.37 மில்லியனுக்கும் அதிகமான பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்கள் ஹஜ் கடமையை நிறைவேற்ற இம்முறை அங்கு வந்துள்ளதாக சவுதி அறிவித்துள்ளது.
மக்கா அல்-மஸ்ஜிதுல் ஹராமின் வட கிழக்கு எதிரே சுமார் எட்டு கிலோ மீட்டர் தொலைவில் மினா அமைந்துள்ளது.
ஹஜ்ஜுக்கான நிய்யத் வைத்துக் கொண்டு ழுஹர் தொழுகைக்கு முன் மினா செல்லும் யாத்திரிகர்கள், அங்கே ஃபர்லான தொழுகைகளை அதற்குரிய நேரத்தில் தொழுவார்கள். ழுஹர், அஸர், இஷா ஆகிய தொழுகைகளை மாத்திரம் சுருக்கி இரண்டிரண்டாகத் தொழுவார்கள்.
துல் ஹஜ் 9 ஆம் நாளான நாளை ஹஜ் வணக்கத்தின் முக்கிய வணக்கத்தை நிறைவேற்ற உலகம் முழுவதிலும் இருந்து வந்துள்ள ஹஜ் யாத்திரிகர்கள் அனைவரும் மக்காவிலிருந்து சுமார் 21 கி. மீ. தொலைவில் அமைந்து உள்ள அறபா மைதானத்தில் ஒன்று கூடுவர். அங்கு ழுஹர், அஸர் ஆகிய தொழுகைகளை சுருக்கி இரண்டிரண்டாக, முற்படுத்தி ழுஹருடைய நேரத்தில் தொழுவர்.
அறபாவில் பகல் பொழுதை கழித்து விட்ட பிறகு ஹஜ் யாத்திரிகர்கள் சூரியன் மறைந்ததும் அறஃபாவில் இருந்து முஸ்தலிஃபாவை நோக்கி சென்று அங்கு இரவில் தங்குவர். முஸ்தலிஃபாவை அடைந்ததும் மஃரிப், இஷா ஆகிய தொழுகைகளை சேர்த்தும், இஷாத் தொழுகையை சுருக்கி இரண்டு ரகஅத்தாகவும் தொழுவர். ஃபஜ்ர் தொழுகை வரை அங்கு தங்கி விட்டு மீண்டும் மினாவை நோக்கி ஹாஜிகள் நகர்வர்.
தொடர்ந்து “அய்யாமுத் தஷ்ரீக்” நாட்களான துல் ஹஜ் 11 , 12 , 13 ம் நாட்களிலும் ஹாஜிகள் மினாவில் தங்கி நின்று ஹஜ் வணக்கத்தின் ஏனைய கடமைகளை நிறைவேற்றுவர்.